அருள்மிகு பிரம்மசிரகண்டீசுவர் கோயில், கண்டியூர்

அருள்மிகு பிரம்மசிரகண்டீசுவர் கோயில், கண்டியூர், தஞ்சாவூர் மாவட்டம்.

+91-4362-261 100, 262 222 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 முதல் மதியம் 1 மணிவரையிலும், மாலை 4 முதல் இரவு 9 மணிவரையிலும் இறைவனை தரிசிக்கலாம்.

மூலவர் பிரம்மசிரகண்டீசுவரர் , வீரட்டேஸ்வரர், பிரமநாதர், ஆதிவில்வவனநாதர்
உற்சவர் சோமாஸ்கந்தர்
அம்மன் மங்களாம்பிகை
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் நந்தி தீர்த்தம், குட முருட்டி, தட்ச தீர்த்தம், பிரம தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருக்கண்டியூர், ஆதிவில்வாரண்யம், வீரட்டம்
ஊர் கண்டியூர்
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் திருநாவுக்கரசர், சம்பந்தர்

பிரம்மா ஒருசமயம் தான் படைத்த ஒரு பெண்ணின் மீதே ஆசை கொண்டார். அப்பெண், தன்னை பிரம்மாவிடம் இருந்து காக்கும்படி அம்பிகையிடம் முறையிட்டாள். அம்பாள், சிவனை வேண்ட, கோபம் கொண்டவர் உக்கிரமாக பைரவர் வடிவம் எடுத்துச் சென்றார். பிரம்மாவின் ஒரு தலையை மட்டும் வெட்டி விட்டார். தவறுணர்ந்த பிரம்மா, மன்னிப்பு கிடைக்க சிவனை வேண்டித் தவமிருந்தார். சிவன், அவரை மன்னித்தருளினார். பின், அவரது வேண்டுதலுக்காக இங்கே எழுந்தருளினார். பிரம்மாவின் சிரம் (தலை) கொய்தவர் என்பதால் இவர், “பிரம்மசிரகண்டீஸ்வரர்என்று பெயர் பெற்றார். அட்டவீரட்டானத் தலங்களில் முதலாவது தலம் இது. இது சப்தஸ்தான தலத்தில் ஒன்று.
இங்கு தங்கியிருந்த சதாசபர் என்ற மகரிஷி, ஒவ்வொரு பிரதோஷ நாளிலும், எத்தனை வேலை இருந்தாலும் காளகஸ்தி செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஏதேனும் ஒரு பிரேதாஷ நாளில், காளகஸ்தி செல்ல முடியாவிட்டால், தன் உயிரை விட்டுவிடுவதாகவும் சபதம் செய்திருந்தார். ஒரு பிரதோஷத்தன்று சிவன் அவரை சோதிக்க பெரும் இடியுடன் மழையை உண்டாக்கினார். இதனால் வருந்தியவர் கோயிலில் அக்னி வளர்த்து, அதனுள் குதித்து தன் உயிரை மாய்க்கச் சென்றார். அவ்வேளையில் அவருக்கு காட்சி தந்த சிவன், “தலம் எதுவானாலும் எங்கும் நானே இருக்கிறேன்என்று உணர்த்தினார். மகரிஷி உண்மை உணர்ந்தார். அறியாமை, மந்த புத்தி உள்ளவர்கள் பிரதோஷ நாளில் இங்கு சிவதரிசனம் செய்வது நல்ல பலன் தரும்.

பிரம்மாவின் தவத்திற்கு துணையாக சரசுவதியும் இங்கு வந்தாள். இதனடிப்படையில் பிரகாரத்தில் சரசுவதியுடன் பிரம்மாவிற்கு சன்னதி உள்ளது. தலையெழுத்து சரியில்லை என வருந்துவோர் பிரம்மாவிற்கும், படிப்பில் சிறப்பிடம் பெற விரும்புவோர் சரசுவதிக்கும் வெண்ணிற ஆடை அணிவித்து, தாமரை மலர் வைத்து வழிபடுகிறார்கள். பிரம்மா, நவக்கிரகங்களில் கேதுவிற்கு அதிபதி; குரு பகவானுக்கு பிரீதி தேவதையாகத் திகழ்கிறார். குரு பலன் இருந்தால்தான் திருமணம், குழந்தை பாக்கியம் கிடைக்கும். கேது பலன் நன்றாக இருந்தால் ஞானம் உண்டாகும். எனவே, இந்த பலன்கள் கிடைக்க பிரம்மா சன்னதியில் நெய் தீபமேற்றி வேண்டிக் கொள்கிறார்கள்.

இரு சாலைகளின் சந்திப்பில் கோயில் உள்ளது. ஊர் சற்றே பெரிது. மேற்கு நோக்கிய தலம். ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் காட்சி தருகிறது. கவசமிட்ட கொடிமரம், நந்தி, பலிபீடம் உள்ளன. இடப்பக்கம் தண்டபாணி சன்னிதி தனிக்கோயிலாக காட்சி தருகிறது. உள்ளே மயில் வாகனம் இல்லை. இம்மண்டபம் வெளவால் நெத்தி மண்டப அமைப்பைக் கொண்டது. சப்தஸ்தானத் திருவிழாவில் சுவாமி இங்கிருந்துதான் புறப்பட்டுச் செல்லும். உள்ளே நுழைந்தால் இடப்பக்கம் வருவது அம்பாள் சன்னிதி. தெற்கு நோக்கிய சன்னிதி. நின்ற திருக்கோலம். அபயவரதத்துடன் கூடிய நான்கு திருக்கரங்கள். வலப்பக்கம் வினாயகர். வெளியே வந்து உள்வாயிலைக் கடந்து மண்டபத்துள் வந்தால் இடப்பால் வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர் தரிசனம். அடுத்து மஹாலக்ஷ்மி சன்னிதி. எதிரில் நடராஜ சபை உள்ளது. வலமாக வரும்போது பைரவரும், விஷ்ணு துர்கை உள்ளன. துர்க்கை, பிரயோகச் சக்கரம் வைத்திருக்கிறாள். ஒரே சன்னதியில் அடுத்தடுத்து 7 விநாயகர்கள் உள்ளனர். சூரியனும், அமர்ந்த கோலத்திலுள்ள அர்த்தனாரீஸ்வரரும் காட்சிதருகின்றனர். சண்டேசர் சன்னிதி தனிக்கோயிலாகவுள்ளது. கோஷ்ட மூர்த்தங்கள் வழக்கம்போலுள்ளன.

பிரகாரத்திலிருந்து மண்டபத்துள் வந்தால் நவக்கிரகங்களுள்ளன. அருகில் துவாரபாலகருக்குப் பக்கத்தில் சாதாதப முனிவரின் உருவம் உள்ளது. நவக்கிரகங்களில் சூரியன் 2 மனைவியருடன் காட்சி தருகிறார். வழக்கமாக சிவன் கோயில்களில் துவாரபாலகர்களாக இருக்கும் சண்டி, முண்டி இங்கில்லை. இவர்களுக்குப் பதிலாக முருகப்பெருமானே இங்கு ஞானகுரு, ஸ்கந்த குருவாக துவாரபாலர்கள் இடத்தில் இருக்கிறார். தந்தைக்கு மகனே இங்கு காவலாக இருப்பதாக ஐதீகம். வணங்கி உட்சென்றால் நேரே மூலவர் தரிசனம். சற்றே உயரமான பாணம். இறைவனுக்குப் பக்கத்தில் பிரம்மன், சரசுவதி சிலாரூபங்கள் உள்ளன. பிரம்மன் நான்கு முகங்களுடன், பூ, ஜபமாலை ஏந்தி, இருகைகளும் பிரார்த்திக்கும் அமைப்பில் மிக அழகாகவுள்ளார். இறைவனை வணங்கி வெளியே வந்தல் இடப்பக்கம் பிரம்மன் சன்னிதிக்கு போகும் முன்பு, இறைவன் பிரம்மன் சிரம் கொய்வதற்காக மேற்கொண்ட வடுகரூபம் சிலாமூர்த்தமாகவுள்ளது. பிரம்மன் சன்னிதி அருகே வெளிப்பக்கமாகவுள்ளது. கல்வெட்டில் இப்பெருமான் பெயர் திருவீரட்டானத்து மகாதேவர், திருக்கண்டியூர் உடைய மகாதேவர் என குறிக்கப்பெறுகின்றது.

சிவனுக்குரிய சப்தஸ்தான தலங்களில் ஐந்தாவது தலமான இங்கு, சிவன் மேற்கு நோக்கியிருக்கிறார். மாசியில் 13, 14, 15 ஆகிய நாட்களில் மாலை வேளையில், சிவலிங்கம் மீது சூரிய ஒளி விழும். திருவையாறில் அவதரித்த நந்திதேவருக்கு, சதாசபர் தன் மகள் ஊர்மிளாவை திருமழபாடி தலத்தில் திருமணம் செய்து கொடுத்தார். இந்த விழாவின் போது, திருவையாறு ஐயாறப்பர், அம்பாள் அறம் வளர்த்தநாயகி, நந்திதேவர், ஊர்மிளா ஆகிய நால்வரும் இங்கு எழுந்தருளுவார். அப்போது, நந்திதேவருக்கு மங்கள ஸ்நான (புனிதப்படுத்தும் அபிஷேகம்) சடங்கு நடக்கும். அதன்பின், ஒரு கூடை நிறைய சாதம் வைத்து மணமகனுக்கு விருந்து கொடுப்பர்.

தேவாரப்பதிகம்:

பண்டங் கறுத்ததொர் கையுடையான் படைத்தான் தலையை உண்டங் கறுத்ததும் ஊரொடு நாடவை தானறியும் கண்டங் கறுத்த மிடறுடை யான்கண்டி யூரிருந்த தொண்டர் பிரானைக் கண்டீர் அண்டவாணர் தொழுகின்றதே.

திருநாவுக்கரசர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 12வது தலம்.

திருவிழா:

சித்திரை திருவாதிரையில் திருவிழா கொண்டாடப்படுகிறது. வைகாசியில் பதிமூன்று நாட்களுக்குப் பெருவிழா நடைபெறுகின்றது. நவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை, சிவராத்திரி.

பிரார்த்தனை:

பிரம்மகத்தி தோஷம் நீங்கவும், அழகு வேண்டியும் இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர். தவறு செய்து விட்டு வருந்துவோர், மன நிம்மதிக்காகவும், திருமண, புத்திர தோஷம் உள்ளோரும் இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள்நிறைவேறியவர்கள்றைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடைஅணிவித்து, சிறப்புபூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

வழிகாட்டி:

தஞ்சையிலிருந்து திருவையாறு செல்லும் சாலையில் உள்ள தலம். தஞ்சாவூரிலிருந்து 10 கீ மீ. திருவையாற்றிலிருந்து 3 கீ மீ தொலைவு. தஞ்சாவூரிலிருந்து திருக்காட்டுப்பள்ளி செல்லும் நகர பேருந்து இத்தலம் வழியாகச் செல்கிறது. நகரப்பேருந்துகள் நிரம்பவுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *