Tag Archives: தஞ்சாவூர்
அருள்மிகு கோடியம்மன் கோயில், தஞ்சாவூர்
அருள்மிகு கோடியம்மன் கோயில், தஞ்சாவூர்– 613001, தஞ்சாவூர் மாவட்டம்
**************************************************************************************
+91-93671 82045 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் 8.00 மணி வரையும் கோயில் திறந்திருக்கும்.
உற்சவர்: – பச்சைக்காளி, பவளக்காளி
பழமை: – 500-1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர்: – தஞ்சபுரி, அழகாபுரி
ஊர்: – தஞ்சாவூர்
மாநிலம்: – தமிழ்நாடு
தற்போது கோயில் இருக்கும் பகுதி தேவர்கள் தவம் செய்த சோலைவனமாக இருந்தது. அங்கிருந்தபடியே அவர்கள் இறைவனை வழிபட்டு வந்தனர். அவர்களுக்கு இணையாக இறைவனை வழிபட்ட தஞ்சன் என்ற அசுரன் தேவர்களுக்கும் அதிகமான தகுதியைப் பெற்றான். தகுதியின் காரணமாக வரம் கிட்டியது. வரத்தின் சக்தியால் தேவர்களைத் துன்பம் செய்துவந்தான். தேவர்கள் ஒன்றுகூடி சிவனிடம் தஞ்சம் புகுந்தனர். எனவே இறைவன் தஞ்சபுரீசுவரர் என அழைக்கப்பட்டார். அவர் தனது அம்பிகையான ஆனந்தவல்லியிடம் தஞ்சனை அழிக்கும் பொறுப்பை ஒப்படைத்தார். ஆனந்தவல்லி பச்சைக்காளியாக வடிவெடுத்து அசுரனை அழிக்க வந்தாள். அசுரனோ, மடிய மடிய மீண்டும் தோன்றினான். இவ்வாறு கோடி அவதாரங்கள் எடுத்தான். இதனால் கோபமடைந்த ஆனந்தவல்லியின் முகம் சிவந்தது. அவள் சாந்தத்தை கைவிட்டு பவளக்காளியாக மாறினாள் (பவளம் – சிவப்பு நிறம்). தஞ்சனை வதம் செய்தாள். தஞ்சனின் உடலிலிருந்து பெருகிய ரத்தம் ஆறாக ஓடியது. அந்த எதிரொளிப்பில் அம்பாளின் உருவமே சிவப்பானது. கோடி அவதாரம் எடுத்த அசுரனை அழித்ததால் அம்பாள் கோடி அம்மன் என்றும் வழங்கப்பட்டாள்.
அருள்மிகு வல்லப அம்பிகா சமேத சுவேத விநாயகர் (வெள்ளை விநாயகர்) திருக்கோயில், தஞ்சாவூர்
அருள்மிகு வல்லப அம்பிகா சமேத சுவேத விநாயகர் (வெள்ளை விநாயகர்) திருக்கோயில், கீழவாசல், தஞ்சாவூர்.
காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர்: – வல்லப அம்பிகா சமேத சுவேத விநாயகர்
தல விருட்சம்: – நாகலிங்க மரம்
பழமை: – 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர்: – கீழவாசல்
மாநிலம்: – தமிழ்நாடு
வல்லபை என்பவள் சாபத்தால் அரக்கியாக மாறி, முனிவர்களையும் தேவர்களையும் அச்சுறுத்தி வந்தாள். அனைவரும் சேர்ந்து சிவனிடம் வந்து முறையிட்டனர். அவரோ பாலமுருகனைப் போருக்கு அனுப்பினார். அரக்கியைக் கண்டு பயப்படுவதுபோல் நடித்த பாலமுருகன், அண்ணனை அனுப்பி வைத்தார். தனக்கு எதிரே தைரியமாக நின்ற விநாயகரைக் கண்டு சிலிர்த்தாள் வல்லபை. அவளை அப்படியே துதிக்கையால் தூக்கித் தனது மடியில் அமர்த்திக் கொண்டார் கணபதி. மனித உடலும் மிருக முகமும் கொண்டவரால் சாபத்தில் இருந்து விமோசனம் கிடைக்கும் என்று அறிந்திருந்த வல்லபை, அந்த நிமிடமே பழைய உருவத்தைப் பெற்றாள். விநாயகரையே மணம் புரிந்தாள். அதுவே இந்தத் தலம் என்கிறது தல புராணம்.
இக்கோயிலை வெள்ளை விநாயகர் கோயில் என்று கேட்டால் தான் அனைவருக்கும் தெரியும். இந்தக் கோயிலில் விநாயகருக்குள் (மூலவர்) வல்லபா தேவி ஐக்கியமாகி, அரூபமாகக் காட்சி தருவதாக நம்பிக்கை. அதேநேரம் உற்சவர், மனைவி சகிதமாகக் காட்சி தருகிறார். வியாழக் கிழமைகளில் பைரவருக்கு சிறப்பு பூசைகள் நடைபெறுகின்றன. நடராஜரின் சுதைச் சிற்பத்தையும் இங்கு காணலாம்.