அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில், கந்தகோட்டம்

அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில், கந்தகோட்டம், சென்ட்ரல் ரயில்நிலையம் அருகில், சென்னை.

+91- 44 -2535 2192 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் கந்தசுவாமி
உற்சவர் முத்துக்குமாரர்
அம்மன் வள்ளி, தெய்வானை
தல விருட்சம் மகிழம்
தீர்த்தம் சரவணப் பொய்கை
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஆகமம் குமார தந்திரம்
ஊர் கந்தக்கோட்டம்
மாவட்டம் சென்னை
மாநிலம் தமிழ்நாடு

இப்பகுதியில் வசித்த சிவாச்சாரியார் ஒருவர் அருகிலுள்ள திருப்போரூர் தலத்திற்கு சென்றுவிட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அவருடன் சில ஆச்சார்யார்களும் வந்தனர். வழியில் கனத்த மழைபெய்து, வெள்ளம் பெருக்கெடுத்ததால் அவர்களால் ஊருக்கு திரும்ப முடியவில்லை. எனவே, அங்கேயே ஓர் மடத்தில் தங்கினர். அன்றிரவில் சிவாச்சாரியாரின் கனவில் காட்சிதந்த முருகன், தான் அருகிலுள்ள புற்றில் குடிகொண்டிருப்பதாகவும், தனக்கு கோயில் கட்டும்படியும் கூறியருளினார். கண்விழித்த சிவாச்சாரியார் அங்கிருந்த புற்றில் முருகன் சிலை வடிவில் இருந்ததைக் கண்டார். அச்சிலையை எடுத்துக் கொண்டு, ஊருக்கு புறப்பட்டார். வழியில் ஓரிடத்தில் சிலையை வைத்துவிட்டு சிறிதுநேரம் ஓய்வெடுத்தனர். பின் சிலையை எடுக்க முயன்றபோது முடியவில்லை. எனவே, அந்த இடத்திலேயே கோயில் கட்டினர்.

சுவாமி இவ்விடத்தில் தானாக விரும்பி நின்றவர் என்பதால் பீடம் இல்லாமல் தனித்து, தரையில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். அளவில் மிகவும் சிறிய மூர்த்தியாக உள்ள இவருக்கு இருபுறமும் வள்ளி, தெய்வானை ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் உள்ளனர். மூலவருக்கு நேரே வாயில் இல்லை. அவருக்கும், கொடிமரத்திற்கும் இடையே துளைகளுடனான சுவர் மட்டும் உள்ளது. இராஜகோபுரமும், பிரதான வாயிலும் வடக்குப்பகுதியில் உள்ளது. இங்குள்ள கோபுரம் ஐந்து நிலைகளை கொண்டது. இங்கு சர்க்கரைப்பொங்கல் நைவேத்தியம் செய்யப்படுகிறது. உற்சவர் முத்துக்குமாரர் தனிக்கொடிமரத்துடன் உள்ளார். இவர் தனது முகத்தில் புள்ளிகளுடன் மிகவும் அழகு பொருந்தியவராக காட்சி தருகிறார். விசேஷ காலங்களில் இவருக்கே பிரதான பூஜை நடத்தப்படுகிறது. இங்குள்ள விநாயகர் குளக்கரை விநாயகர். சித்திபுத்தி விநாயகர் அமர்ந்த கோலத்தில் தனிச்சன்னதியில் உள்ளார். சித்தியும், புத்தியும் ஒருகாலை மடக்கி, மற்றொரு காலை தொங்கவிட்ட கோலத்தில் காட்சி தருகின்றனர். சரவணப்பொய்கையின் கரையிலும் ஒரு விநாயகர் இருக்கிறார். இவருக்கு வலப்புறத்தில் லட்சுமிதேவியும், இடப்புறத்தில் சரஸ்வதி தேவியும் உள்ளனர். தீர்த்தத்தை நம் மீது தெளித்துக்கொண்டு ஒரே சமயத்தில் இம்மூவரையும் வணங்கினால் கல்வி சிறக்கும், செல்வம் பெருகும், ஞானம் கிடைக்கும் என்கின்றனர்.

பாடியவர்கள்:

சிதம்பரசாமி, பாம்பன் குமரகுருபரதாச சுவாமிகள், ராமலிங்க சுவாமிகள்.

திருவிழா:

தையில் 18 நாள் பிரதான திருவிழா, கந்தசஷ்டி, வைகாசி வசந்த உற்சவம், ஆடிக்கிருத்திகை, பங்குனி உத்திரம்.

பிரார்த்தனை:

தோல் நோய், மற்றும் கட்டிகளால் பாதிக்கப்பட்டவர்கள் சரவணபொய்கை தீர்த்தத்தில் வெல்லம் கரைக்கின்றனர். பால்குடம், பால்காவடி, முடிகாணிக்கை, திருக்கல்யாண உற்சவம். செவ்வாய்க்கிழமைகளில் விசேஷ பன்னீர் அபிஷேகம் நடக்கும் நேரத்தில் சுவாமியை வழிபட்டால் குடும்பம் சிறக்கும், ஐஸ்வர்யம் பெருகும் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:

பிணிகள், தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள் பசுவிற்கு பழங்கள், கீரைகள் கொடுத்து வணங்கினால் அவை நீங்கும், குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்ற அடிப்படையில், இங்கு கோமாதா பூஜை தினமும் நடத்தப்படுகிறது. வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் விசேஷ பன்னீர் அபிஷேகம் செய்யப்படுகிறது. குடும்பத்தில் பிரச்னை உள்ளவர்கள் இங்குள்ள சித்திபுத்தி விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபட்டால் அது தீரும் என நம்புகின்றனர்.

இருப்பிடம் :

சென்னை பாரிமுனை அருகிலுள்ள கந்தகோட்டத்தில் கோயில் அமைந்துள்ளது. சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து ஐந்து நிமிட நடையில் கோயிலை அடையலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *