சிவலோகநாதர் திருக்கோயில், கிராமம் (திருமுண்டீச்சரம்)
அருள்மிகு சிவலோகநாதர் திருக்கோயில், கிராமம் (திருமுண்டீச்சரம்), உளுந்தூர்பேட்டை வட்டம், விழுப்புரம் மாவட்டம்.
+91- 4146-206 700
காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | சிவலோக நாதர், முண்டீச்சுரர், முடீசுவரர் | |
அம்மன் | – | சவுந்தர்யநாயகி, கானார்குழலி, செல்வாம்பிகை | |
தல விருட்சம் | – | வன்னிமரம் | |
தீர்த்தம் | – | பிரம்ம தீர்த்தம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | முண்டீச்சரம், திருக்கண்டீச்சரம் | |
ஊர் | – | கிராமம் | |
மாவட்டம் | – | விழுப்புரம் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர் | – | திருநாவுக்கரசர் |
சிவனின் வாயில்காவலர்களான திண்டி, முண்டி இத்தலத்தில் வழிபாடு செய்துள்ளனர். முண்டி வழிபட்டதால் இத்தலம் “முண்டீச்சரம்” எனப்பட்டது. “முடீச்சரம்” என்பதே இத்தலத்தின் புராணப்பெயராக இருந்துள்ளது. இதுவே காலப்போக்கில் “திருமுண்டீச்சரம்” ஆனது என்பர்.
துவாபர யுகத்தில் சொக்கலிங்கம் என்ற மன்னன் வேட்டைக்கு வந்த போது இப்பகுதில் இருந்த குளத்தில் அதிசயமான தாமரை மலரைக்கண்டான். தன் சேவகர்களை அனுப்பி அந்த மலரை பறித்துவரக் கட்டளையிட்டான். அவர்களால் அந்த மலரைப் பறிக்க முடியவில்லை. மலர் குளத்தை சுற்றிவர ஆரம்பித்தது. எனவே மன்னனே நேரில் சென்று அந்த மலர் மீது அம்புவிட, குளம் முழுவதும் செந்நிறமாக மாறியது. இதைக்கண்ட மன்னன் மயங்கி விழுந்தான். அந்த மலரின் நடுவில் இலிங்கம் இருப்பதைக்கண்டு, குளத்தின் கரையிலேயே கோயில் கட்டி இலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தான். இலிங்கத்தின் மீது மன்னன் விட்ட அம்பின் அடையாளம் இன்றும் உள்ளது. இதனால் இறைவன் “முடீஸ்வரர்” எனப்படுகிறார். இப்பெயரே கல்வெட்டில் “மவுலி கிராமம்” என அழைக்கப்படுகிறது. மவுலி என்றால் “முடி” அல்லது கிரீடம் என்று பொருள். காலப்போக்கில் மக்கள் மவுலியை விட்டு கிராமம் என அழைக்கத்தொடங்கினார்கள்.
வீரபாண்டியன் என்ற மன்னனுக்காக சிவன் திருநீற்றுப்பை(பொக்களம்) அளித்துள்ளார். இதனால் சிவனுக்கு “பொக்களம் கொடுத்த நாயனார்” என்ற பெயரும், ஆற்றின் கரையில் கோயில் இருப்பதால் “ஆற்றுத்தளி மகாதேவர்” என்ற பெயரும் உண்டு.
இங்குள்ள விநாயகர் வரசித்தி விநாயகர். கிழக்கு நோக்கிய ராஜகோபுரம். நுழைவு வாசலில் விநாயகரும், முருகனும் இடம் மாறியுள்ளனர். முருகனின் இடது கை நாரச முத்திரையுடன் உள்ளது. கோயிலின் அமைப்பு சோமாஸ்கந்தர் அமைப்பில் உள்ளது. சிவன் சன்னதிக்கும் அம்மன் சன்னதிக்கும் நடுவில் முருகன் சன்னதி அமைந்துள்ளது. பிரகாரத்தில் விநாயகர், முருகன், நடராஜர், தெட்சிணாமூர்த்தி, நவக்கிரகம், ஐயனார், துர்க்கை சன்னதிகள் உள்ளன. இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பிரம்மா, இந்திரன் வழிபாடு செய்த தலம். தெட்சிணாமூர்த்தி கல்லால மரத்தின் கீழ் அமராமல் ரிஷப வாகனத்தில் அருள்பாலிக்கிறார். திண்டி, முண்டி இருவருக்கும் இங்கு சிலை உள்ளது.
தேவாரப்பதிகம்:
உற்றவன்காண் உறவெல்லா மாவான் றான்காண் ஒழிவறநின் றெங்கு முலப்பி லான்காண் புற்றரவே யாடையுமாய்ப் பூணுமாகிப் புறங்காட்டில் எரியாடர் புரிந்தான் றான்காண் நற்றவன்காண் அடியடைந்த மாணிக் காக நணுகியதோர் பெருங்கூற்றைச் சேவடியினால் செற்றவன்காண் திரமுண்டீச் சரத்து மேய சிவலோகன் காண் அவனென் சிந்தை யானே.
–திருநாவுக்கரசர்
தேவாரப்பாடல் பெற்ற நடுநாட்டுத்தலங்களில் இது 19வது தலம்.
திருவிழா:
சித்திரை வருடப்பிறப்பு, ஆனிதிருமஞ்சனம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, கந்தர்சஷ்டி, ஐப்பசி அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை, கார்த்திகை சோமவாரம், தனுர்மாதம், திருவாதிரை, தைப்பொங்கல், மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம் மற்றும் பிரதோஷ வழிபாடும் கொண்டாடப்படுகிறது.
பிரார்த்தனை:
நடனத்திலும், இசையிலும் ஆர்வமுள்ளவர்கள் இத்தல அம்மனை வழிபாடு செய்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
Leave a Reply