நாகநாதசுவாமி திருக்கோயில், நாகப்பட்டினம்

அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில், நாகநாதர் சன்னதி, நாகப்பட்டினம், நாகப்பட்டினம் மாவட்டம்.

+91- 4365 – 241 091, 94429 29270

காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் நாகநாதர், ராமநாதர்
அம்மன் அகிலாண்டேஸ்வரி, பர்வதவர்த்தினி
தல விருட்சம் சரக்கொன்றை
தீர்த்தம் நாகதீர்த்தம்
ஆகமம் காமியம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் நாகப்பட்டினம்
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு

பாதாளத்தை ஆண்ட நாகவேந்தனாகிய ஆதிசேஷன் தனக்கு குழந்தை வேண்டி குடந்தை முதல் நாகைக்காரோணம் வரை நான்கு தலங்களுக்கும் சென்று வழிபடுவதை ஒரு நியமமாகக் கொண்டார். பின் இறைவன் அருளால் அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் அக்குழந்தை மூன்று தனங்களுடன் இருந்தது கண்டு வருந்தினர். அப்போது அசரீரி தோன்றி, “இக்குழந்தைக்கு தக்க வயது வந்தபோது இது எந்த ஆடவனைப் பார்க்கும்போது இதன் மிகை தனம் மறையுமோ, அவனே இவளுக்கு கணவனாவான்என்று கூறியது. அதன்படி, ஒருநாள், தேவதீர்த்தக்கரையில் அரசகுமாரன் சாடீசுகன் என்பவனைக் கண்டதும் மிகைதனம் மறைந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து காதல் கொண்டனர். காமவயப்பட்ட நாககன்னிகை, தன் பெற்றோரிடம் தெரிவித்து திருமணம் செய்துகொள்ள எண்ணி சுரங்க வழியாகப் பாதாளம் சென்றாள். பின் நாக கன்னிகையின் பிரிவால் வருந்திய அரசகுமாரன், பாதாளம் செல்லும் வழி தெரியாமல் பலவாறு புலம்பி இறைவனிடம் முறையிட்டான். இறைவன் அவனுக்கு பாதாளம் செல்லும் வழியைக் கூற, அவனும் அங்கு சென்று நாகன்னிகையை மணந்தான். தன் மகளை மணம் முடித்து கொடுத்தபின் நாகை காரோணம் வந்து தான் பிரதிஷ்டை செய்த நாகநாதர் கோயில் அருகில் குளம் அமைத்து, அதற்கு நாகதீர்த்தம் என்று பெயரிட்டார். ஆதிசேடன், மாசி சிவராத்திரியின் போது ஒவ்வொரு யாமமும் குடந்தை, திருநாகேஸ்வரம், திருப்பாம்புரம் ஆகிய தலங்களில் வழிபட்டு, நாலாம் யாமத்தில் நாகை காரோணரை மலர்கொண்டு வழிபட்டு பூஜையை நிறைவு செய்வார். ஒருநாள் நாகநாதர் இவனது பூஜையில் மகிழ்ந்து இறைவன் காட்சி தந்து, “வேண்டும் வரம் கேள்எனக் கூறினார்.அதற்கு ஆதிசேடன், “இறைவா, இந்நகர் என் பெயரால் வழங்க வேண்டும். நான் பிரதிஷ்டை செய்த லிங்கம் என் பெயர் கொண்டு விளங்கவும், தாங்கள் இதில் இருந்து வேண்டுபவர்களுக்கு வேண்டிய பலன்களை தந்தருள வேண்டும். மேலும் இவ்வூர் வளம்பெற்று விளங்க ஆறு ஒன்று இப்பகுதியில் ஓடிக் கடலில் கலக்க வேண்டும். இவ்வாறு காவிரி தோன்றுவதற்கு முன்னே தோன்றுவதால்,’விருத்த காவிரிஎனப் பெயர் பெற வேண்டும்என்றார். நாகனது வேண்டுகோளுக்கு இணங்கிய இறைவன், “அவ்வாறே ஆகட்டும்என்று வரமளித்தார். தங்கள் தலைவனாகிய நாகன் வந்து நகர் உண்டாக்கி, நாகநாத சுவாமியை பிரதிஷ்டை செய்து வழிபட்டு பேறுபெற்ற பெருமையை அறிந்து, வாசுகி, குளிகன், சங்கபாலன் ஆகியோர் இக்கோயில் வந்து நாகநாதரை வழிபட்டு, தங்கள் பெயரால் மேலத்திருச்சுற்றில் அருள்குறிகள் நிறுவிப் பூஜித்து பேறு பெற்றுப்போயினர்.

நாகநாத சுவாமி கோயில் வலது புறத்தில் உள்ள தென்திருச்சுற்று அருகில் அர்த்த மண்டபத்துடன் கூடிய ஒரு கோயில் உள்ளது. அதில் உள்ள இறைவனுக்கு, “ராமநாத சுவாமிஎன்று பெயர். இதற்கு ஒரு காரணம் உண்டு.

கோசலநாட்டின் தலைநகரான அயோத்தி வேந்தன் இராமபிரான் திருமுடி துறந்து, சிற்றன்னையின் சொற்படி மனைவி சீதையுடனும், தம்பி லட்சுமணனுடனும் கானகம் சென்றார். காட்டில் வாழ்ந்துவரும்போது இராமன் மனைவியை இராவணன் என்ற அசுரன் அபகரித்துச் சென்றான். மனைவியைத்தேடி, தம்பியும் தானுமாகக் காட்டில் பல இடங்களில் அலைந்துகொண்டு கிஷ்கிந்தை என்ற நகருக்கு வந்தார். கிஷ்கிந்தையின் மன்னனான சுக்ரீவனைக் கண்டு, அவனது நட்பைப் பெற்றார். அவனது உதவியால் வானரப்படைகளைக் கொண்டு இலங்கைத்தீவில் தன் மனைவி இருப்பதை அறிந்தார். இலங்கை செல்ல கடலில் பாலம் அமைக்க எண்ணினார். இவ்வாறு ஆலோசித்துக்கொண்டு தம்பியுடன் கீழக்கடற்கரை ஓரமாக வந்துகொண்டிருந்தார். வரும் வழியில் நாகைக்காரோணம் வந்தார். விருத்த காவிரி ஆற்றின் சங்கமத்தில் நீராடி, வெண்ணீறு அணிந்து, ஐந்தெழுத்தை உச்சரித்து கோயில் சென்று காரோணப் பெருமானை வணங்கினார். பின்பு அக்கோயிலின் மேல் திசையில் நாகன் பூஜித்த நாகநாதரை வணங்கினார். அப்பெருமானுக்கு தென்புறம் ஒரு அருள்குறி நிறுவ பூஜித்தார். பூஜைக்குகந்த பெருமான் அந்த லிங்கத்திலிருந்து வெளிப்பட்டார். சிவபெருமானைக்கண்ட ராமன் அவரை வலம்வந்து போற்றி வணங்கினார். தனது மனத்துயரை போக்குமாறு கேட்டுக்கொண்டார். பெருமானும் உனது குறைகளை கூறுவாய்என்றார். “என் மனைவியை ராவணன் என்ற அரக்கன் கவர்ந்து சென்றுள்ளான். அவன் வாழும் இலங்கை நகர் செல்ல கடலிடத்தை மலைகளால் அடைத்து வழிசெய்ய வரம் வேண்டும். அத்துடன் நீர் நான் நிறுவிய லிங்கத்துள் என்றும் இருந்து வழிபடுபவரது குறைகளைத் தீர்க்க வேண்டும். இந்த இலிங்கம் இராமநாதன் என்று என் பெயர் கொண்டு விளங்க வேண்டும்என்றார். அதன் காரணமாக இப்பாது இராமலிங்கம் என்று அழைக்கப்படுகிறது. இதைக்கேட்ட சிவன், “இங்கிருந்து பன்னிரண்டரை மைல் எல்லை வரையில் என்னுடைய பராசக்தியால் அதிஷ்டிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள கடலில் இரண்டேகால் மைல் தூரம் வரை கங்கை, யமுனை முதலிய புனித நதிகளின் புனல்கள் கலந்துள்ளன. சிறந்த தவமுடைய சித்தர்களும் இங்கு குடில் அமைத்துக்கொண்டு தவம் செய்து வருகின்றனர். குறு முனிவரான அகத்தியரும் இத்தலத்தில் வசிக்கின்றார். இத்தலத்தை நினைப்பவர்களுக்கு மனஅமைதி உண்டாகும். வேதாரண்யம் என்ற திருமறைக்காடு இத்தலத்தின் தென்கரை ஓரம் உள்ளது. அதற்கு தெற்கே மகிஷனைக் கொன்ற கொற்றவை வாழும் காடு உள்ளது. அவள் அருளால் அங்கு சென்று கடலில் அணைகட்டி தென்னிலங்கைக் கோமானைக் கொன்று கற்பரசியாகிய உன் மனையாளை மீட்டுக்கொண்டு வருவாய். அயோத்தி திரும்பும்போது இங்கு வந்து உன்னால் பூஜிக்கப்பெற்ற இந்த லிங்கத்தை வழிபட்டுச்செல்என பணித்தார். “கிரகண காலங்களிலும், அர்த்தோதய, மகோதய புண்ணிய காலங்களிலும் இக்கடலில் மூழ்கி உன்னால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ராமநாதனை வணங்குவோர் சிறந்த பேறு பெறுவர்.” எனக் கூறி அருள்செய்தார்.

சிவபெருமான் கூறியவாறே இராமன், இராவணவதம் நிகழ்த்தி, சீதையை சிறை மீட்டுக்கொண்டு திரும்ப நாகை அடைந்தார்; சீதையுடன் கடலில் நீராடி, கருந்தடங்கண்ணி உடனாய காரோணரை வழிபட்டு, முன்பு தான் பிரதிஷ்டை செய்த மூர்த்தியாகிய இராமநாதரை வழிபட்டு, பின் தன் நகராகிய அயோத்திக்கு எழுந்தருளினார்.

இது கிருத்திகை நட்சத்திர பரிகார தலம் ஆகும். இக்கோயிலில் நவக்கிரகங்கள் கிடையாது.

இங்கு விநாயகர், பஞ்ச இலிங்கங்கங்கள், வள்ளி தெய்வானையுடன் ஆறுமுகர், துர்க்கை, சண்டிகேஸ்வரர், சூரியன், பைரவர், சனிபகவான் ஆகியோர் சன்னதிகள் உள்ளன. இங்கு தெட்சிணாமூர்த்தி தனி கோயிலில் அருள்பாலிக்கிறார். இத்தல விநாயகர் வலஞ்சுழி விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இங்கு நாகருக்கு காப்பரிசி நைவேத்தியம் செய்யப்படுகிறது.

இங்கு மூலவர் நாகநாதர் 7 அடி உயரத்தில் காட்சி தருகிறார். இங்கு நாகநாதர், இராமநாதர் என்ற இரு சிவன் சன்னதிகளும், அகிலாண்டேஸ்வரி, பர்வதவர்த்தினி என்ற இரு அம்மன் சன்னதிகளும் தனித்தனியாக உள்ளது சிறப்பு. இராமநாதர் சன்னதியில் இராமரின் பாதம் உள்ளது. இக்கோயில் மூலவரின் திருநாமத்தின் அடிப்படையில்தான் இந்த ஊருக்கே நாகப்பட்டினம்என்ற பெயர் வந்தது.

திருவிழா:

சித்திரை மாத பருவ விழா, ஆடி மாதம் முழுவதுமே இங்கு திருவிழாதான். தை கார்த்திகை

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்குத் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *