தொண்டர்கள் நயினார் சுவாமி திருக்கோயில், திருநெல்வேலி
அருள்மிகு தொண்டர்கள் நயினார் சுவாமி திருக்கோயில், நெல்லையப்பர் கோயில் அருகில், திருநெல்வேலி, திருநெல்வேலி மாவட்டம்.
+91-462- 256 1138
காலை 6.30 மணி முதல் 11 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | தொண்டர்கள்நயினார் | |
உற்சவர் | – | பக்தவத்சலேசர் | |
அம்மன் | – | கோமதி | |
தல விருட்சம் | – | வில்வம் | |
தீர்த்தம் | – | பஞ்சதீர்த்தம் | |
ஆகமம் | – | காமீகம் | |
பழமை | – | 500-1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | வேணுவனம் | |
ஊர் | – | திருநெல்வேலி | |
மாவட்டம் | – | திருநெல்வேலி | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
சிவத்தல யாத்திரை சென்ற திருஞானசம்பந்தர் குற்றாலம் சென்றுவிட்டு, திருநெல்வேலிக்கு வந்தார். நெல்லையப்பரை வணங்கி, பதிகம் பாடினார். அப்போது அவருடன் வந்த அடியார்கள், இவ்விடத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபடவேண்டுமென விரும்பினர். தம் விருப்பத்தை சம்பந்தரிடம் தெரிவித்தனர். சம்பந்தருக்கு அவர்களது விருப்பத்தை நிறைவேற்ற வேண்டுமென ஆசை இருந்தது. ஆனாலும், இலிங்கத்தை தனியே பிரதிஷ்டை செய்ய அவர் மனம் இடம் தரவில்லை. எனவே அகத்தியரை மானசீகமாக எண்ணி அடியார்களின் விருப்பத்தை நிறைவேற்றும்படி வேண்டினார். அவர் வில்வவனமாக இருந்த இப்பகுதியில் ஓரிடத்தில் சிவன் சுயம்புலிங்கமாக இருப்பதாக காட்டினார். சம்பந்தரும் இங்கு வந்தார். சுயம்புலிங்கம் இருந்ததைக் கண்டார்.
பின் சம்பந்தர், அடியார்களுடன் சேர்ந்து இலிங்கத்திற்கு பூஜை செய்து வழிபட்டார். சிவன் அவர்களுக்கு காட்சி கொடுத்தருளினார். தொண்டர்களுக்காக எழுந்தருளியவர் என்பதால் சிவன், “தொண்டர்கள்நயினார்” என்ற பெயரும் பெற்றார்.
சிவபக்தரான கருவூர்சித்தர், நெல்லையப்பரை தரிசிக்க வந்தார். அவர் நெல்லையப்பரிடம் தனக்கு காட்சி தரும்படி அழைத்தார். ஆனால், சிவனோ அவருக்கு காட்சி தரவில்லை. எனவே கருவூரார், “ஈசன் இங்கில்லை, எருக்கு உண்டாகுக” என்று கோபத்துடன் சாபமிட்டுவிட்டு திரும்பிச் சென்றார். சிறிது தூரம் சென்றபிறகு சிவன் அவருக்கு ஜோதி வடிவில் காட்சி தந்தார். அவர் சிவனை வணங்கியபோது, ஜோதியானது நெல்லை தலத்தை நோக்கி வந்தது. கருவூராரும் பின்தொடர்ந்தார். ஜோதி இத்தலத்தில் உள்ள சிவலிங்கத்திற்குள் ஐக்கியமானது. பின் கருவூராருக்கு சிவன் காட்சி தந்து, “பொறுமை அனைவருக்கும் அவசியம். பொறுமை இல்லாதவர்களால் எதையும் அடைய முடியாது” என்று உபதேசித்து விட்டு மறைந்தார்.
கருவூராரும் உண்மையை உணர்ந்தார். பின், “ஈசன் இங்கிருக்கிறார், எருக்கு அற்றுக” என்று சொல்லிவிட்டு தன் தலயாத்திரையை தொடர்ந்தார்.
கருவூர்சித்தருக்கு சிவன் காட்சி தந்த உற்சவம் ஆவணி மூலத்தில் நடக்கிறது.
இத்தலத்து சிவனை திருஞானசம்பந்தர் வழிபட்டிருந்தாலும், என்ன காரணத்தாலோ அவர் பதிகம் பாடவில்லை. அம்பாள் கோமதி தனிச்சன்னதியில் சுவாமிக்கு இடதுபுறத்தில் கிழக்கு நோக்கியிருக்கிறாள். இவளுக்கு முன்புறம் மகாமண்டபத்தில் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இவளது சன்னதியில் அபிராமி அந்தாதி பாடி வழிபடுவது சிறப்பு. ஆடித்தபசு விழாவின்போது, அம்பாளுக்கு மாவிளக்கு வைத்து சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. திருமணத்தடை உள்ள பெண்கள் இவளுக்கு தாலிப்பொட்டு, புடவை சாத்தி வேண்டிக்கொள்கிறார்கள்.
இவளது சன்னதி பிரகாரத்தில் அரசமரத்தின் கீழே வினை தீர்க்கும் விநாயகர், ஆவுடையார் மீது இருக்கிறார். இவருக்கு பின்புறத்தில் மற்றோர் விநாயகர் மேற்கு நோக்கி அருளுகிறார். ஒரே இடத்தில் முன்னும், பின்னும் திரும்பிய விநாயகர்களை காண்பது விசேஷமான தரிசனம்.
சிவன் சன்னதிக்கு முன்புறத்தில் திருஞானசம்பந்தர், அகத்தியர் இருவரும் இருக்கின்றனர். பிரகாரத்தில் தெற்கு நோக்கி, சனீஸ்வரர் தனியாக இருக்கிறார். இவர் வலக்கையில் கிளி வைத்த கோலத்தில் இருப்பது சிறப்பு. கோயில் வளாகத்தில் வன்னி மரத்தின் கீழ் விநாயகரும், எதிரே ஒரு கிணறும் அமைந்துள்ளது. மதுரை சுந்தரேஸ்வரர் தலத்தில், பெண் ஒருத்தியின் திருமணத்திற்கு வன்னி, இலிங்கம், கிணறு இம்மூன்றும் சாட்சி சொல்லின. இதை நினைவுறுத்தும்விதமாக இத்தலத்தில் வன்னி விநாயகர் இருக்கிறார். இவருக்கு வலப்புறத்தில் சிவலிங்கம் இருக்கிறது. அருகில் இரண்டு நாகங்கள் எதிரெதிரே திரும்பியபடி இருப்பது வித்தியாசமான அமைப்பு. திருமண, நாக தோஷம் உள்ளவர்கள் இவரிடம் வேண்டிக்கொண்டால் நிவர்த்தியாவதாக நம்பிக்கை. கோஷ்டத்தில் உள்ள தெட்சிணாமூர்த்தி, இடது கையை நாகத்தின் மீது வைத்தபடி காட்சி தருகிறார். பிரகாரத்தில் நர்த்தன விநாயகர், முருகன் ஆகியோருக்கு சன்னதிகள் உண்டு.
திருவிழா:
சித்ராபவுர்ணமி, ஆனி உத்திரம், ஐப்பசியில் திருக்கல்யாணம், திருக்கார்த்திகை, சிவராத்திரி.
கோரிக்கைகள்:
திருமண, புத்திர, நாகதோஷம் உள்ளவர்கள் இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். சர்க்கரைப்பொங்கல் நைவேத்யம் படைத்து வேண்டிக்கொள்ளலாம்.
Leave a Reply