அருள்மிகு நல்லாண்டவர் திருக்கோயில், மணப்பாறை

அருள்மிகு நல்லாண்டவர் திருக்கோயில், மணப்பாறை, திருச்சி மாவட்டம்.

+91- 4332 – 267 586 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7 மணி முதல் 1 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் நல்லாண்டவர் என்ற மாமுண்டி
தல விருட்சம் காட்டு மின்னை மரம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர் மணப்பாறை
மாவட்டம் திருச்சி
மாநிலம் தமிழ்நாடு

மாயமானை இராமர், “பூண்டிய” (சாய்த்த) இடம் தான் மான்பூண்டி தலமாக விளங்குகிறது. இப்பெயர் மருவி மாமுண்டி ஆண்டவர் திருத்தலமாக விளங்குகிறது என தல வரலாறு சொன்னாலும், மான்பூண்டி வள்ளல் எனும் மாவீரர் ஒருவரின் வரலாறோடும் இத்திருக்கோயில் வரலாறு ஒப்பிடப்படுகிறது.

மந்திர ஆற்றலும், வலிமை படைத்த வீரராகவும் விளங்கியவர் மாவீரர் மாமுண்டியரசர். இவர் கருணை உள்ளத்துடன் இப்பகுதியின் தலைவராக நீதி ஆட்சி செய்ததுடன், கள்வர் கூட்டத்திலிருந்தும் மிருகங்களிடமிருந்தும் இப்பகுதி மக்களை காத்து வந்தார்.ஒரு முறை இத்தலம் அமைந்துள்ள இடத்திற்கு வடபகுதியில் உள்ள குளத்தில், பிராஹ்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராஹி, இந்திராணி, சாமுண்டி ஆகிய சப்த கன்னிமார்களும் நீராடிக் கொண்டிருந்தனர். அப்போது கயவர் கூட்டத்தை சேர்ந்த பலர் இவர்களைத் துன்புறுத்தினர். இந்த கயவர்களிடமிருந்து தங்களை காப்பாற்றும்படி கதறினர். இவர்களின் கதறலைக்கேட்ட மாமுண்டியரசர் உடனே குதிரை மீது வந்து இவர்களை காப்பாற்றினார்.

சரியான நேரத்தில் வந்து எங்களது அண்ணன் போல் காப்பாற்றினீர்கள். எனவே உங்களை நல்லண்ணன் என அழைப்பார்கள்என நன்றிப்பெருக்குடன் வணங்கினர். அன்றிலிருந்து நல்லண்ணன், நல்லாண்டவர், நல்லையா, மாமுண்டி என பல பெயர்களில் அழைக்கப்பட்டு வருகிறார். நல்லாண்டவரின் வாகனமாக யானையும், காவல் தெய்வமாக புளிகருப்பண சுவாமியும், வாகனமாக குதிரையும் உள்ளது.

பெரிய சுற்றுப்பிரகாரத்துடன் அமைந்த இத்தலத்தில் அனுமதி விநாயகர், மதுரைவீரன், பாரிகாரர், ஏழு கருப்பண்ணசாமி, ஒங்கார விநாயகர், பேச்சியம்மன், பட்டத்து யானை, நல்லாண்டவர் யானை, தெப்பக்குளத்து முருகன், ஆஞ்சநேயர் ஆகியோருக்கு தனித்தனி சன்னதி உள்ளது.

இத்தலத்தில் சப்த கன்னிமார்கள், நல்லாண்டவரின் சகோதரிகளாக அறிவிக்கப்பட்டு மூலவருக்கு அருகில் தனி சன்னதியில் வீற்றிருக்கிறார்கள். இங்கு இவர்களுக்குத்தான் முதல் பூஜை. லாட சன்னாசி என்பவர் வட தேசத்து சித்தர். தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு எந்த தொந்தரவும் கூடாது என்பதற்காக இவரை இத்தலத்திலேயே தங்கி அருளாசி வழங்கும்படி நல்லாண்டவர் வேண்டினார். அவரது விருப்பப்படி லாடம் பூட்டப்பட்ட நிலையில் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் இவருக்கு இரண்டாவது பூஜை. மூன்றாவது பூஜையையே நல்லாண்டவர் ஏற்றுக்கொள்கிறார்.

திருவிழா:

சித்திரை வருடப்பிறப்பு, ஆடி வெள்ளி, ஆவணி உறியடித்திருவிழா, புரட்டாசி சனி, விஜயதசமியில் அம்பு போடுதல், கார்த்திகை தீபம், தைப்பொங்கல், மகா சிவராத்திரி பங்குனி உத்திர திருவிழா ஆகியவை இங்கு முக்கிய திருவிழாக்கள் ஆகும்.

பிரார்த்தனை:

குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகள், உடன்பிறந்தவர்களுக்கு தொந்தரவு, கணவன் மனைவி பிரச்னை, விஷ ஜந்துக்களால் தொந்தரவு, பெண்களுக்கு மனது ரீதியாக ஏற்படும் எந்த பிரச்னையாக இருந்தாலும் இங்கு வந்து நல்லாண்டவரிடம் முறையிட்டால் அண்ணனாக இருந்து பிரச்னைகளை தீர்த்து வைப்பார் என்பது ஐதீகம்.

நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறிய உடன் நல்லாண்டவருக்கு வேஷ்டி, துண்டு மற்றும் பரிவட்டம் சாத்தி, அர்ச்சனை செய்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *