அருள்மிகு சிவானந்தேஸ்வரர் திருக்கோயில், திருப்பந்துறை
அருள்மிகு சிவானந்தேஸ்வரர் திருக்கோயில், திருப்பந்துறை, நாச்சியார் கோவில் போஸ்ட், கும்பகோணம் தாலுகா, தஞ்சாவூர் மாவட்டம்.
+91- 435-244 8138, 94436 50826 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகிலுள்ள திருப்பந்துறையில் முருகனைத் தியானக் கோலத்தில் குடுமி வைத்த நிலையில் காணலாம்.
தந்தைக்கே தெரியாத மந்திரத்தின் பொருள் உரைத்தது அவரது பெருமைக்கு சிறப்பு சேர்த்தாலும், சொல்லிக் கொடுத்ததோடு நிறுத்தியிருக்க வேண்டுமே ஒழிய, அவர்களைத் திட்டியது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல என்பதை உணர்த்தும் வகையிலான தலம் திருப்பந்துறை. இங்கு முருகன் தியானக் கோலத்தில் உள்ளார். இத்தலத்தில் திக்கு வாய் உள்ளவர்கள் வழிபட்டு நிவாரணம் பெறலாம்.
ஓம் என்ற பிரணவத்திற்கு பொருள் தெரியாமல் பிரம்மன் படைப்புத் தொழிலை செய்துகொண்டிருந்தார். இதை முருகப்பெருமான் தெரிந்துகொண்டார். படைக்கும் தொழிலை அவரிடமிருந்து பறித்துவிட்டார். சிவபெருமான் இதை கண்டித்தார். அப்படியானால் அந்த பிரணவத்திற்குரிய பொருளை சொல்லிவிட்டு என்னிடமிருந்து மீண்டும் அத்தொழிலை பெற்றுக்கொள்ளட்டும் என்றார் முருகன். இறைவனுக்கே அந்த பிரணவத்தின் பொருள் தெரியவில்லை. எனவே தந்தைக்கே பொருளை உரைத்தார் மகன். சுவாமிமலை திருத்தலத்தில் இந்நிகழ்ச்சி நடந்தது.
இதற்கு முன்னதாக பொருள் தெரியாத பிரம்மனை சிறையில் அடைத்து விட்டார் முருகன். பொருள் தெரியாமல் படைப்புத் தொழிலை ஏன் செய்கிறாய் என்றும் திட்டினார். என்னதான் இருந்தாலும், பெரியவர்களை சிறியவர்கள் திட்டலாமா? எனவே, முருகனின் வாய் ஊமையாகி விட்டது. தனக்கு மீண்டும் பேச்சு வர, திருப்பந்துறை என்ற தலத்திற்கு வந்து மீண்டும் பேச்சு கிடைக்க வேண்டும் என்பதற்காக இலிங்கம் ஸ்தாபித்து தவத்தில் ஈடுபட்டார். அந்த இலிங்கமே திருப்பந்துறை ‘சிவானந்தேஸ்வரர்‘ ஆயிற்று. சிவ வழிபாட்டுக்கு பிறகு பிறகு முருகனுக்கு பேச்சு வந்தது.
இங்கு முருகன்தான் சிறப்புக்குரியவர். சுவாமி சன்னதியின் முன்பு முருகனின் சிலை வைக்கப்பட்டுள்ளது. தண்டாயுதபாணி என அழைக்கப்படும் இவர் சின்முத்திரையுடன், கண்மூடி, நின்ற நிலையில் தியானம் செய்கிறார். அவரது காது நீளமாக வளர்ந்திருக்கிறது. தலையில் குடுமி இருக்கிறது. தலையில் குடுமியுடன் தியான நிலையில் உள்ள முருகனை வேறு எங்கும் காண இயலாது. சிலை மிகவும் பழமையானதாக உள்ளது. இக்கோயில் மிகச்சிறிய கோயில் என்பதாலும், ஊரின் ஒதுக்குப்புறமாக இருப்பதாலும் பிரபலமாகாமல் உள்ளது. கோயிலின் எதிரே மங்களதீர்த்தம் இருக்கிறது. இங்குள்ள நவக்கிரக மண்டபத்தில் சூரியன் மட்டும் தனது தேவியருடன் இருக்க, மற்ற கிரகங்கள் தனித்த நிலையில் உள்ளன.
கோயில் வாசலில் குக விநாயகரும், சாட்சி விநாயகரும் ஒரே சன்னதியில் அருள்பாலிக்கின்றனர். முருகன் சுவாமிமலையிலிருந்து தவமிருக்க வந்தபோது விநாயகர் இரட்டை வடிவெடுத்து அவருக்கு பாதுகாப்பாக வந்ததாகவும், இங்கேயே தங்கிவிட்டதாகவும் ஐதீகம்.
வழிபாடு: இத்திருத்தலத்தில் முருகனுக்கு தேனபிஷேகம் செய்வதே முக்கியமானது. திக்குவாய் உள்ளவர்கள் குறிப்பாக குழந்தைகளின் பெயரில் தேனபிஷேகம் செய்ய வேண்டும். தொடர்ந்து 45 நாட்கள் அபிஷேகம் செய்துவந்தால் திக்குவாய் மாறி நல்லமுறையில் பேசமுடியும் என்பது நம்பிக்கை.
திருவிழா: இங்கு பிரம்மோற்சவம் ஏதுமில்லை. முருகனுக்குரிய கிருத்திகை, சஷ்டி, மற்றும் சிவனுக்குரிய பிரதோஷம், சிவராத்திரி தினங்களில் சிறப்பு பூஜை நடக்கிறது.
இருப்பிடம்: கும்பகோணத்திலிருந்து நாச்சியார்கோவில் வழியாக பூந்தோட்டம் செல்லும் ரோட்டில் இவ்வூர் உள்ளது. தூரம் 20 கி.மீ. கும்பகோணத்திலிருந்து தனியார் பஸ்களும், தடம் எண் 457, 4 ஆகிய பஸ்களும் செல்கின்றன.
Leave a Reply