அருள்மிகு திருநெடுங்களநாதர் (நித்தியசுந்தரேஸ்வரர்) திருக்கோயில், திருநெடுங்களம்

அருள்மிகு திருநெடுங்களநாதர் (நித்தியசுந்தரேஸ்வரர்) திருக்கோயில், திருநெடுங்களம், திருச்சி மாவட்டம்.

+91- 431-252 0126 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் திருநெடுங்களநாதர், நித்திய சுந்தரேஸ்வரர்
அம்மன் மங்களாம்பிகை, ஒப்பிலாநாயகி
தல விருட்சம் வில்வம், கஸ்தூரி, அரளி
தீர்த்தம் அகஸ்தியர் தீர்த்தம், சுந்தர தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருநெடுங்களம்
ஊர் திருநெடுங்குளம்
மாவட்டம் திருச்சி
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் திருஞானசம்பந்தர்

சிவன் தனக்கு இடப்பாகத்தினை சக்திக்கு ஒதுக்கி கொடுத்தவர். இவருக்கு அர்த்தநாரீஸ்வரர் என்று பெயர். மற்ற கோயில்களில் மூலஸ்தானத்தில் நடுநாயகமாக விளங்கும் ஈசன், திருச்சி அருகே திருநெடுங்குளத்தில் மூலஸ்தானத்தில் சக்திக்காக தன் இடப்பாகத்தை ஒதுக்கி கொடுத்து விட்டு சற்று தள்ளி வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இங்கு சிவலிங்கம் மட்டுமே இருந்தாலும் இருவருமே இருப்பதாக ஐதீகம்.

திருநெடுங்களம்என்றால் சமவெளியில் அமைந்த பெரிய ஊர்என்று பெயர். அன்னை பார்வதி சிவனை நோக்கி இத்தலத்தில் தவம் இருந்தாள். பார்வதியின் தவத்தை மெச்சிய இறைவன் அவள் அறியாது வேறு வடிவில் வந்து தேவியை கைப்பிடிக்கிறார். கோயில் மூலஸ்தானத்தில் பார்வதி அரூபமாக உள்ளார். இதனால் மூலஸ்தானத்தின் மேல் இரண்டு கோபுரங்கள் உள்ளது. காசிக்கு அடுத்தபடியாக இங்கு மட்டும் தான் இப்படி உள்ளது. உற்சவர் சோமாஸ்கந்தரின் வலதுகை கட்டை விரல் இல்லை. காரணம் ஒரு அடியவருக்காக மாறு வேடம் கொண்டு வழக்கில் சாட்சி கூறிக் காப்பாற்றினார். இதையறிந்த அரசன் பெருமானது விரலை துண்டித்து விட்டான் என்கிறது புராணம். ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமையான இத்தலத்தில் சம்பந்தர், அருணகிரிநாதர் ஆகியோர் பாடியுள்ளனர். அகஸ்தியர் இங்கு வந்து பூஜைசெய்துள்ளார்.

கோயில் இரண்டு பிரகாரங்களுடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோயிலின் முன்னால் திருக்குளம் உள்ளது. கோயில் முதல் வாயிலில் கோபுரம் கிடையாது. இரண்டாவது நுழைவு வாயிலில் அழகிய சிற்பங்கள் கொண்ட சிறப்பான கோபுரம் உள்ளது. உள்பிரகாரத்தில் தென்கிழக்கில் சோமாஸ்கந்தர், சந்திரசேகர் சன்னதிகள் உள்ளது. தென்பிரகாரத்தில் சப்தகன்னியர்களும், தட்சிணாமூர்த்தியும், ஐயனாரும் அருள்பாலிக்கிறார்கள். கன்னி மூலையில் வலம்புரி விநாயகருக்கு தனி சன்னதி உள்ளது. மேற்கு பிரகாரத்தில் தெய்வானையுடன் முருகன் தனி சன்னதி உள்ளது. தெற்கு பக்கத்தில் உபய நாச்சியார்களுடன் வரதராஜப்பெருமாள் சன்னதியும், வடக்கில் அகஸ்தியர் சன்னதியும் உள்ளது. இதன் எதிரே அகஸ்தியர் தீர்த்தம் உள்ளது. இதில் எக்காலத்திலும் தீர்த்தம் வற்றவே வற்றாது. வெளி பிரகாரத்தில் வடகிழக்கு மூலையில் திருக்கல்யாண மண்டபமும், அம்பாள் சன்னதியும் உள்ளது. இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஆடி மாதம் 7 முதல் 12ம் தேதி வரை காலை 6.05 முதல் 6.15 வரை சூரிய ஒளி மூலவர் மீது விழுகிறது.

தேவாரப்பதிகம்:

மறையுடையாய் தோலுடையாய் வார்சடைமேல் வளரும் பிறையுடையாய் பிஞ்ஞகனே என்றுனைப்பே சினல்லால் குறையுடையார் குற்றம்ஓராய் கொள்கையினால் உயர்ந்த நிறையுடையார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே.

திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென் கரைத்தலங்களில் இது 8வது தலம்.

திருவிழா:

பிரதோஷ வழிபாடு இங்கு சிறப்பு. நடராஜருக்கு ஆறு கால பூஜை நடக்கிறது. நால்வருக்கும் அவரவர்க்குரிய திருநட்சத்திரத்தில் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. ஆடி வெள்ளியில் சிறப்பு வழிபாடும், சிறப்பு பூஜையும் செய்யப்படுகிறது.

பிரார்த்தனை:

திருமணத்தடை நீங்க, குழந்தைச் செல்வம் பெற, கல்வியில் சிறந்து விளங்க, இறைவனை வேண்டிக்கொள்ளலாம்.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *