Monthly Archives: January 2012

அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில், திருப்போரூர்

அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில், திருப்போரூர், காஞ்சிபுரம் மாவட்டம்.

+91 44- 2744 6226, 90031 27288 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

கந்தசுவாமி

அம்மன்

புண்ணியகாரணியம்மன்

பழமை 500 வருடங்களுக்கு முன்
புராணப்பெயர்

தாருகாபுரி, சமராபுரி

ஊர்

திருப்போரூர்

மாவட்டம் காஞ்சிபுரம்
மாநிலம் தமிழ்நாடு

முருகப்பெருமான் அசுரர்களை அழிக்க அவர்களுடன் மூன்று இடங்களில் போரிட்டார். திருச்செந்தூரில் கடலில் போரிட்டு மாயையை (உலகம் நிலையானது என்ற எண்ணம்) அடக்கினார். திருப்பரங்குன்றத்தில் நிலத்தில் போர் செய்து கன்மத்தை (வினைப்பயன்) அழித்தார். இங்கு விண்ணில் போர் புரிந்து ஆணவத்தை அடக்கி ஞானம் தந்தார். இங்கு கந்தசுவாமிஎன்ற பெயரில் எழுந்தருளியுள்ளார். பொதிகை செல்லும் வழியில் அகத்தியர், இங்குள்ள முருகனைத் தரிசித்துள்ளார். தாரகனுடன் போர் நடந்ததால் இத்தலத்திற்கு போரூர், தாருகாபுரி, சமராபுரி என்ற பெயர்கள் ஏற்பட்டன. கந்தசஷ்டி கவசத்தில் இத்தலத்து முருகனை சமராபுரிவாழ் சண்முகத்தரசே எனக் குறிப்பிட்டுள்ளார் பாலதேவராய சுவாமி. இக்கோயில் ஒரு காலத்தில் மண்ணில் புதையுண்டு போனது. சுவாமி சிலையும் ஒரு பனை மரத்தடியில் இருந்தது. மதுரையில் வசித்த சிதம்பர சுவாமியின் கனவில் தோன்றிய முருகன், இதுபற்றி அவருக்கு தெரிவித்தார். சிதம்பர சுவாமி இங்கு வந்து, முருகன் சிலையைக் கண்டெடுத்து பிரதிஷ்டை செய்தார். காட்டை சீர்திருத்தி புதிய கோயில் எழுப்பினார். கந்தசுவாமியைப் போற்றி 726 பாடல்கள் பாடினார். இவருக்கு இங்கு சன்னதி உள்ளது. வைகாசி விசாகத்தன்று இவருக்கு குருபூஜை நடக்கும். இவ்வேளையில் முருகன் எதிரே, சிதம்பர சுவாமிகளை வைத்து, அவர் சுவாமியுடன் இரண்டறக் கலப்பது போல பாவனை செய்வர். கந்தசுவாமி, சுயம்புமூர்த்தியாக (தானாகவே தோன்றியவர்) இருப்பதால் பிரதான பூஜைகள் செய்வதற்காக சுப்பிரமணியர் இயந்திரம் பிரதிஷ்டை செய்துள்ளனர். கூர்ம (ஆமை) பீடத்தின் மேலுள்ள இந்த இயந்திரத்தில், முருகனின் 300 திருப்பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. முருகனுக்கு பூஜை நடந்தபின், இந்த இயந்திரத்திற்குப் பூஜை நடக்கும். செவ்வாய் கிரகத்திற்கு அதிபதி முருகன் என்பதால், செவ்வாய் தோஷமுள்ளவர்கள் இந்த இயந்திரத்திற்கு (ஸ்ரீசக்ரம்) திரிசதி அர்ச்சனை, அபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள்.

அருள்மிகு கல்யாண கந்தசுவாமி திருக்கோயில் பாலையா கார்டன், மடிப்பாக்கம்

அருள்மிகு கல்யாண கந்தசுவாமி திருக்கோயில் பாலையா கார்டன், மடிப்பாக்கம், சென்னை.

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் கல்யாண கந்தசுவாமி
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் மடிப்பாக்கம்
மாவட்டம் சென்னை
மாநிலம் தமிழ்நாடு

இப்பகுதியைச் சேர்ந்த முருகபக்தர்கள் அடிக்கடி கந்தகோட்டம், திருப்போரூருக்கு சென்று கந்தசுவாமியை தரிசித்து வந்தனர். ஒருகால கட்டத்தில் அவர்கள் கந்தசுவாமியை இப்பகுதியிலேயே பிரதிஷ்டை செய்து வழிபட விரும்பினர். அதன் அடிப்படையில் இந்த ஆலயத்தை உருவாக்கினார். முதலில் விநாயகர் மட்டுமே இங்கு அருள்புரிந்து வந்தார். இதன் பிறகே முருகப்பெருமானுக்கு சன்னதி அமைத்து கும்பாபிஷேகம் செய்து கோயில் கட்டினர். நுழைவுவாயிலில் கொடிமரமும், மயில் வாகனமும் அமைந்திருக்க கருவறையில் கல்யாண கந்தசுவாமி வள்ளி, தெய்வானை சமேதராக காட்சியளிக்கிறார். இங்கு நாம் முருகனை தரிசிக்க ஆறு படிகள் ஏறிச் செல்ல வேண்டும். இந்த படிகளுக்கு படிபூஜையும் நடைபெறுகிறது. பங்குனி உத்திரம் மற்றும் கந்தசஷ்டியன்று நடைபெறும் முருகப்பெருமானின் திருக்கல்யாணத்தில் முருகனுக்கு அணிவித்த மாலையை வாங்கி திருமணம் ஆகாதவர்கள் அணிந்தால், அவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடுகிறது. இங்கே முருகன் திருமணக் கோலத்தில் வீற்றிருப்பதால், கந்தசஷ்டி விழாவில் சூரசம்ஹாரம் நடைபெறுவதில்லை. கோயில் பிரகாரத்திற்கு தெற்கில் கருணை கணபதியும், வடக்கில் அங்காரகனும் தனித்தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர்.