Monthly Archives: February 2012
அருள்மிகு கல்யாணவரதராஜர் திருக்கோயில், கொழுமம்
அருள்மிகு கல்யாணவரதராஜர் திருக்கோயில், கொழுமம், கோயம்புத்தூர், கோயம்புத்தூர் மாவட்டம்.
+91-4252 – 278 644 , 93451-96814 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | கல்யாணவரதராஜர் | |
தாயார் | – | வேதவல்லி | |
தல விருட்சம் | – | வில்வம் | |
தீர்த்தம் | – | அமராவதி தீர்த்தம் | |
ஆகமம் | – | பாஞ்சராத்ரம் | |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | சங்கரராம நல்லூர் | |
ஊர் | – | கொழுமம் | |
மாவட்டம் | – | கோயம்புத்தூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
இப்பகுதியை சோழமன்னன் ஒருவன் ஆட்சி செய்தபோது, நாட்டில் மழை வளம் பொய்த்து, நீர்நிலைகள் வற்றியது. இதனால், மக்கள் பஞ்சத்தில் வாடினர். நாட்டில் குறைவிலாது மழை பெய்து, மக்கள் வாழ்வில் சிறக்க அருளும்படி மன்னர், மகாவிஷ்ணுவிடம் வேண்டிக்கொண்டார். அவருக்கு காட்சி தந்த விஷ்ணு, மழைவளம் அருளினார். நாடு செழித்தது. மக்களுக்கு அருளிய மகாவிஷ்ணுவிற்கு மன்னர், இவ்விடத்தில் கோயில் கட்டினார்.
இத்தலத்திற்கு அருகில் சிவாலயம் ஒன்று உள்ளது. சைவம், வைணவத்தை இணைக்கும் விதமாக இவ்விரு ஆலயங்களும் ஒரே காலகட்டத்தில் கட்டப்பட்டுள்ளது. இதனால், இவ்வூர் முன்பு சிவனின் திருப்பெயரான “சங்கரன்” பெருமாளின் திருநாமமான “ராமன்” என்ற பெயர்களை இணைத்து “சங்கரராமநல்லூர்” என்ற பெயரில் அழைக்கப்பட்டது. சைவ, வைணவ இணைப்புத்தலமென்பதால், சுவாமிக்கு வலப்புறம் அமர்ந்த கோலத்தில் உள்ள வேதவல்லி தாயாருக்கு வில்வ இலைகளைக் கொண்டே பூஜைகள் செய்யப்படுகிறது.
அமராவதி நதியின் தென்கரையில் சுற்றிலும் பசுமையுடன் அமைந்துள்ள இத்தலத்தில், ஸ்ரீதேவி, பூதேவியுடன் வரதராஜர் திருமணக்கோலத்திலும், அவருக்கு வலப்புறம் தனிச்சன்னதியில் தாயாரும் அருளுகின்றனர். முன் புறம் கருடாழ்வார் இருக்கிறார். சுவாமியின் பாதமும் உள்ளது.
கோயில் முகப்பில் உள்ள மண்டபத்தின் தூணில் இருக்கும் வீரஆஞ்சநேயர், வாயுமூலையை பார்த்தபடி வரதராஜரை நோக்கி உள்ளார். இதன்மூலம் தன் தந்தைக்கும், நாராயணனுக்கும் ஒரே நேரத்தில் மரியாதை தருவதை இங்கு காணமுடிகிறது. இவரது திருவுருவத்திற்கு மேலே சுதர்சன சக்கரம் பொறிக்கப்பட்டுள்ளது. வியாச முனிவர், இவரை வழிபட்டு அருள் பெற்றுச் சென்றுள்ளார். கோயில் வளாகத்திற்கு வெளியே கொடிமரம் உள்ளது.
அருள்மிகு சீனிவாச ஆஞ்சநேயப் பெருமாள் திருக்கோயில், உடுமலைப்பேட்டை
அருள்மிகு சீனிவாச ஆஞ்சநேயப் பெருமாள் திருக்கோயில், உடுமலைப்பேட்டை, கோயம்புத்தூர் மாவட்டம்.
+91- 4252 – 224 755 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | சீனிவாசர் | |
உற்சவர் | – | வரதராஜப்பெருமாள் | |
தீர்த்தம் | – | சஞ்சீவி தீர்த்தம் | |
ஆகமம் | – | பாஞ்சராத்ரம் | |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | உடுமலைப்பேட்டை | |
மாவட்டம் | – | கோயம்புத்தூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
பல்லாண்டுகளுக்கு முன்பு, குழந்தைப்பேறு இல்லாமல் இருந்த பெருமாள் பக்தர் ஒருவர், குழந்தை வேண்டி திருப்பதி வெங்கடேசரை தொடர்ந்து வணங்கி வந்தார். ஓர்நாள், ஆஞ்சநேயரிடம் முறையிட்ட அவர், “எனக்கு குழந்தை வரம் அருள, பெருமாளிடம் பரிந்துரைக்கமாட்டாயா” என்று கூறி வேண்டினார். அன்றிரவில் அவரது கனவில் தோன்றிய ஆஞ்சநேயர், “அரசமரங்கள் நிறைந்த வனத்தின் நடுவே உள்ள புற்றின் அருகில் பெருமாள் சிலை கவனிப்பாரற்று கிடக்கிறது. அச்சிலையை எடுத்து கோயில் கட்டி வழிபட்டால் குழந்தை வரம் கிடைக்கும்” என்றார். அதன்படி பக்தர், பெருமாளைக் கண்டெடுத்து கோயில் கட்டினார். குழந்தை வரமும் கிடைத்தது. பின்னர் தனக்கு அருளிய ஆஞ்சநேயரையும் பெருமாளின் அருகிலேயே வைத்தார்.
வடக்கு நோக்கிய தலம் என்பதால் செல்வச்சிறப்பு வேண்டுவோர் இத்தலத்தில் வழிபடலாம். ஆஞ்சநேயரும், பெருமாளும் இணைந்துள்ளதால், சீனிவாச ஆஞ்சநேயப்பெருமாள் என்று மூலவருக்கு பெயர் சூட்டப்பட்டது. மேலும் மத்வாச்சாரியார், இராகவேந்தர் ஆகியோரும் பெருமாள் அருகில் உள்ளனர். மூலவர், மகாலட்சுமியை தனது மார்பில் தாங்கியவர் என்பதால் இங்கு தாயாருக்கு தனிச்சன்னதி இல்லை. பிரசாதமாக அட்சதை வழங்கப்படுவது சிறப்பு.