சங்கமேஸ்வரர் திருக்கோயில் , கோட்டைமேடு

அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில் , கோட்டைமேடு, கோயம்புத்தூர் மாவட்டம்.

+91- 422- 239 3677

காலை 6.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சங்கமேஸ்வரர்
அம்மன் அகிலாண்டேஸ்வரி
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் கோட்டைமேடு
மாவட்டம் கோயம்புத்தூர்
மாநிலம் தமிழ்நாடு

சிவபக்தனான கரிகால் சோழ மன்னன் தனக்குப் பின் நாட்டை ஆள, புத்திரன் இன்றி தவித்தான். தனக்கு ஏற்பட்ட குறை நீங்கவேண்டி, சிவனிடம் மனம் உருகி வழிபாடு செய்து முறையிட்டான். அவ்வாறு அவன் வழிபட்டு வர, ஓர்நாள் இரவில் தன் கனவில் சிவன் அற்புதங்கள் புரிந்த சில தலங்களில் ஆலயங்கள் எழுப்புவது போல கனவு கண்டான். இது குறித்தும், வாரிசு இல்லாமை நீங்க செய்ய வேண்டிய பரிகாரம் குறித்தும் அவன் தனது குருவிடமும், ஆன்றோர்களிடமும் ஆலோசனை கேட்டான். அவர்களது ஆலோசனையின் படி, சிவன் அற்புதங்கள் புரிந்த இடங்களில் எல்லாம் கோயில்களை எழுப்பி வணங்கினான். அவன் கட்டிய 36 சிவத்தலங்களில் இத்தலம் 31வது தலமாக விளங்குகிறது.

சிவபெருமானை நோக்கி கடுந்தவம் இருந்த அசுரன் ஒருவன், யாராலும் தனக்கு அழிவு நேராதபடி சாகா வரம் பெற்றான். தேவலோகத்தினை ஆள ஆசை கொண்டு ரிஷிகள், தேவர்களுக்கு துன்பம் தந்து கொடுமைப்படுத்தி வந்தான். அவனது அட்டூழியத்தினால் மனம் வெதும்பிய தேவர்கள் இந்திரனிடம் முறையிட்டனர். இந்திரன் அவர்களிடம், சிவனை வேண்டுவதைத் தவிர அசுரனை அழிக்க வேறு வழியில்லை என்றார். அதன்படி, தேவர்களும், ரிஷிகளும் ஆதியில் சங்குபுஷ்பங்கள் நிறைந்த தோட்டமாக இருந்த இவ்விடத்திற்கு வந்து சிவனை பூஜித்து வணங்கி அசுரனை அழிக்கும் படி முறையிட்டனர். அதன்பின் அசுரனை சிவன் வதம் செய்தார்.

இங்கு அருள்பாலிக்கும் சிவலிங்கத்தின் மேல்பகுதியில் பிரம்ம சூத்திரம் வரையப்பட்டுள்ளது. இந்த அமைப்பு நம் படைப்பில் கோளாறு இருந்தாலும், விதியையே மாற்றும் வல்லமையுள்ளது என்பர். மரணத்தருவாயில் உள்ள இளைய தலைமுறையினருக்காக இங்கு பிரார்த்தித்தால் அவரது தலைவிதி மாறும் என்ற நம்பிக்கை உண்டு.

சோமஸ்கந்தராக உள்ள முருகன் சூரபத்மனை வதம் செய்யும் கோலத்தில் காட்சிதருகிறார். வடக்கு நோக்கிய மயில் வாகனத்துடன் சண்முக சுப்பிரமணியர் என்ற பெயருடன் உள்ளார். இவரது ஆறுமுகங்களும் நேரே நோக்கியநிலையில், 12 கைகளிலும் ஆயுதங்களைத் தாங்கியபடி காட்சி தருவது சிறப்பாக உள்ளது. கோயில் அமைப்புப்படி இவரே மூலவராக அருள்பாலிக்கும் தோற்றத்தில் உள்ளார். சுவாமிக்கு இடப்புறத்தில் அம்மை அகிலாண்டேஸ்வரி சன்னதி உள்ளது. ஒரு தூணில் மேற்கு நோக்கியபடி ஆஞ்சநேயர் காட்சிதருகிறார். சுற்றுப்பிரகாரத்தில் காசிவிஸ்வநாதர், நீலகண்டேஸ்வரர், சூரியன், காப்புவிநாயகர், தெட்சிணாமூர்த்தி, பைரவர் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.

திருவிழா:

சித்திரையில் 13 நாள் பிரம்மோற்ஸவம், வைகாசி விசாகம், ஆடிப்பூரம், ஆடிவெள்ளி, மகாசிவராத்திரி, அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை, தைப்பூசம், கந்தசஷ்டி, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி.

கோரிக்கைகள்:

மரணத்தருவாயில் உள்ள இளைய தலைமுறையினருக்காக இங்கு பிரார்த்தித்தால் அவரது தலைவிதி மாறும் என்ற நம்பிக்கை உண்டு. இத்தலத்தில் உள்ள அகிலாண்டேஸ்வரியை வணங்கிட, திருமணத்தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிட்டும், சகல நோய்களும் நீங்கும், குடும்பபிரச்சனைகள் தீரும், தொழில்விருத்தி அடையும், அகால மரண தோஷம் நீங்கும்.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்குத் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *