பூர்ணத்திரயேஸ்வரர் திருக்கோயில், திருப்பூனித்துறை
அருள்மிகு பூர்ணத்திரயேஸ்வரர் திருக்கோயில், திருப்பூனித்துறை, எர்ணாகுளம் மாவட்டம், கேரளா மாநிலம்.
+91- 484 – 277 4007
காலை 4 மணி முதல் 11.15 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | பூர்ணத்திரயேஸ்வரர் |
தீர்த்தம் | – | பல்குண தீர்த்தம் |
பழமை | – | 1000-2000 வருடங்களுக்கு முன் |
ஊர் | – | திருப்பூனித்துறை |
மாவட்டம் | – | எர்ணாகுளம் |
மாநிலம் | – | கேரளம் |
இப்பகுதியில் வாழ்ந்த ஒரு அந்தணர் தம்பதிக்கு நெடுங்காலமாகக் குழந்தை இல்லை. அந்தணருக்கு கடவுள் பக்தி கிடையாது. அவரது மனைவியோ விஷ்ணு பக்தை. தன் கணவனை மன்னித்து, தனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் என மனைவி அவரை வழிபட்டு வந்தாள். ஆனாலும், பெருமாள் மலடி என்ற இவளது பட்டத்தை தீர்க்கும் வகையில் குழந்தை பாக்கியத்தை தந்தாரே தவிர, பிறந்த குழந்தைகள் எதுவும் பிழைக்கவில்லை. ஒன்பது குழந்தைகள் பிறந்து இறந்தன. இதனால் அந்தணருக்கு பெருமாள் மீது கோபம் இன்னும் அதிகமானது. அந்தணரின் மாமனார், “மருமகனே. தாங்கள் பெருமாளிடம் கோபப்படுவதில் அர்த்தமில்லை. உங்களுக்கு அவர்மீது பக்தி இல்லாததே குழந்தைகளின் மரணத்திற்கு காரணம். பெருமாளை சரணாகதி அடைந்தால் இனிமேல் பிறக்கும் குழந்தை இறக்காது” என்றார். ஆனாலும், அந்தணர் அதைக் கண்டுகொள்ளவில்லை. அந்தணரின் மனைவி, தன் கணவன் திருந்தாததையும், பெருமாள் தன்னைச் சோதிப்பதையும் எண்ணி வேதனையில் தவித்தாள்.
ஒருமுறை அவள் தன் கணவனுடன் துவாரகை செல்ல நேர்ந்தது. அங்கே கிருஷ்ணனை சந்தித்தார் அந்தணர். “கிருஷ்ணா. உன்னைத் திருமாலின் அவதாரம் என்கிறார்கள். உலகம் முழுமையும் காக்கும் கடவுள் நீ என்கிறார்கள். ஆனால், எனக்கு பல குழந்தைகள் பிறந்தும் இறந்து விட்டன. அவற்றைக் காக்கும் பொறுப்பு பூமியில் வாழும் கடவுளான உனக்கில்லையா” என்றார். கிருஷ்ணரின் அருகில் இருந்த அர்ஜுனன்,”அந்தணரே! ஒருவர் பிறப்பதும் இறப்பதும் விதிவசத்தால் ஆனது.
இருந்தாலும், கிருஷ்ணராஜாவை நீர் தவறாக எண்ணக்கூடாது. எனவே, இந்த கிருஷ்ணரின் முன்னால் சபதம் செய்கிறேன். இனிமேல் உனக்கு பிறக்கும் குழந்தைகள் இறக்காமல் பார்த்து கொள்கிறேன். அப்படி இறந்தால் நான் அக்னியில் விழுந்து இறப்பேன்” என்றான். அந்தணர் மகிழ்ச்சியுடன் ஊர் திரும்பினார். ஆனால், பத்தாவது குழந்தையும் பிறந்து இறந்து விட்டது. இதைக் கேள்விப்பட்ட அர்ஜுனன் தீயில் இறங்கத் தயாரானான். கிருஷ்ணர் அவனைத் தடுத்து,”அர்ஜுனா! நான் அருகில் இருக்கும் போது, நீ அந்தணரிடம், குழந்தை பாக்கியம் வேண்டி கிருஷ்ணனை சரணாகதி அடைய வேண்டும் என கூறாமல், பிறக்கும் குழந்தைகளை இறக்காமல் நான் பார்த்து கொள்கிறேன் என்று ஆணவத்தால் கூறினாய். எனவே தான் பத்தாவது பிறந்த குழந்தையும் இறந்து விட்டது” என்றார். இதைக்கேட்ட அர்ஜுனனின் அகங்காரம் அழிந்தது. ஆனாலும், அவன் அக்னியில் விழுந்து வைகுண்டம் சேர்ந்தான். அங்கே, மகாவிஷ்ணு ஒரு இலிங்கத்தைக் கையில் வைத்தபடி தியானத்திலிருந்தார். அர்ஜுனன், “பகவானே! எனது ஆணவம் அழிந்தது. அந்தணருக்கு கொடுத்த வாக்கை தாங்கள் காப்பாற்றவேண்டும்” என வேண்டினான். மகாவிஷ்ணு அர்ஜுனனிடம் அந்த இலிங்கத்தைக் கொடுத்து, “நான் பூஜித்து வரும் இந்த இலிங்கத்தை, மலைநாட்டில், அந்தணர் வாழும் ஊரில் பிரதிஷ்டை செய். அந்தணரையும் அவரது குடும்பத்தையும் வழிபடச்சொல். இது சந்தான பாக்கியத்தை தரக்கூடியது” என்றார். அதன்படி அர்ஜுனன் இத்தலம் வந்து, அந்த இலிங்கத்தைப் பெருமாளின் கையில் இருக்கும்படியாக வைத்து, ஒரு சிலை வடிக்க ஏற்பாடு செய்தான். சிவலிங்கத்திற்குரிய ஆவுடையார் (பீடம்) மீது பெருமாள் கையில் இலிங்கத்துடன் அமர்ந்திருக்கும் சிலை தயாரானது. பெருமாளாக இருந்தாலும், சிவனுக்குரிய ஈஸ்வரப்பட்டத்தையும் சேர்த்து, “பூர்ணத்திரயேஸ்வரர்” என்ற திருநாமத்தை சூட்டினான். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், குழந்தை பிறந்தாலும் இறந்து விட்ட சூழ்நிலையில் அடுத்த குழந்தைக்காக காத்திருப் பவர்கள் இத்தலத்திற்கு வந்து வழிபாடு செய்தால் பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
கேரளாவிலுள்ள கோயில்களிலேயே இங்கு தான் முதன் முதலாக ஓணத்திருவிழா துவங்கும். இதன்பிறகுதான் மற்ற கோயில்களிலும், வீடுகளிலும் ஓணக் கொண்டாட்டம் துவங்கும். பெருமாளே நேரில் அமைக்கச்சொன்ன கோயில் என்பதால் இவ்வாறு செய்யப்படுகிறது.
இலிங்கத்தின் ஆவுடைக்கு மேல் பஞ்சலோகத்தால் ஆன பெருமாள் அமர்ந்த கோலம், பெருமாள் கையில் சிவலிங்கம் இருப்பதும், பெருமாளுக்கு பூர்ணத்திரயேஸ்வரர் என்ற சிவன் பெயர் இருப்பதும் தனி சிறப்பாகும்.
முதலில் கிழக்கில் உள்ள ஆலமரத்தையும் அதன் கீழ் உள்ள விநாயகரையும் வழிபட்டு, கோயிலின் உள்ளே நுழைந்தவுடன் வடக்கே கண்ணாடி பிம்பமாக உள்ள இரேணுகாதேவியை வழிபட வேண்டும். பின் எதிரே உள்ள தீபஸ்தம்பத்தையும், பலிபீடத்தையும் வணங்கி, இருபக்கமும் உள்ள சங்கு, சக்கரத்தை வணங்க வேண்டும். மகாமண்டபத்தில் பிருகு மகரிஷியை வழிபட்டு, கூத்தம்பலத்தில் உள்ள நந்திகேஸ்வரரையும், அருகில் உள்ள கடா விளக்கையும் வணங்க வேண்டும். இவ்விளக்கு ரிக், யஜுர், சாம வேதங்களை குறிக்கும் வகையில் 3 அடுக்குகளை கொண்டது. குழந்தை இல்லாதவர்கள் இந்த விளக்கை ஏற்றி வழிபடும் இந்த வழிபாட்டை “உலப்பன்னா” என்கின்றனர். இவ்வாறு வழிபாடு செய்துபிறக்கும் குழந்தை நீண்ட ஆயுளுடனும், சிறப்புடனும் விளங்கும். “பல்குண தீர்த்தம்” மிகப்பெரிய குளமாக கோயிலின் உள்ளே இருக்கிறது. அதன் பின் மூலஸ்தானத்தின் வெளியே காவல்புரியும் ஜெயன், விஜயனை வணங்கி, அதன் பின் மூலவரை வணங்க வேண்டும். கருவறையின் மேற்கு சுவரிலுள்ள துவாரம் வழியாக அர்ஜுனனை தரிசிக்கலாம்.
திருவிழா:
மாசி சுவாதி முதல் திருவோணம் நட்சத்திரம் வரையிலும், கார்த்திகை சுவாதி முதல் திருவோணம் நட்சத்திரம் வரையிலும் இரு பெரும் விழாக்கள்.
பிரார்த்தனை:
குழந்தை இல்லாதவர்கள் “கடாவிளக்கு” என்னும் 3 அடுக்குவிளக்கை ஏற்றி, பிரார்த்தனை செய்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் சாத்தி நேர்த்திக்கடன் செய்கின்றனர்.
வழிகாட்டி:
எர்ணாகுளத்திலிருந்து கிழக்கே 12 கி.மீ. தூரத்தில் திருப்பூனித்துறை உள்ளது. பஸ் வசதி இருக்கிறது.
Leave a Reply