தில்லை நடராஜர் திருக்கோயில், சிதம்பரம்
அருள்மிகு தில்லை நடராஜர் திருக்கோயில், சிதம்பரம், கடலூர் மாவட்டம்.
+91- 94439 86996
காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | திருமூலநாதர் (மூலட்டானேசுவரர், சபாநாயகர், கூத்தப்பெருமான், விடங்கர், மேருவிடங்கர், தட்சிணமேருவிடங்கர், பொன்னம்பலக் கூத்தன்) | |
உற்சவர் | – | ||
அம்மன் | – | உமையாம்பிகை (சிவகாமசுந்தரி) | |
தல விருட்சம் | – | தில்லைமரம் | |
தீர்த்தம் | – | சிவகங்கை, பரமானந்த கூபம், வியாக்கிரபாத தீர்த்தம், அனந்த தீர்த்தம், நாகச்சேரி, பிரமதீர்த்தம், சிவப்பிரியை, புலிமேடு, குய்ய தீர்த்தம், திருப்பாற்கடல் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | கோயில் | |
ஊர் | – | சிதம்பரம் | |
மாவட்டம் | – | கடலூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர்கள் | – | அப்பர், சம்பந்தர், சுந்தரர் |
முனிவர்களுள் சிறந்தவரான வசிஷ்ட மாமுனிவரின் உறவினரான மத்யந்தினர் என்ற முனிவருக்கு மாத்யந்தினர் என்ற மகன் பிறந்தான். அவனுக்கு ஆன்மஞானம் கிடைக்கவேண்டுமெனில் தில்லைவனக் காட்டில் உள்ள சுயம்பு இலிங்கத்தை வணங்குமாறு முனிவர் சொன்னார். இதையடுத்து, மாத்யந்தினர் தில்லை வனம் வந்தடைந்தார். இங்குள்ள இலிங்கத்தைத் தினமும் பூஜை செய்தார்.
பூஜைக்கு தேவையான மலர்களை, பொழுது விடிந்த பிறகு எடுத்தால் தம் பூஜை, தவம் முதலியவற்றிற்கு நேரமாகிறபடியாலும், மலர்களில் உள்ள தேனை வண்டுகள் எடுப்பதால் அம்மலர்கள் பூஜைக்கு ஏற்றவையல்ல என்பதாலும் ஒவ்வொரு நாளும் மிகவும் மனம்வருந்திக் கொண்டே மலரெடுத்துப் பூஜை செய்து கொண்டு வந்தார். இக்குறையை சுவாமியிடம் முறையிட்டார். சுவாமி தங்கள் பூஜைக்காக பொழுது விடியுமுன் மலர்களைப் பறிக்க இருட்டில் மலர்கள் தெரியவில்லை. பொழுது விடிந்த பின்னர் மலர்களைப் பறிக்கலாம் என்றால் மலர்களில் உள்ள தேனை வண்டுகள் எடுத்துவிடுவதால் பூஜைக்கு நல்ல மலர்கள் கிடைக்கவில்லை என்று கூறினார். உடனே சுவாமி “மரங்களில் ஏறுவதற்கு வசதியாக வழுக்காமல் இருக்கப் புலியினுடைய கை கால்கள் போன்ற உறுப்புகளும், இருளிலும் நன்றாகத் தெரியும்படியான கண்பார்வையும் உனக்கு கொடுத்தோம்” என்று கூறியருளினார். மேலும்,”புலிக்கால் புலிக்கைகளைப் பெற்றதால் உன் பெயரும் வியாக்கிரபாதன்” என்றும் கூறினார். மாத்யந்தினரும் பெருமகிழ்வு கொண்டு தினமும் மனநிறைவோடு பூஜை செய்து வந்தார் என தல வரலாற்றுக்குறிப்பு கூறுகிறது.
சிதம்பரம். நடராஜர் தங்க விதானத்தின் கீழ் இருப்பது இங்கு தான். தாழ்த்தப்பட்டவர்கள் கோயிலுக்குள் வரக்கூடாது என்ற சட்ட திட்டத்தை, புராண காலத்திலேயே நந்தனாருக்காக அடித்து நொறுக்கிய தலம். இந்த தலம் பற்றிய அபூர்வ தகவல்கள் இங்கே.
இறைவன் இத்தலத்தில், நடராஜர் என்ற உருவமாகவும், ஆகாயம் என்ற அருவமாகவும், ஸ்படிக லிங்கம் என்ற அருவுருமாகவும் அருள்பாலிக்கிறார். சித்சபையில் சபாநாயகரின் வலப்பக்கத்தில் உள்ளது ஒரு சிறு வாயில். இதில் உள்ள திரை அகற்றுப்பெறும். ஆரத்தி காட்டப் பெறும். இதனுள்ளே திருவுருவம் ஏதும் தோன்றாது. தங்கத்தால் ஆன வில்வ தளமாலை ஒன்று தொங்கவிடப்பட்டுக் காட்சியளிக்கும். மூர்த்தி இல்லாமலேயே வில்வதளம் தொங்கும். இதன் ரகசியம் இறைவன் இங்கு ஆகாய உருவில் இருக்கின்றார் என்பதுதான். ஆகாயத்துக்கு ஆரம்பமும் கிடையாது, முடிவும் கிடையாது. அவனை உணரத்தான் முடியும் என்பதே இதன் அர்த்தம். சித்+அம்பரம்=சிதம்பரம். சித்–அறிவு. அம்பரம்–வெட்டவெளி. “மனிதா! உன்னிடம் ஒன்றுமே இல்லை‘ என்பது தான் அந்த ரகசியத்தின் பொருள்.
பஞ்சபூத தலங்கள்:
சிதம்பரம் ஆகாயம்
திருவண்ணாமலை அக்னி
திருவானைக்கா நீர்
காளஹஸ்தி வாயு
காஞ்சிபுரம், திருவாரூர் நிலம்.
பஞ்சபூத தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலமாகும். சிதம்பர ரகசிய ஸ்தானத்தில் அம்மனுக்குரிய ஸ்ரீசக்கரத்தையும், சிவனுக்குரிய சிவசக்கரத்தையும் இணைத்து, ஒன்றாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாக ஒரு தகவல் உண்டு. இந்த சக்கரத்தில் நடராஜப்பெருமான் ஐக்கியமாகி, தன் ஆனந்த நடனத்தினால் உலகை படைத்து, காத்து, அழித்து, மறைத்து, அருளிக் கொண்டிருக்கிறார்.
மூவர் பாடிய தேவாரத் திருப்பதிகங்களை கண்டெடுத்த தலம் இது. திருநாரையூரைச் சேர்ந்த நம்பியாண்டார் நம்பி என்பவரும் திருமுறை கண்ட சோழ மன்னனும் திருநாரையூர் தலத்தில் உள்ள பொல்லாப்பிள்ளையாரை வணங்கி அப்பெருமானுடைய திருவருளால் சிதம்பரத்தில் பொன்னம்பலத்தின் அருகே மூவர் திருக்கர முத்திரைகளோடு தேவார ஏடுகள் உள்ளன என்று அறிந்தனர். பின்பு தில்லையை வந்தடைந்து மூவருக்கும் விழா எடுத்து குறிப்பிட்ட இடத்தில் தேடும்போது கறையான் புற்று மூடிக்கிடக்க ஏடுகள் கிடந்தன. பின்னர் எண்ணெய் விட்டு புற்றினுள்ளே இருந்த சுவடிகளை எடுத்துப் பார்த்தபோது பல பகுதிகள் கறையானுக்கு இறையாகிப் போயிருந்தன. பின்பு உள்ளவற்றை எடுத்துப் பத்திரப்படுத்தினர். இவ்வாறு கிடைக்கப்பெற்றதே தற்போது நாம் படிக்கும் தேவாரப் பதிகங்கள். அத்தகைய அரிய தேவாரப்பதிகங்கள் கிடைத்த தலம் இது.
திருநாளைப்போவார் என்று அழைக்கப்பட்ட நந்தனார் சிவன்பதம் அடைய அக்னி குண்டத்தில் இறங்கிய அருந்தவத் தலம். நால்வர் இத்தலத்தில் எழுந்தருளியபோது நான்கு கோபுர வாயில்கள் வழியாக வந்தனர் என்கின்றனர். கிழக்கு கோபுரம் வழியாக மாணிக்கவாசகரும் தெற்கில் ஞானசம்பந்தரும், மேற்கில் அப்பரும், வடக்கு கோபுரம் வழியாக சுந்தரரும் சென்று சிற்சபையில் இறைவனை கண்டு தரிசித்தனராம். இந்த ஊரின் தேரோடும் வீதிகளில் அப்பர் பெருமான் அங்கப்பிரதட்சணமே செய்தாராம்.
இலங்கையை சேர்ந்த புத்தமத மன்னனின் ஊமை மகளை மாணிக்கவாசர், நடராஜர் அருளால் பேசச் செய்த தலம். இத்தலத்து திருக்கோயிலில் சிற்றம்பலம், பொன்னம்பலம், பேரம்பலம், நிருத்தசபை, இராசசபை என்னும் ஐந்து மன்றங்களும் அமைந்திருத்தலும், சிவன் விஷ்ணு இருவர் திருச்சந்நிதிகள் ஒரே இடத்தில் நின்று தரிசிக்கும்படி அமைந்திருத்தலும் தனிச் சிறப்புகளாகும். பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய மும்மூர்த்திகளும் கோயில் கொண்டுள்ள திருத்தலம் இது. இத்தலத்து முருகப்பெருமான் (சுப்ரமணியர்) குறித்து அருணகிரிநாதர் பத்து திருப்புகழ் பாடல்கள் பாடியுள்ளார்.
பெரும்பாலான பக்தர்கள், சிதம்பரம் கோயிலின் மூலவர் என்றாலே அது நடராஜர் தான் நினைத்துக் கொண்டிருப்பர். கோயிலுக்குள் நுழைந்ததும், நடராஜர் சன்னதியை தேடியே ஓடுவர். ஆனால், இத்தலத்து மூலவர் இலிங்கவடிவில் “ஆதிமூலநாதர்” என்ற பெயரில் அருள் செய்கிறார். பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர்கள் கயிலையில் தாங்கள் கண்ட சிவனின் நாட்டிய தரிசனத்தை, பூலோக மக்களும் கண்டு மகிழ விரும்பினர். எனவே இத்தலத்துக்கு வந்து ஆதிமூலநாதரை வேண்டி தவம் செய்தனர். இவர்களது வேண்டுதலை ஏற்ற சிவன், “திரிசகஸ்ர முனீஸ்வரர்கள்” என்போரை கயிலையிலிருந்து, சிதம்பரத்திற்கு அழைத்து வந்து தைமாதம் பூசத்தில் பகல் 12 மணிக்கு நாட்டிய தரிசனம் தந்தார். இந்த திரிசகஸ்ர முனிவர்களே “தில்லை மூலவாரயிவர்” என்று சொல்வதுண்டு.
திருவாரூரில் பிறந்தால் முக்தி. காஞ்சியில் வாழ்ந்தால் முக்தி. காசியில் இறந்தால் முக்தி. திருவண்ணாமலையை நினைத்தால் முக்தி. உயிர் போகும் நேரத்தில் “நினைக்க அருள்புரிவாய் அருணாச்சலா” என அப்பர் கூறியுள்ளார். இதுபோல், வாழ்நாளில் ஒரு தடவையேனும் நடராஜரையும், திருமூலநாதரையும் தரிசித்தால் முக்தி கிடைத்து விடும். எனவே தான் நந்தனார், தாழ்த்தப்பட்டவர்களை கோயிலுக்குள் வரக்கூடாது என ஒதுக்கிய காலத்திலும், சிவன் மீது கொண்ட நிஜமான பக்தியால், சர்வ மரியாதையுடன் கோயிலுக்குள் சென்று, நடராஜருடன் ஐக்கியமானார். இத்தலத்து நடராஜரைக் காண உலகமே திரண்டு வருகிறது. ஏராளமான வெளிநாட்டவர்கள் கூட, நடராஜரின் சிற்பச் சிறப்பைக் காண வருகின்றனர். அப்படிப்பட்ட அபூர்வ சிலையை, திருவிழா காலத்தில் தேரில் எடுத்து வருகிறார்கள்.
ஒருமுறை பிரம்மா யாகம் ஒன்றை நடத்தினார். இதற்காக, தில்லைவாழ் அந்தணர் மூவாயிரம் பேரையும் சத்தியலோகத்துக்கு அழைத்தார். தில்லையிலேயே இருந்து, நடராஜரின் திருநடனத்தைக் காண்பதை விட அந்த யாகத்தில் எங்களுக்கு என்ன பலன் கிடைத்து விடப்போகிறது எனக் கூறினர். அப்போது, நடராஜர் யாகத்திற்கு செல்லும்படியும், யாகத்தின் முடிவில் அங்கேயே தோன்றுவதாகவும் வாக்களித்தார். அவ்வாறு தோன்றிய கோலத்தை “ரத்னசபாபதி” என்கின்றனர். இவரது சிலை நடராஜர் சிலையின் கீழே உள்ளது. இவருக்கு தினமும் காலையில் 10 -11 மணிக்குள் பூஜை நடக்கும். சிலையின் முன்புறமும், பின்புறமுமாக இந்த தீபாராதனையைச் செய்வர்.
மனிதனின் உருவ அமைப்பிற்கும், தங்கத்தால் ஆன நடராஜர் சன்னதிக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது. பொன்னம்பலத்தில் நமசிவாய மந்திரம் பொறிக்கப்பட்டு வேயப்பட்டுள்ள 21 ஆயிரத்து 600 தங்க ஓடுகள், மனிதன் ஒரு நாளைக்கு விடும் சுவாசத்தின் எண்ணிக்கையைக் குறிக்கும். பொன்னம்பலத்தில் அடிக்கப்பட்டுள்ள 72 ஆயிரம் ஆணிகள், மனிதனின் நாடி நரம்புகளைக் குறிக்கிறது. கோயிலில் உள்ள 9 வாசல்கள் மனித உடலிலுள்ள 9 துவாரங்களைக் குறிக்கிறது. இதுதவிர ஆன்மிக ரீதியான அமைப்பும் உண்டு. ஐந்தெழுத்து மந்திரமான “சிவாயநம” என்பதின் அடிப்படையில் பொன்னம்பலத்தின் ஐந்து படிகளும், 64 கலைகளின் அடிப்படையில் சாத்துமரங்களும், 96 தத்துவங்களைக் குறிக்கும் விதமாக 96 ஜன்னல்களும், 4 வேதங்கள், 6 சாஸ்திரங்கள், பஞ்ச (5)பூதங்களின் அடிப்படையில் தூண்களும் அமைக்கப்பட்டுள்ளன. ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்ரம் அம்மன் சன்னதியில் உள்ளது.
அர்த்தஜாம பூஜை இத்தலத்தின் தனி சிறப்பு. அர்த்தஜாம பூஜையில் உலகில் உள்ள அனைத்து தெய்வங்களும் கலந்து கொள்வதாக ஐதீகம். இதை அப்பர் “புலியூர் (சிதம்பரம்) சிற்றம்பலமே புக்கார் தாமே” எனப்பாடுகிறார். சேக்கிழார் இங்குள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் தான் பெரியபுராணம் பாடி அரங்கேற்றினார். அருணகிரிநாதர் இத்தலத்தில் உள்ள முருகப்பெருமானை தனது திருப்புகழில் பாடியுள்ளார். இத்தலம் தில்லை என்னும் மரங்கள் அடர்ந்த காடாக இருந்ததால் இப்பெயர் பெற்றது. தில்லை என்னும் மரங்கள் இப்பொழுது சிதம்பரத்தில் காணக் கிடைக்கவில்லை. சிதம்பரத்திற்கு கிழக்கில் உள்ள பிச்சாவரத்திற்கு அருகே அமைந்துள்ள உப்பங்கழியின் கரைகளில் இம்மரங்கள் மிகுதியாக இருக்கின்றன. கோயிலுக்குள் திருமூலட்டானக் கோயில் மேற்கு பிரகாரத்தின் மேல்பால் இருக்கின்றது. கருங்கல் வடிவத்தில் செய்து வைக்கப்பட்டுள்ளது.
நடராஜர் சன்னதியின் எதிரில் உள்ள மண்டத்தில் நின்றபடி பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூவரையும் தரிசிக்கலாம். நடராஜர் சன்னதி அருகிலேயே 108 திவ்ய தேசங்களில் ஒன்றான கோவிந்தராஜப் பெருமாள் தலம் இருப்பது விசேஷத்திலும் விசேஷம்.
சிவனுக்கும், சக்திக்கும் நடந்த போட்டி நடனத்தில், ஆடிய தில்லை காளியின் கோயில் நடராஜர் கோயில் அருகில் உள்ளது.
51 ஏக்கர் பரப்பளவில் அமைந்த பிரம்மாண்டமான சிவ தலம் இது. மிகச் சிறந்த கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாக அமைந்த அற்புத தலம்.
நடராஜரின் பஞ்ச சபைகளில் இது சிற்றம்பலம். இங்கு மூலவர் திருமூலநாதர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஆனால் நடராஜரே இங்கு பிரதான மூர்த்தி. பஞ்ச பூத தலங்களில் இது ஆகாய தலம் ஆகும்.
பாடியவர்கள்:
அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர்
தேவாரப்பதிகம்
அலையார் புனல்சூடி யாகத் தொருபாகம் மலையாள் மகளொடு மகிழ்ந்தான் உலகேத்தச் சிலையால் எயிலெய்தான் சிற்றம் பலந்தன்னைத் தலையால் வணங்குவார் தலையா னார்களே.
–திருஞானசம்பந்தர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது முதன்மையானது.
திருவிழா:
மார்கழி திருவிழா – 10 நாள் திருவிழா. திருவாதிரை உற்சவம் இத்தலத்தில் மிக விசேசமாக நடக்கும். திருவாதிரை நட்சத்திரத்திற்கு முன் கொடி ஏற்றி பத்து நாள் விழா நடைபெறும். இத்திருவிழாவில் ஒரு தனி விசேசம் உண்டு. இவ்விசேசம் மாணிக்கவாசகருக்கு அமைவது. பத்து நாட்களிலும் சாயுங்கால தீபாராதனையின் போது மாணிக்கவாசகரை சுவாமியின் திருச்சந்நிதிக்கு எழுந்தருளச் செய்து திருவெம்பாவை பாட்டுகள் பாடிச் சுவாமிக்குத் தீபாராதனை நடைபெறும். நாள்தோறும் காலை விழாவில் மாணிக்கவாசகரையும் எழுந்தருளச் செய்வதுடன் 10 ஆம் நாள் தரிசனம் முடிந்தவுடன் மாணிக்கவாசகருக்கும் தீபாரதனை நடைபெறும். சுவாமிக்கு விடையாத்தித் திருவிழா முடிந்த மறுநாள் மாணிக்கவாசகருக்கும் விடையாத்தித் திருவிழா நடைபெறும்.
ஆனித்திருமஞ்சனம் – 10 நாள் திருவிழா. ஆனி உத்திர நட்சத்திரத்திற்குப் பத்துநாள் முன் கொடிஏற்றி முதல்நாள் திருவிழா முதலாக எட்டாந்திருவிழா வரையில் உற்சவ மூர்த்திகளான சோமாஸ்கந்தர், சிவானந்த நாயகி, விநாயகர், சுப்பிரமணியர், சண்டேசுவரர் முதலிய பஞ்சமூர்த்திகளும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வெள்ளி, தங்க வாகனங்களில் வீதியுலா வருவார்கள். சித்திரை வருடப்பிறப்பு, திருவாதிரை நட்சத்திரம், அமாவாசை முதலிய விசேச நாள்களில் நடராஜமூர்த்தி சிவகங்கையில் தீர்த்தம் கொடுத்தருள்வார். மற்ற மாதங்களிலும் இவ்வாறு தீர்த்தம் கொடுத்தருள்வார். சித்திரை முதல் பங்குனி முடிய பன்னிரு மாதங்களில் மாதப்பிறப்பு, பிரதோசம், வெள்ளிக்கிழமை, திருவாதிரை, கார்த்திகை, அமாவாசை, பௌர்ணமி ஆகிய நாட்களில் இரவு விழா நடைபெறும்.
பிரார்த்தனை:
இங்குள்ள ஈசனை வழிபடுவோர்க்கு மனநிம்மதி கிடைக்கும். இங்கு உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயானாலும் தீருகிறது. கலைகளில் தேர்ச்சி பெற விரும்புவோர் இத்தலத்தின் மேல் அதீத ஆர்வம் கொண்டு பிரார்த்தனை செய்தால் அவர் விரும்பிய வண்ணம் சிறப்பான எதிர் காலம் அமையும் என்பது நம்பிக்கை. மேலும் குழந்தை வரம் மற்றும் குடும்ப ஐஸ்வர்யம் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் பக்தர்கள் பிரார்த்தனை செய்து கொள்வது வழக்கமாக உள்ளது.
நேர்த்திக்கடன்:
பால், பழம், பொரி முதலியவற்றை நைவேத்தியம் செய்து, தீபாராதனை செய்து, சுவாமியின் பாதுகையை வெள்ளி தங்கப்பல்லக்கில் எழுந்தருளப் பண்ணி கொண்டு வந்து நடராஜரின் அருகில் வைத்து நடராஜருக்கும் சிவகாமசுந்தரியம்பாளுக்கும் பால், பொரி, பழம் முதலியவை நைவேத்தியம் செய்து, தீபாராதனை செய்வதை “திருவனந்தல்” என்றும் “பால் நைவேத்தியம்” என்றும் அழைக்கின்றனர். இதை பக்தர்கள் தங்களின் கட்டளையாக ஏற்று செய்யலாம். சுவாமிக்கு நல்லெண்ணெய், திரவியப் பொடி, பால், தயிர், பழச்சாறு, இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீர் ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம். தவிர உலர்ந்த தூய ஆடை சாத்தலாம். இது தவிர சுவாமிக்கு சங்காபிசேகம், கலசாபிசேகம் ஆகியவையும் செய்யப்படுகிறது. அம்பாளுக்கு மஞ்சள் பொடி அபிசேகம், புடவை சாத்துதல் ஆகியவற்றையும் செய்யலாம். உண்டியல் காணிக்ககை செலுத்தலாம். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம். வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம்.
வழிகாட்டி :
கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்திற்கு தமிழகத்தின் முக்கிய நகரங்களிலில்இருந்து பஸ் வசதி உள்ளது. நகரின் நடுவே கோயில் அமைந்துள்ளது.
ஐயா!
என் தாய்வழிப் பேத்தியார் விசாவில்லாக் காலத்தில் இங்கு பலதடவை வந்து வழிபட்டதைக் கதை கதையாகக் கூறுவார்.
நானும் ஆவல் மிகுதியால், 2004ல் தரிசிக்க வந்தேன். தில்லை வாழ் அந்தணர் -தந்த தொல்லையால் ஏன்? வந்தேன், என ஆனேன்.பணம் பறிப்பதையே குறியாக உடையோரே அங்கு இறை பணியில் உள்ளனர்.
எந்தப் பக்கம் திரும்பினாலும் அவர்கள் ஆய்க்கினை.
மன்னிக்கவும் ஐயா? திரும்ப வரப் பயமாகவுள்ளது.
kovil endru sirappudan koorum sthalam …varum pothu elimayaga vanthirukkalame….
NeengkaL kUruvathu puriyavillayE! O! Ho! Yokanaik koorineerkaLA!
annam paligum thilli—–