அருள்மிகு புண்டரீகாட்சன் (தாமரைக்கண்ணன்) திருக்கோயில், திருவெள்ளறை
அருள்மிகு புண்டரீகாட்சன் (தாமரைக்கண்ணன்) திருக்கோயில், திருவெள்ளறை-621 009, திருச்சி மாவட்டம்.
+91- 431-256 2243, 93451 18817 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 7 மணி முதல் 1.15 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | புண்டரீகாட்சன் |
உற்சவர் | – | பங்கயச்செல்வி |
தாயார் | – | செண்பகவல்லி |
தல விருட்சம் | – | வில்வம் |
தீர்த்தம் | – | குச, மணிகர்ணிகா, சக்ர, புஷ்கல, வராக, கந்த, பத்ம தீர்த்தம் |
பழமை | – | 1000-2000 வருடங்களுக்கு முன் |
ஊர் | – | திருவெள்ளறை |
மாவட்டம் | – | திருச்சி |
மாநிலம் | – | தமிழ்நாடு |
ஒரு முறை திருப்பாற்கடலில் மகாவிஷ்ணுவும், மகாலட்சுமியும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது பெருமாள்,”இலட்சுமி, உனது கருணையால் இந்த உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் மிகவும் சந்தோஷமாக உள்ளது. இதனால் எனக்கு பரம திருப்தி ஏற்படுகிறது. எனவே உனக்கு வேண்டிய வரத்தை என்னிடமிருந்து கேட்டுப் பெறலாம்” என்கிறார். அதற்கு இலட்சுமி,”தங்களின் திருமார்பில் நித்யவாசம் செய்யும் எனக்கு வேறு வரம் எதற்கு” என்கிறாள். “இருந்தாலும், எனது பிறந்த இடமான இந்தப் பாற்கடலில், தேவர்களை காட்டிலும் எனக்குத்தான் அதிக உரிமை வேண்டும்” என்கிறாள். அதற்குப் பெருமாள்,”உனது கோரிக்கையை இங்கு நிறைவேற்ற முடியாது. இங்கு நான்தான் அனைத்துமாக இருக்கிறேன். இருந்தாலும் பூமியில் சிபி சக்கரவர்த்திக்கு நான் தரிசனம் தரும்போது உனது விருப்பத்தை நிறைவேற்றி வைக்கிறேன்” என்கிறார்.
ஒரு முறை இந்தியாவின் தென்பகுதியில் ராட்சஷர்கள் மிகுந்த தொல்லை கொடுத்து வந்தார்கள். அவர்களை அடக்க சிபி சக்கரவர்த்தி தன் படைகளுடன் செல்லும் போது ஒரு வெள்ளைப் பன்றி அவர்கள் முன் தோன்றி இவர்களுக்குப் பெரும் தொந்தரவு கொடுத்தது. படைவீரர்களால் அந்த பன்றியை பிடிக்க முடியாமல் போக, சக்ரவர்த்தியே அதை பிடிக்கச் சென்றார். பன்றியும் இவரிடம் பிடிபடாமல் இங்கு மலைமீதுள்ள புற்றில் மறைந்து கொண்டது. அரசனும் இதை பிடிக்க மலையை சுற்றி வரும் போது, ஒரு குகையில் மார்க்கண்டேய முனிவர் கடுமையாகத் தவம் செய்து கொண்டிருப்பதை கண்டு அவரிடம் விஷயத்தை கூறினான். அதற்கு முனிவர்,”நீ மிகவும் கொடுத்து வைத்தவன். நாராயணனின் தரிசனத்திற்குத்தான் நான் தவம் செய்து கொண்டிருக்கிறேன். ஆனால் அவர் உனக்கு வராக (பன்றி) உருவத்தில் உனக்கு காட்சி கொடுத்திருக்கிறார். நீ இந்தப் புற்றில் பாலால் அபிஷேகம் செய்” என்கிறார். அரசனும் அப்படியே செய்ய நாராயணன் தோன்றி அனைவருக்கும் காட்சி கொடுக்கிறார். இந்தத் தரிசனத்திற்கு வந்த மகாலட்சுமியிடம்,”நீ விரும்பியபடி இத்தலத்தில் உனக்கு சகல அதிகாரத்தையும் தந்து விட்டு, அர்சாரூபமாக இருந்து கொண்டு நான் அனைவருக்கும் அருள்பாலிக்கிறேன்” என்கிறார் பெருமாள். இதன் பின் அரசன் அனைவரிடமும் விடைபெற்று இராட்சஷர்களை அழிக்கச் சென்றான். ஆனால் மார்க்கண்டேயர், “இவர்களை அழிக்க, பெருமாள் இராம அவதாரம் எடுக்க உள்ளார். எனவே நீ திரும்ப நாட்டை ஆளச் செல்” என்கிறார். ஆனால் மன்னனுக்கு மனம் திருப்தி அடையவில்லை. அதற்கு மார்க்கண்டேயர்,”உனக்குத் தரிசனம் கொடுத்த பெருமாளுக்கு நீ கோயில் கட்டித் திருப்தி பெறுக” என்கிறார். அரசனும் கோயில் கட்டி, சேவை செய்வதற்காக 3700 குடும்பங்களை அழைத்து வந்தான். வரும் வழியில் ஒருவர் இறந்து விட்டார். உடனே பெருமாள் அரசனிடம் சென்று, “நீ கவலைப்பட வேண்டாம். நானே இறந்தவருக்கு பதிலாக 3700 பேரில் ஒருவராக இருந்து, நீ நினைத்த மூவாயிரத்து எழுநூறு குடும்பக்கணக்கு குறைவு படாமல் பார்த்து கொள்கிறேன்” என்கிறார். பெருமாள் அளித்த வரத்தின் படி, தாயார் செங்கமலவல்லி மூலஸ்தானத்திலேயே இருந்து கொண்டு, திருவிழா காலங்களில் பெருமாளுக்கு முன்பாக பல்லக்கில் எழுந்தருளுகிறார்.
108 திருப்பதிகளுள் ஒன்றான இத்தலத்தில் உய்யக்கொண்டார் எங்களாழ்வான் அவதாரம் செய்துள்ளார். இங்குள்ள பெருமளைத் தரிசிக்க 18 படிகளை கடக்க வேண்டும். இவை கீதையின் 18 அத்தியாயங்களை குறிக்கிறது. அடுத்த கோபுர வாயிலில் 4 படிகள் உள்ளது. இவை நான்கு வேதங்களை குறிக்கிறது. அதன் பின் பலிபீடத்தை வணங்கி ஐந்து படிகளை கடக்க வேண்டும். இவை பஞ்சபூதங்களை குறிக்கிறது. பிறகு சுவாமியை தரிசிக்க இரண்டு வழிகள் உள்ளது. முதல் வழி “தட்சிணாயணம்” ஆடி முதல் மார்கழி வரை திறந்திருக்கும். இரண்டாவது வழி “உத்தராயணம்” தை முதல் ஆனி வரை திறந்திருக்கும். இங்கு பலிபீடமே மிகவும் சிறப்பு. பலிபீடத்தின் முன் தங்கள் கோரிக்கை நிறைவேற வேண்டிக்கொண்டு, நிறைவேறிய பின் “பலிபீட திருமஞ்சனம்” செய்து பொங்கல் படையல் செய்து பிரார்த்தனையை நிறைவேற்றுவார்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கார்த்திகை ஞாயிற்றுக்கிழமைகளில் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி, பெருமாளுக்கு அமுது செய்த பொங்கலைச் சாப்பிட்டால் “புத்ரபாக்கியம்” நிச்சயம் என்பது ஐதீகம். இத்தலப் பெருமாள் கிழக்கு பார்த்த நின்ற திருக்கோலத்தில் உள்ளார். இவருக்கு மேல் உள்ள விமானம் விமலாக்ருத விமானம் எனப்படும். இவரை கருடன், சிபி, மார்க்கண்டேயர், பிரம்மா, சிவன் ஆகியோர் தரிசனம் செய்துள்னர்.
சுமார் 50 அடி உயரத்தில் வெண்மையான பாறையால் ஆன ஒரு குன்றின் மீது இக்கோயில் அமைந்துள்ளதால் “வெள்ளறை” என்ற பெயர் பெற்று மரியாதை நிமித்தமாக “திருவெள்ளறை” ஆனது. முன் கோபுரம் பூர்த்தியாகாத நிலையில் உள்ளது. புண்டரீகன் என்ற யோகி திருவெள்ளறையில் ஒரு நந்தவனம் அமைத்து அதில் வளர்ந்த துளசியால் பெருமாளையும் தாயாரையும் பூஜித்து வந்தார். இதில் மகிழ்ந்த பெருமாள் இவருக்கு தரிசனம் கொடுத்தார். இதனாலேயே இங்குள்ள பெருமாள் புண்டரீகாட்சப்பெருமாள்” ஆனார். கோயில் கோட்டை போல் அமைக்கப்பட்டுள்ளது. பெரிய பிரகாரத்தில் தென்பகுதியில் கல் அறைகள் உள்ளது. இங்கிருந்து ஒலி எழுப்பினால் எதிரொலி தெளிவாக கேட்கும்.
பாடியவர்கள்:
திருமங்கையாழ்வார், பெரியாழ்வார். மங்களாசாஸனம்
ஆறினோடொரு நான்குடை நெடுமுடியரக்கன்றன் சிரமெல்லாம் வேறு வேறுக வில்லது வளைத்தவனே எனக்கருள் புரியே மாறில் சோதிய மரகதப் பாசடை தாமரைமலர் வார்த்த தேறல் மாந்தி வண்டின்னிசை முரல் திருவெள்ளறை நின்றானே.
–திருமங்கையாழ்வார்
திருவிழா:
சித்திரை கோடைத் திருநாள், சித்ராபவுர்ணமி, கஜேந்திர மோட்சம், ஆவணி ஸ்ரீஜெயந்தி, வீதியடி புறப்பாடு, பங்குனி திருவோணம் நட்சத்திரத்தில் பிரமோற்சவம்.
பிரார்த்தனை
குழந்தை பாக்கியம் வேண்டிப் பிரார்த்தனை செய்யப்படுகிறது.
நேர்த்திக்கடன்:
நிறைவேறிய பின் “பலிபீட திருமஞ்சனம்” செய்து பொங்கல் படையல் செய்து பிரார்த்தனையை நிறைவேற்றுவார்கள்.
வழிகாட்டி:
திருச்சி–துறையூர் சாலையில் 20 கி.மீ தூரத்தில் திருவெள்ளறையில் இக்கோயில் அமைந்துள்ளது. திருச்சி சத்திரம் பஸ்ஸ்டாண்டிலிருந்து திருவெள்ளறைக்கு அடிக்கடி பஸ் வசதி உள்ளது.
அருகிலுள்ள ரயில் நிலையம் : திருச்சி
அருகிலுள்ள விமான நிலையம் : திருச்சி
தங்கும் வசதி : திருச்சி
Leave a Reply