Monthly Archives: November 2011
சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், தென்பொன்பரப்பி
அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், தென்பொன்பரப்பி, விழுப்புரம் மாவட்டம்.
+91-4151- 257057, 94432 40127
காலை 5.30 மணி இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | சொர்ணபுரீஸ்வரர் | |
அம்மன் | – | உமையாள், சொர்ணாம்பிகை | |
தல விருட்சம் | – | அரசமரம் | |
பழமை | – | 500-1000 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | தென்பொன்பரப்பி | |
மாவட்டம் | – | விழுப்புரம் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
1300 ஆண்டுகளுக்கு முன்பு சித்தர்களின் தலைமை குருவாக கருதப்படும் காகபுஜண்டர் சித்தர், 16 ஆண்டுகளுக்கு மேலாக கடுமையான தவத்தின் பயனாக 16 முகங்களுடன் கூடிய சிவலிங்க தரிசனம் பெற்றார். அதே போல் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து பக்தர்களும் எதிர்காலத்தில் வணங்க வேண்டும் என கருதினார். அப்போது, தென் பொன்பரப்பி பகுதியை ஆட்சி செய்த வானகோவராயன் என்ற மன்னன் மற்ற சிவாலயங்களில் இல்லாத சிறப்புகளுடன் இந்த இலிங்கத்தை உருவாக்கினார் என்பது வரலாறு.
நவபாஷாணத்துக்கு நிகரான சூரியகாந்த தன்மை கொண்ட ஒரே கல்லினால் செய்யப்பட்ட இலிங்கம் இது. சுமார் 5.5 அடி உயரத்திற்கு, பிரம்மா மற்றும் விஷ்ணு பீடங்கள் மீது கம்பீரமாக அமைக்கப்பட்டுள்ளது. உலகையே கட்டியாளும் மும்மூர்த்திகளும் இவ்வாறு ஒரே வடிவமைப்பில் இணைந்திருப்பது தனிச்சிறப்பு ஆகும். இந்த கல்லை கையால் தட்டிபார்த்தால், வெண்கலச் சத்தம் எழுவது பிரத்யேக சிறப்பிற்கு சான்று. காகபுஜண்டர் இந்த கோயிலின் அருகில் சமாதி அடைந்ததை ஒட்டி சமாதி பீடம் அமைக்கப்பட்டு திருவிளக்கு ஏற்றப்பட்டு வருகிறது. எல்லா சிவாலயங்களிலும் நந்திதேவர் தன் தலையை ஒரு பக்கமாக சாய்த்திருப்பதைக் காணலாம். ஆனால், இக்கோயிலில் பால நந்தியாக வீற்றிருப்பதுதால், கொம்புகளின் இடையூறின்றி பிரதோஷ காலங்களில் நேரடியாக சிவதரிசனம் கிடைக்கிறது.
சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், தெற்கு பொய்கைநல்லூர்
அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், தெற்கு பொய்கைநல்லூர், நாகப்பட்டினம் மாவட்டம்.
+91 99422 67660, 95785-72989
காலை 9 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். (செவ்வாய்கிழமைகளில் காலை 9 மணி முதல் இரவு 9 மணி)
மூலவர் | – | சொர்ணபுரீஸ்வரர் | |
அம்மன் | – | பெரியநாயகி | |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | தெற்கு பொய்கைநல்லூர் | |
மாவட்டம் | – | நாகப்பட்டினம் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
ஒரு காலத்தில், இலுப்பமரக்காடாக இருந்த நாகப்பட்டினத்தில், காவல் தெய்வத்துக்கு கோயில் கட்ட அங்கிருந்த வணிகர்கள் முடிவு செய்தனர். விக்ரகங்கள் செதுக்கப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. இதன் பிறகு தான் கோயிலுக்கான அஸ்திவாரம் பொய்கைநல்லூர் பகுதியில் தோண்டப்பட்டது. அப்போது பூமிக்கடியிலிருந்து சுவாமி, முருகன் வள்ளி, தெய்வானை சிலைகளும் பரிவார மூர்த்தி சிலைகள் கிடைத்தன. கோயில் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு சிலைகளை பார்த்து ஆச்சரியம் அடைந்தனர். தற்போதைய அம்பாள் சன்னதி அருகிலுள்ள பின்ன மரத்தை வெட்டும் போது, மரப் பொந்துக்குள் ஒரு அம்மன் சிலை இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து மரப்பொந்தில் முருகன், வள்ளி, தெய்வானை என பல சிலைகள் கிடைத்தன. மரப்பொந்தில் இருந்து கிடைத்த சிலைகளை கோயிலுக்குள்ளும், ஏற்கனவே செய்து வைத்திருந்த சுவாமி சிலைகளை கோயிலுக்கு வெளியேயும் பிரதிஷ்டை செய்தனர். இந்த கோயிலின் மூலவருக்கு சொர்ணபுரீஸ்வரர் என்றும், அம்பாளுக்கு பெரியநாயகி என்றும் பெயர் சூட்டினர். இவர்கள் அருகில் செல்லியம்மன் காவல் தெய்வமாக இருந்து அருள்பாலிக்கிறாள்.
காட்டுப்பகுதியில் கோயில் அமைந்திருப்பதால் அம்மனுக்கு நாகம் காவலாக இருப்பதாக நம்பிக்கை. அம்மன் கோயில் கதவுக்கு முன்பக்கம் நாகம் படுத்திருப்பதாகவும், பூஜாரி கதவை திறந்தவுடன், மணி சப்தம் கேட்டு நாகம் மறைந்துவிடுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் இராகு, கேது தோஷம் உள்ளவர்களும் அம்மனை வழிபட்டு பலனடையலாம். இந்த தோஷம் நீங்கினால், திருமணமாகாத ஆண், பெண்களுக்கு வாழ்க்கைத்துணை விரைவில் அமையும் என்பது நம்பிக்கை.