Monthly Archives: December 2011

அருள்மிகு அருணஜடேசுவரர் திருக்கோயில், திருப்பனந்தாள்

அருள்மிகு அருணஜடேசுவரர் திருக்கோயில், திருப்பனந்தாள்,தஞ்சாவூர் மாவட்டம்.

+91- 435 – 245 6047, 94431 16322 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் அருணஜடேசுவரர்
அம்மன் பெரிய நாயகி
தல விருட்சம் பனைமரம்
தீர்த்தம் பிரம்ம தீர்த்தம்
ஆகமம் காமிய ஆகமம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் தாடகையீச்சரம், திருப்பனந்தாள்
ஊர் திருப்பனந்தாள்
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் சம்பந்தர்

தாடகை என்ற பெண் இத்தல இறைவனை நாள்தோறும் பூஜித்து வந்தாள். ஒரு நாள் சிவனுக்கு மாலை சாத்தும் போது அவளது மேலாடை நழுவியது. ஆடையை ஒரு கையால் பற்றிக்கொண்டு மாலை சாத்தமுடியாமல் அப்பெண் வருந்தினாள். அப்போது இறைவன் அந்த பெண்ணுக்காக இரங்கி தன் தலையை சற்று சாய்த்து கொடுத்தார். மங்கையும் மாலையை அணிவித்துவிட்டு மகிழ்ச்சியுடன் வணங்கிச் சென்றாள். அன்று முதல் சிவலிங்க திருமேனி சாய்ந்தே இருந்தது. அப்போது இந்தக்கோயிலில் சோழ மன்னனின் திருப்பணி நடந்து கொண்டிருந்தது. சிவன் தலை சாய்ந்திருக்கும் செய்தியை மன்னன் கேள்விப்பட்டான். உடனே தனது படையை அனுப்பி சிவனது தலையை நிமிர்த்த ஏற்பாடு செய்தான். யானைகளை சிவலிங்கத்தோடு சேர்த்து கயிற்றால் கட்டி இழுத்தனர். ஆனால் முடியவில்லை. மனம் வருந்தினான் மன்னன்.

63 நாயன்மார்களில் ஒருவரான குங்குலியக்கலய நாயானர் இத்தல சிவனை வழிபட வந்திருந்தார். அவருக்கும் இந்த செய்தி எட்டியது. “நமசிவாயஎனும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதியபடி சிவனுக்கு குங்குலியப்புகையினால் தூபமிட்டார். பின் பூவினால் சுற்றப்பட்ட ஓர் கயிறை எடுத்து ஒரு முனையை சிவலிங்கத்தில் இணைத்து, மற்றொரு முனையை தன் கழுத்தில் கட்டி பலமாக இழுத்தார். கயிறு இறுகியதால் இவரது உயிர் போகும் நிலை ஏற்பட்டது. ஆனால் நாயனார் கவலைப்படவில்லை. தன் முழு பலத்தையும் கொண்டு இழுத்தார். இவரது அன்புக்கு கட்டுப்பட்டார் சிவன். இதற்கு மேலும் நாயனாரை இறைவன் சோதிக்க விரும்பவில்லை. சிவலிங்கம் நேரானது. குங்குலியக்கலயனாரின் பக்தியையும், இறைவனிடம் கொண்ட அன்பையும் கண்ட மன்னன் மகிழ்ந்தான். நாயனாருக்கு பல பரிசுகள் கொடுத்து கவுரவப்படுத்தினான்.

அருள்மிகு பிராணநாதேசுவரர் திருக்கோயில், திருமங்கலக்குடி

அருள்மிகு பிராணநாதேசுவரர் திருக்கோயில், திருமங்கலக்குடி, தஞ்சாவூர் மாவட்டம்.

+91-435 – 247 0480 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பிராணநாதேசுவரர்
அம்மன் மங்களாம்பிகை
தல விருட்சம் கோங்கு, இலவு(வெள்ளெருக்கு)
தீர்த்தம் மங்களதீர்த்தம் (காவிரி)
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருமங்கலக்குடி
ஊர் திருமங்கலக்குடி
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்

பதினோறாம் நூற்றாண்டில் முதலாம் குலோத்துங்க சோழனின் மந்திரியாக இருந்த அலைவாணர் என்ற மந்திரி மன்னனிடம் அனுமதி பெறாமல் வரிப்பணத்தில் இக்கோயிலை கட்டினார். இதை அறிந்த மன்னன் கோபம் கொண்டு மந்திரியை சிரச் சேதம் செய்ய உத்தரவிட்டார். கொலையுண்ட மந்திரி தன்னை திருமங்கலக்குடியில் தகனம் செய்யுமாறு ஏற்கனவே கூறியிருந்ததால் அவரது உடல் திருமங்கலக்குடிக்கு எடுத்து வரப்பட்டது. ஊரின் எல்லைக்கு வரும்போது மந்திரியின் மனைவி மங்களாம்பிகை கோயிலுக்குச் சென்று தனது கணவரின் உயிரை திரும்பத்தருமாறு வேண்டினார். அவளது பிரார்த்தனை பலிக்கும் என்று அசரீரி கேட்டது. அதுபடி மந்திரி உயிர் திரும்பபெற்றார். மகிழ்ச்சியில் கோயிலுக்குள் சென்று பிராணநாதேசுவரரை கட்டிப்பிடித்து ஜீவதாயகன் என்று கூறி பூஜித்தார். அன்று முதல் இங்குள்ள ஈசன் பிராணநாதேசுவரன் (ஜீவதாயகன்)” என்ற பெயரால் அழைக்கப்பெற்றார். கணவர் உயிரைத் திருப்பித்தந்த அம்பாள் மங்களாம்பிகை என்றழைக்கப்பட்டாள்.

இங்கு வந்து வழிபடும் பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் உண்டாக வேண்டும் என்று மந்திரியும் மனைவியும் வேண்டிக்கொள்ள, அதுபடியே சுவாமியும் அம்பாளும் அருளியதாக வரலாறு கூறுகிறது.

பஞ்ச மங்கள ஷேத்திரம் :

இத்தலம் பஞ்ச மங்கள ஷேத்திரம் என்று அழைக்கப்படுகிறது.

1. இந்த ஊரின் பெயர் மங்கலக்குடி, 2. அம்பாள் பெயர் மங்களாம்பிகை, 3. இக்கோயில் விமானம் மங்கள விமானம் 4. இத்தலத்தின் தீர்த்தத்தின் பெயர் மங்கள தீர்த்தம், 5. இத்தலத்து விநாயகர் பெயர் மங்கள விநாயகர் என்பதால் இத்தலம் மங்களமே உருவாக இருப்பதால் மங்கள ஷேத்திரம் என்று அழைக்கப்படுகிறது.