அருள்மிகு சேக்கிழார் திருக்கோயில், குன்றத்தூர்
அருள்மிகு சேக்கிழார் திருக்கோயில், குன்றத்தூர், காஞ்சிபுரம் மாவட்டம்.
+91- 44 – 2478 0436, 93828 89430 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை திறந்திருக்கும். பிற நேரங்களில் தரிசிக்க, முன்னரே போனில் தொடர்பு கொண்டு விட்டுச் செல்லலாம்.
மூலவர் | – | சேக்கிழார் | |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | குன்றத்தூர் | |
மாவட்டம் | – | காஞ்சிபுரம் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
முற்காலத்தில் இப்பகுதியை சோழமன்னன் அனபாயன் ஆண்டு வந்தான். அவனது அரசவையில் இவ்வூரில் வசித்த சிவபக்தர் ஒருவர் அமைச்சராகப் பணியாற்றினார். அவரது மகன் அருண்மொழி இராமதேவர், குலத்தின் பெயரால் சேக்கிழார் என்றழைக்கப்பட்டார். சிறுவயதிலேயே புலமையுடன் இருந்த சேக்கிழாரை, மன்னன் தனது அமைச்சராக்கிக் கொண்டான். அவருக்கு “உத்தமசோழபல்லவர்” என்றும் சிறப்பு பெயரிட்டு அழைத்தான். திருநாகேஸ்வரம் நாகேஸ்வரரின் பக்தராக இருந்த சேக்கிழார், அக்கோயில் அமைப்பிலேயே இவ்வூரிலும் ஒரு கோயில் கட்டினார்.
ஒருசமயம் சிவபக்தனான மன்னன், சமண மதத்தின் மீது நாட்டம் கொண்டு, சமண மத நூல்களை படித்து வந்தான். மன்னனை திருத்த எண்ணிய சேக்கிழார் அவனிடம், சிவன் அடியவர்களுக்கு காட்சி தந்த பெருமைகளைச் சொல்லும் நூல்களை படிக்கும்படி அறிவுறுத்தினார். சேக்கிழாரின் சொல் கேட்ட மன்னன், தனக்கு சிவனின் பெருமைகளை கூறும்படி கேட்டுக்கொண்டார். அவரிடம் சிவனருள் பெற்ற நாயன்மார்களின் வரலாறைக் கூறினார். மன்னன் மிகவும் மகிழ்ந்தான்.
நாயன்மார்களின் வரலாறை, காவியமாக எழுதும்படி சேக்கிழாரிடம் வேண்டிக் கேட்டான். அவரும் சம்மதிக்கவே பொன், பொருள் கொடுத்து சிதம்பரத்திற்கு அனுப்பி வைத்தான். சேக்கிழார் நடராஜரை வழிபட, அசரீரியாக “உலகெலாம்” என்று சிவன் அடியெடுத்துக் கொடுத்தார். அதை வைத்து, “பெரியபுராணம்” என்னும் காவியத்தை இயற்றினார் சேக்கிழார். அதன்பின் சிதம்பரம் வந்த அனபாய சோழன், பெரியபுராணத்தை அரங்கேற்றம் செய்தான்.
இக்கோயிலில் விநாயகர், உமாபதி சிவாச்சாரியார், பெரிய புராணம் அரங்கேற்றம் செய்ய உதவிய அனபாய சோழ மன்னன் ஆகியோருக்கு சிலைகள் இருக்கிறது. இது சேக்கிழார் அவதார தலம் ஆகும். சிவனருள் பெற்று முக்தியடைந்தவர்கள் அறுபத்து மூன்று நாயன்மார்கள். இவர்களது வாழ்க்கையை திருத்தொண்டர்புராணம் என்றழைக்கப்படும் “பெரியபுராணம்” என்னும் காப்பியமாகத் அளித்தவர் சேக்கிழார். இவரது பிறந்த ஊரான இங்கு இவருக்கு தனிக்கோயில் உள்ளது.
அளவில் சிறிய இக்கோயிலில் சேக்கிழார் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். கைகளில் அட்சர மாலை, பெரியபுராணம் வைத்திருக்கிறார். இவரது முக்தி நட்சத்திரமாகிய பூசத்தன்று, விசேஷ அபிஷேக, பூஜை செய்யப்படுகிறது. வருடத்தில் மாசி மாதம் 17ம் தேதியிலிருந்து 21ம் தேதி வரையில் 5 நாட்கள் சேக்கிழார் மீது, சூரிய ஒளி விழுவது சிறப்பு.
திருவிழா:
வைகாசியில் குருபூஜை. வைகாசி பூசத்தில் சேக்கிழார் குருபூஜை 11 நாட்கள் நடக்கிறது. குருபூஜை விழாவின் மூன்றாம் நாளில் இவர் சோழ மன்னனுக்கு மந்திரியாக பொறுப்பேற்று மந்திரி அலங்காரத்தில் புறப்பாடாகிறார். சேக்கிழார் கட்டிய திருநாகேஸ்வரர் கோயில், இங்கிருந்து சற்று தூரத்தில் இருக்கிறது.
விழாவின் நான்காம் நாளில், சேக்கிழார் இத்தலத்திற்கு எழுந்தருளி சிவபூஜை செய்கிறார். ஆறாம் நாளில் பெரிய புராணம் இயற்றிய வைபவமும், பின்பு சேக்கிழார் நடராஜருடன் சேர்ந்து வீதியுலா செல்லும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
எட்டாம் நாளில் பெரியபுராணம் அரங்கேற்றமும், சேக்கிழாருக்கு குன்றத்தூர் முருகன் காட்சி தரும் வைபவமும் நடக்கிறது. அன்று முருகனுடன் சேக்கிழார் புறப்பாடாகிறார். பத்தாம் நாளில் சேக்கிழார், சிவனுடன் ஐக்கியமான வைபவம் நடக்கிறது. இவ்விழா இங்கு மிகவும் பிரசித்தி பெற்ற விழாவாகும்.
வேண்டுகோள்:
குழந்தைகள் கல்வியில் சிறந்து திகழ இங்கு வேண்டிக் கொள்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
தங்களது கோரிக்கை நிறைவேறியவுடன் இத்தலத்தில் நெய் தீபம் ஏற்றுகிறார்கள்.
Leave a Reply