சவுந்தர்யேஸ்வரர் கோயில், திருநாரையூர்

அருள்மிகு சவுந்தர்யேஸ்வரர் கோயில், திருநாரையூர், காட்டு மன்னார்கோவில் வட்டம், கடலூர் மாவட்டம்.

+91- 94425 71039

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சவுந்தர்யேஸ்வரர்
அம்மன் திரிபுரசுந்தரி
தல விருட்சம் புன்னை
தீர்த்தம் செங்கழுநீர் தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருநாரையூர்
ஊர் திருநாரையூர்
மாவட்டம் கடலூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் அப்பர், சம்பந்தர்

கோபக்காரரான துர்வாச முனிவர் சிவனை நோக்கி கடும் தவம் செய்து கொண்டிருந்தார். தனது தவத்திற்கு இடையூறு செய்த கந்தர்வன் ஒருவனை நாரையாகும்படி சாபமிட்டார். கந்தர்வன் தவறை மன்னிக்கும்படி வேண்டினான். முனிவர் மறுத்து விட்டார். எனவே இத்தல சிவனிடம் முறையிட்டு கதறினான். சிவன் அவனிடம், “தினமும் காசியிலிருந்து இத்தலத்துக்குத் தீர்த்தம் கொண்டு வந்து, தன்னை வழிபட்டால் சாபவிமோசனம் கிடைக்கும்என்றார். நாரை வடிவிலிருந்த கந்தர்வனும் தன் சக்தியால், அதிவேகத்தில் பறந்து சென்று தீர்த்தத்தை அலகில் சுமந்து வந்து அபிஷேகம் செய்தான். இதன்பிறகு சிவன் நாரைக்கு முக்தி கொடுத்தார்.

நம்பியாண்டார் நம்பயின் தந்தை இங்குள்ள பிள்ளையாருக்குத் தினமும் நைவேத்யம் செய்வார். அவருடன் தினமும் வரும் நம்பியாண்டார் நம்பி இதைப் பார்ப்பார். அப்பா வைக்கும் நைவேத்தியத்தை பிள்ளையார் சாப்பிடுவாரா? என அவருக்கு திடீரென சந்தேகம் வந்தது. தன் தந்தைக்கு பின் நம்பி கோயிலுக்கு பூஜை செய்யும் காலம் வந்தது. அப்போது தன் தந்தையைப்போல் பிள்ளையாருக்கு நைவேத்தியம் செய்து, பிள்ளையாரைச் சாப்பிடும்படி வற்புறுத்தினார். பிள்ளையாரோ அமைதியாக இருந்தார். மனம் வருந்திய நம்பி பிள்ளையாரின் மடியில் முட்டி அழுதார். உண்மையான பக்திக்கு மகிழ்ந்த பிள்ளையார் சாப்பிட்டார்.

இதை நம்பாத மன்னன் ராஜராஜசோழன் பலவகையான பலகாரத்துடன் நேரில் இக்கோயிலுக்கு வந்து நம்பியிடம் கொடுத்து, பிள்ளையாருக்கு நைவேத்தியம் வைக்கக் கூறினான். ஆனால், பிள்ளையார் சாப்பிடவில்லை. அப்போது நம்பி பிள்ளையார் மீது இரட்டை மணிமாலை பாசுரங்களை மனமுருகப் பாடினார். மனமிரங்கிய பிள்ளையார் ராஜராஜனின் நைவேத்தியத்தை அனைவர் முன்னிலையிலும் சாப்பிட்டார். மூவர் பாடிய தேவாரப்பாடல்களைத் தொகுத்தவரும் இவரே. இவரது சிலை கையில் கலசம் ஏந்திய நிலையில் உள்ளது. தேவாரத்தை தொகுக்கப் பாடுபட்ட ராஜராஜசோழனின் சிலையும் உள்ளது. மூன்று நிலைகளுடன் கிழக்கு நோக்கிய ராஜகோபுரம். பிரகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர், கஜலட்சுமி, நவகிரகம், சனி பகவான், பைரவர், சூரியன் ஆகியோர் உள்ளனர்.

தேவாரப்பதிகம்:

தீவினை யாயின தீர்க்கநின்றான் திருநாரை யூர்மேயான் பூவினை மேவு சடைமுடியான் புடைசூழப் பலபூதம் ஆவினில் ஐந்துங்கொண் டாட்டு கந்தான் அடங்கார் மதில்மூன்றும் ஏவினை யெய்தழித் தான்கழலே பரவா எழுவாமே.

திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 33வது தலம்.

திருவிழா:

வைகாசி திருவாதிரை, ராஜராஜனுக்கு 13 நாள் திருவிழா, விநாயகர் சதுர்த்தி.

பிரார்த்தனை:

நியாயமான வேண்டுகோள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொடுக்கும் இறைவன்.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *