அருள்மிகு பஞ்சமுக விநாயகர் கோயில், பிட்சாண்டார்கோயில்
அருள்மிகு பஞ்சமுக விநாயகர்_கோயில், பிட்சாண்டார்கோயில், திருச்சி மாவட்டம்
காலை மணி 9-00 முதல் 10-30 மணி வரை மாலை மணி 6-00 முதல் 7-30 மணி வரை
புராண வரலாறுகளில் விநாயகரின் வடிவங்களில் 32 வகைகள் உள்ளன. அவை ஒவ்வொன்றும், அவர் அடியார்களுக்காக எடுத்த திருமேனியின் வேறுபாட்டை விளக்குவது. எடுத்த காரியங்கள் இடையூறின்றி நிறைவேறவும், சகல கிரக தோடங்கள் நீங்கிடவும், ஹேரம்ப கணபதி என்கிற அருள்மிகு பஞ்சமுக விநாயகரைத்தான் வழிபடுகின்றனர். ஹேரம்ப என்றால் எளியவர்க்கு அருள்புரியும் நாயகன் என்ற பொருளாகும். கணபதி அவதாரங்களில் ஹேரம்ப கணபதி என்பவரே அருள் வழங்கும் கணபதியாக விளங்குகிறார் என்றும் புராணங்கள் கூறுகிறன்றன. பஞ்சமுகங்களின் தத்துவமே ஆக்கல், காத்தல், அழித்தல், அருளல், இறைத்தல் என்பவையாகும். இவ்வளவு பெருமைகள் வாய்ந்த அருள்மிகு பஞ்சமுக விநாயகரை வழிபட்டு அறம், பொருள், இன்பம், வீடுகளை பெற்று பலனடையலாம்.
திருச்சி பிட்சாண்டார்கோவில், இராசகோபால் நகரில் அய்யன் வாய்க்கால் கரையில், அருள்மிகு பஞ்சமுக விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது.
இத்திருக்கோவிலில் அருள்மிகு பஞ்சமுக விநாயகர் சுமார் 5 அடி உயரத்தில் சிம்ம வாகனத்தில் (தன் தாய் பராசக்தி மடியில் ) அமர்ந்து அருள்புரிகின்றார். இத்திருக் கோவிலில் பஞ்சமுக விநாயகருடன் பால முருகன், ஐயப்பன், தட்சணாமூர்த்தி, கஜலட்சுமி, துர்க்கை ஆகிய தெய்வங்கள் அமைந்துள்ளது.
நடைபெறும் விழாக்கள் :-
பிரதி மாதந்தோறும் வளர்பிறை சதுர்த்தி, மற்றும் சங்கடகர சதுர்த்தி அன்று அருள்மிகு பஞ்சமுக விநாயகருக்கும், கிருத்திகை அன்று பாலமுருகனுக்கும், தமிழ் வருட பிறப்பன்று ஐயப்பனுக்கு(நெய்)ம், வியாழன் அன்று தட்சணாமூர்த்திக்கும், வெள்ளிக்கிழமையில் கஜலட்சுமிக்கும், துர்கைக்கும் திருமுழுக்காட்டும் தீபாராதனைகளும் நடைபெறும். மேலும் பௌர்ணமி அன்று அருள்மிகு பஞ்சமுக விநாயகருக்கு சிறப்பு திருமுழுக்காட்டு நடைபெறும். ஆடிமாதம் மற்றும் தை மாதத்தில் கடைசி வெள்ளிக்கிழமை திருவிளக்கு பூசை நடைபெறுகிறது. விநாயகர் சதுர்த்தி விழா இரண்டு நாட்கள் விழாவாக சிறப்புடன் நடைபெற்றுவருகிறது.
பஞ்சமுக விநாயகர் வழிபாட்டின் பலன் :-
இத்திருக்கோவிலில் அருள்மிகு பஞ்சமுக விநாயகர் திருமுகங்கள் ஐந்தும் நான்கு திசைகளை நோக்கி உள்ளதால், இவரை வழிபட்டால், நான்கு திசைகளிலிருந்து நமக்கு வருகின்ற சங்கடங்கள் விலகிவிடும். ராகு, கேது தசை உள்ளவர்களும், சனி தசை உள்ளவர்களும், ஹேரம்ப கணபதியை வழிபட்டால், தோடங்கள் விலகும் என்பதும், திருமண தடை உள்ளவர்கள், இவரை வழிபட்டால் திருமண தடைகள் விலகி திருமணம் நடைபெறும் என்பதும் மற்றும் குழந்தைச் செல்வம் வேண்டுபவர்கள், வழிபட்டால் குழந்தை செல்வம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை.
இத்திருக்கோவிலின் சிறப்பு :-
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அருள்மிகு பஞ்சமுக விநாயகருக்கு என்று தனி ஆலயம் அமைந்த்துள்ளது இப்பகுதியில் மட்டுமே ஆகும். மேலும் இத்திருக்கோவிலில் அரசு வேம்பு இயற்கையிலே பின்னி வளர்ந்துவருவது மிகவும் சிறப்பு அம்சமாகும். இப்பகுதியில் வன்னிமரமும் அமைந்துள்ளது.
Leave a Reply