Monthly Archives: February 2012
அருள்மிகு காரைக்காலம்மையார் திருக்கோயில், காரைக்கால்
அருள்மிகு காரைக்காலம்மையார் திருக்கோயில், காரைக்கால், புதுச்சேரி.
+91- 4368 – 222 717 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | காரைக்காலம்மையார் | |
அம்மன் | – | காரைக்காலம்மையார் | |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன்பு | |
ஊர் | – | காரைக்கால் | |
மாவட்டம் | – | புதுச்சேரி | |
மாநிலம் | – | புதுச்சேரி |
முன்னொரு காலத்தில் காரைவனம் எனப்பட்ட இப்பகுதியில் வசித்த தனதத்தன், தர்மவதி தம்பதியருக்கு புனிதவதி என்ற மகள் பிறந்தாள். சிவன் மீது பக்தி கொண்டிருந்த அவளை, பரமதத்தன் என்ற வணிகனுக்கு மணமுடித்து கொடுத்தனர். திருமணமான பின்னரும் அவள் சிவசேவையில் நாட்டம் கொண்டிருந்தாள். ஒருசமயம் ஒரு சிவபக்தர் மூலமாக, இரண்டு மாங்கனிகளை பரமதத்தனிடம் கிடைக்கும்படி செய்தார் சிவன். கனிகளை பெற்ற பரமதத்தன், அதனை வீட்டிற்கு கொடுத்து விட்டான். சிவன், அவனது வீட்டிற்கு அடியார் வேடத்தில் சென்றார். கணவன் இல்லாத வேளையில் வந்த அவரை வரவேற்ற புனிதவதி அன்னத்துடன் ஒரு மாங்கனியையும் படைத்தாள். சாப்பிட்ட அடியார் அங்கிருந்து சென்று விட்டார். வீட்டிற்கு வந்த பரமதத்தனுக்கு அன்னம் பரிமாறிய புனிதவதி, ஒரு மாங்கனியை வைத்தாள். அதன் சுவை நன்றாக இருக்கவே, மற்றொரு கனியையும் தனக்கு வைக்கும்படி கேட்டான் பரமதத்தன். கணவன் பேச்சை அப்படியே கேட்ட புனிதவதி செய்வதறியாது திகைத்தாள். சமையலறைக்குள் சென்று, தனக்கு ஒரு கனி கிடைக்க சிவனிடம் வேண்டினாள். அவள் கையில் ஒரு மாம்பழம் வந்து அமர்ந்தது. அதனை கணவனுக்கு படைத்தாள் புனிதவதி. முதலில் வைத்த மாங்கனியைவிட அதிக சுவையுடன் இருந்ததால் சந்தேகமடைந்த பரமதத்தன், காரணம் கேட்டான். புனிதவதி நடந்ததை கூறினாள். பரமதத்தன் நம்பவில்லை. சிவன் கனி தந்தது உண்மையானால், மீண்டும் ஒரு கனியை வரவழைக்கும்படி கூறினான். புனிதவதியும் சிவனை வணங்கவே, கனி கைக்கு வந்தது. தன் மனைவி தெய்வப்பிறவி என நினைத்த பரமதத்தன், அவளை விட்டுப் பிரிந்தான். வேறு ஊருக்கு சென்று மற்றொரு பெண்ணை மணம் முடித்துக் கொண்டான். அவளுக்கு பிறந்த குழந்தைக்கு “புனிதவதி” என்று பெயர் வைத்தான். புனிதவதி இதையறிந்து கணவனை அழைக்கச் சென்றாள். அவன் அவளை தெய்வமாகக் கருதிக் காலில் விழுந்தான். புனிதவதியார் தன் கணவனுக்கான உடல் தனக்கு வேண்டாம் என்று சிவனை வேண்டி, சதையை உதிர்த்து, எலும்பாகி முதிய வடிவம் பெற்றார். அப்போது “கைலாயம் செல்க” என அசரீரி உரைத்தது. கைலாயம் புனிதமான இடம் என்பதால், கால் ஊன்றாமல், தரையில் தலையை ஊன்றி தலைகீழாக கைலாயம் சென்றார் அந்த அம்மை. சிவன் அவரை எதிர்கொண்டு “தாயே சுகமாக வந்தனையா?” என்றார். தன் நடனத்தை காட்டியருளினார். புனிதவதியாருக்கு அவர் பிறந்த ஊரில், கோயில் கட்டப்பட்டது.
அருள்மிகு சிவகாமசுந்தரி உடனுறை காளீஸ்வரர் திருக்கோயில், வில்லியநல்லூர்
அருள்மிகு சிவகாமசுந்தரி உடனுறை காளீஸ்வரர் திருக்கோயில், வில்லியநல்லூர், மயிலாடுதுறை தாலுகா, நாகப்பட்டினம்.
காலை 7 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | காளீஸ்வரர் | |
அம்மன் | – | சிவகாமசுந்தரி | |
தலவிருட்சம் | – | வில்வமரம் | |
தீர்த்தம் | – | ஹோம குளம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | வில்லியநல்லூர் | |
மாவட்டம் | – | நாகப்பட்டினம் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
ஒவ்வொரு யுகத்தில் தெய்வ அவதாரங்கள் வெவ்வேறு வகையில் நிகழும். அப்படி ஒரு யுகத்தில்தான் கண்ணுதற் கடவுளுக்கும் முன்பாகவே பிறந்துவிட்டார் கணேசன். அதன்பின்னர், பார்வதி கேட்ட வரத்தின்படி முதற்கடவுளே அவளது மூத்த மகனாகவும் அவதரித்தார். முதல் யுகத்தில்தான் சிவ– பார்வதி கல்யாணத்தை தாமே வேதியராக இருந்து நடத்தி வைத்திருக்கிறார் விநாயகர். அந்தக் கல்யாணம் நடந்த தலம் திருமணஞ்சேரி. மகேசனுக்கும் மகேஸ்வரிக்கும் திருமணம் நடத்தி வைக்க பிள்ளையார் வந்தபோது, அவர் இங்கேயே தங்கி நீராடி, நியமநிஷ்டைகளோடு தினசரி பூஜைகள் செய்தது, இத்தலத்து ஈசனுக்குத்தான். இன்னொரு விசேஷம் இங்கே பிள்ளையார் தனியாக இல்லை. இரட்டை வடிவெடுத்து தானே தன்னுடன் இருக்கும் இரட்டைப் பிள்ளையாராக காட்சி தருகிறார். ஒரு வடிவில் இங்கே சிவபூஜை நடத்திய கணபதி. மற்றொரு வடிவில் திருமணஞ்சேரியில் நடந்த உமா மகேசர் திருமணத்தில் வேதியராக இருந்தாராம். எனவே இரட்டை வடிவம்.
காளீஸ்வரர் கோயிலுக்குச் செல்லும் வழியிலேயே வெகு அருகிலே தனிக் கோயில் கொண்டிருக்கிறார், இந்தத் தந்தமுகன். இவர் கோயிலருகே இருக்கும் குளம், ஹோமம் நடத்துவதற்குரிய புனித நீருக்காக கணபதியால் அமைக்கப்பட்டது. அதனால் ஹோம குளம் என்றே பெயர். சிவ–பார்வதி திருமணம் நடந்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டபோது, அசுர சக்திகள் பல அதனைத் தடுத்திட முயன்றனவாம். அப்போது அம்பிகை விஸ்வரூபக் காளி வடிவெடுத்து அந்தத் தீய சக்திகளை அழித்தாள். அதன்பிறகும் கோபம் தணியாமல் இருந்த அவளை, ஈசன் மையலோடு நோக்கினார். அந்தப் பார்வை கண்டு நாணிய அம்பிகை சிறிய வடிவுக்கு மாறி, குளிர்ந்த நிலவு போல் ஆனாள். சிவனின் விருப்பத்திற்கு உரியவள் என்பதால் சிவகாமசுந்தரியானது அவளது திருநாமம்.
காளியை சினம் தணியச் செய்ததால் இவரது திருநாமம் காளீஸ்வரர் என்று ஆனது.