Monthly Archives: July 2011

அருள்மிகு பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில், பாதூர்

அருள்மிகு பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில், பாதூர் – 606 115. விழுப்புரம் மாவட்டம்

+91- 4149 – 209 789, 93626 20173 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பிரசன்னவெங்கடேசர்
உற்சவர் அழகர்
தாயார் அலமேலு மங்கை
ஆகமம்/பூசை வைகானஸம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் பாதூர்
மாவட்டம் விழுப்புரம்
மாநிலம் தமிழ்நாடு

இப்பகுதியை ஆண்ட குறுநில மன்னனின் மனைவி, தன் முன்வினைப்பயனால், தீராத தோல் வியாதியால் பாதிக்கப்பட்டாள். எவ்வளவோ வைத்தியம் பார்த்தும் வியாதி குணமாகவில்லை. அவளது நோய் அதிகமாகி, அழகு மங்கியது. எனவே மன்னனுக்கு மனைவி மீதிருந்த அன்பு கொஞ்சம், கொஞ்சமாக மறையத்துவங்கியது. ஒருகட்டத்தில் அவளை வெறுத்து ஒதுக்கிய அவன், வேறொரு பெண்ணைத் திருமணம் செய்ய நினைத்தான். கணவனின் எண்ணத்தை அறிந்த மனைவி மிகவும் வருந்தினாள். தனது நோய் நீங்கவும், கணவனின் எண்ணத்தை மாற்றவும் வேண்டி இத்தலத்தில் பெருமாளை வேண்டினாள். அவளது பக்தியில் மகிழ்ந்த பெருமாள், வியாதியை நீக்கி அருளியதோடு, அவளை முன்பிருந்ததைவிட மேலும் அழகாக மாற்றினார். மன்னனுக்கும் நற்புத்தி கொடுத்தார். மன்னனும், வேறு திருமணம் முடிக்கும் எண்ணத்தை விட்டு, தன் மனைவியுடன் இல்லறம் நடத்தினான்.

மூலஸ்தானத்தில் பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருளு கிறார். தாயார் அலமேலு மங்கை, நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், ஆண்டாள், விஷ்வக்சேனர், மத்வாச்சாரியார், ராமானுஜர், மகாதேசிகன் ஆகியோருக்கும் சன்னதி இருக்கிறது. கொடிமரத்தின் அருகே கருடாழ்வாரும், ஆஞ்சநேயரும் உள்ளனர்.

அருள்மிகு பிரசன்ன ராகவப்பெருமாள், ராயபுரம், சென்னை

அருள்மிகு பிரசன்ன ராகவப்பெருமாள், ராயபுரம், சென்னை

சென்னை ராயபுரத்தில் எழுந்தருளியிருக்கும் பிரசன்ன ராகவப்பெருமாளை பலர் அறிந்திருக்கமாட்டார்கள். திருமால் வாமன அவதாரம் எடுத்து மஹாபலி சக்ரவர்த்தியிடம் பிட்சை கேட்டு வந்தபோது மஹாபலியின் கமண்டலத்திலிருந்து நீர் வராமல் தடுத்தார் சுக்ராச்சாரியார். அப்போது வாமனனாகிய திருமால், தர்ப்பைப்புல்லால் கமண்டலத்தில் அடைப்புதீரச் செய்தபோது, வண்டாக மறைந்திருந்த சுக்ரனின் ஒரு கண்பார்வை பறிபோயிற்று. தானம் அளிப்பதைத் தடுத்த பாவம் நீங்கிட, சுக்ரன் கும்பகோணத்தில் அமைந்துள்ள திருவெள்ளியங்குடிக்குச் சென்று திருமாலை வழிபட்டு சாபம் நீங்கப் பெற்றார். அதோடு இழந்த கண்ணொளியையும் திரும்ப அடைந்தார். அதுசமயம் கருட பகவான் திருமாலிடம், அனைவரும் காணும் ஸ்ரீராமனாக காட்சிதர வேண்டும் என்று வேண்டிக் கொண்டதன் பேரில், தனது சங்குசக்ரங்களை கருடனிடம் கொடுத்துவிட்டு, வில் அம்பு ஏந்தி ஸ்ரீராமனாகக் காட்சி தந்தார் என்பதால், அவருக்குக் கோலவில்லி ராமன் என்ற பெயர் ஏற்பட்டது. இராமன் என்பதற்கு அடையாளமாக, வில் அம்புகள் தற்போதைய அமைப்பில் இல்லாமல், திருமால் சதுர்புஜத்துடன் சங்கு சக்ரதாரியாய் வில் அம்பு இல்லாமலே கோலவில்லிராமன் என்ற திருப்பெயருடன் காட்சியளிக்கிறார். அதே போன்று திருநாங்கூர் திவ்யதேசத்திலும் ஒரு கோலவில்லிராமனை வில்லுடன் தரிசிக்கலாம்.

இப்புராணக் கதையை நினைவூட்டும் வகையில் சென்னை ராயபுரத்தில் பிரசன்ன ராகவனாகக் காட்சியளிக்கிறார். மூல மூர்த்தி, சதுர்புஜங்களுடன் ஸ்ரீனிவாசனாகக் காட்சியளித்தாலும், உற்சவமூர்த்தியின் திருக்கோலம் மாறுபட்ட நிலையிலிருக்கிறது. அவர் சங்கு சக்ரதாரியாய் முதுகில் அம்புராதூணியுடன் காட்சியளிப்பதும், அவருக்கு வலது பக்கத்தில் சீதா பிராட்டியும், இடது புறத்தில் இலட்சுமணன் அஞ்சலி அஸ்த்ததுடன் முதுகில் அம்புராத்தூணியுடனும் காட்சியளிப்பது மிகமிக அபூர்வமான அமைப்பாகும். அருகே அமர்ந்த நிலையில் அஞ்சலி ஹஸ்த்ததுடன் அனுமன், வித்தியாசமாய்க் காட்சியளிப்பது மாறுதலான காட்சி. திருமாலின் நூதனக் காட்சியை இங்கு காணலாம். சென்னை ராயபுரத்தில், ஆதம்தெருவில் இக்கோயில் உள்ளது.