Monthly Archives: July 2011

அருள்மிகு நிலாத்துண்டப்பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்

அருள்மிகு நிலாத்துண்டப்பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம் – 631 502, காஞ்சிபுரம் மாவட்டம்.

+91- 44 – 272 22084 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் நிலாத்துண்டப்பெருமாள்
தாயார் நேர்உருவில்லாவல்லி
தீர்த்தம் சந்திர புஷ்கரணி
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் நிலாத்திங்கள் துண்டத்தான்
ஊர் காஞ்சிபுரம்
மாவட்டம் காஞ்சிபுரம்
மாநிலம் தமிழ்நாடு

தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது மகாவிஷ்ணு, கூர்ம (ஆமை) வடிவம் எடுத்து, மத்தாகப் பயன்பட்ட மேருமலையைத் தாங்கிக் கொண்டிருந்தார். அப்போது கயிறாக உதவிய வாசுகி(பாம்பு), ஆலகால விஷத்தை உமிழ்ந்தது. பாற்கடலில் கலந்த விஷம் ஆமையாக இருந்த விஷ்ணுவின் மீது பட்டது. இதனால், மகாவிஷ்ணுவின் நீலமேனி கருப்பானது. தேவர்கள் பல சிகிச்சைகளைச் செய்தும் பயனில்லாமல் போனது. கலங்கிய மகாவிஷ்ணு தனது உடல் பழைய நிறம் பெற வழி கூறும்படி பிரம்மாவிடம் வேண்டினார். சிவனிடம் வேண்டினால் உஷ்ணம் குறைந்து நிறம் மாறும் என ஆலோசனை கூறினார் பிரம்மா. அதன்படி மகாவிஷ்ணு, சிவனை எண்ணித் தவமிருந்தார். விஷ்ணுவுக்கு காட்சி தந்த சிவன், தனது தலையில் இருந்த பிறைச்சந்திரனை மகாவிஷ்ணு மீது ஒளி பரப்பும்படி பணித்தார். சந்திரனும் தன் கதிர்களைப் பரப்ப, நீலவண்ணத்தை மீண்டும் பெற்றார். முன்பை விட பொலிவாகவும் விளங்கினார். இந்த நிகழ்வின் அடிப்படையில் காஞ்சிபுரத்தில் ஏகாம்பரேசுவரர் கோயிலில் வடகிழக்கு பாகத்தில்(ஈசானிய மூலை) பெருமாள் சன்னதி அமைக்கப்பட்டது. சிவாலயத்துக்குள் இருக்கும் இந்த சன்னதி பெருமாளின் 108 திருப்பதிகளில் ஒன்றாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. பெருமாளின் நிறம் மாற தானும் ஒரு காரணமானதால் வருத்தம் கொண்ட வாசுகி, அவருக்குக் குடையாக நின்று பரிகாரம் தேடிக்கொண்டது. சந்திரனின் ஒளியால் இயல்பு நிறம் பெற்றதால் இத்தலத்துப் பெருமாளை நிலாத்திங்கள் துண்ட பெருமாள்என்று அழைக்கின்றனர்.

அருள்மிகு நீர்வண்ணப்பெருமாள்,(ஸ்ரீரங்க நாதப் பெருமாள்) திருக்கோயில், திருநீர்மலை

அருள்மிகு நீர்வண்ணப்பெருமாள்,(ஸ்ரீரங்க நாதப் பெருமாள்) திருக்கோயில், திருநீர்மலை– 600 044 காஞ்சிபுரம் மாவட்டம்.

+91- 44-2238 5484,98405 95374,94440 20820 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் நீர்வண்ணர், ரங்கநாதர், உலகளந்த பெருமாள், பாலநரசிம்மர்
உற்சவர் அழகியமணவாளர்
தாயார் அணிமாமலர்மங்கை, ரங்கநாயகி
தல விருட்சம் வெப்பால மரம்
தீர்த்தம் சித்த, சொர்ண, காருண்ய தீர்த்தம், சீர புஷ்கரிணி
ஆகமம்/பூசை வைகானஸம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் நீர்மலை, தோயாத்ரிகிரி
ஊர் திருநீர்மலை
மாவட்டம் காஞ்சிபுரம்
மாநிலம் தமிழ்நாடு

ஸ்ரீரங்கத்தில் மகாவிஷ்ணுவை சயனக்கோலத்தில் தரிசித்த பிருகு முனிவர், மார்க்கண்டேய மகரிஷி இருவரும் தங்கள் இருப்பிடம் நோக்கி இவ்வழியே சென்றனர். அவர்களுக்கு பெருமாளின் சயனக்கோலம் கண்களை விட்டு அகலவே இல்லை. மீண்டும் ஒருமுறை அந்த தரிசனம் கிடைக்க வேண்டுமென விரும்பினர். எனவே, இத்தலத்தில் தங்களுக்கு அந்த திருக்கோலத்தைக் காட்ட வேண்டும் என உருக்கமாக பெருமாளை வேண்டினர். அப்போது சுவாமி போக சயனத்தில்அரங்கநாதராக இங்குள்ள மலையில் காட்சி கொடுத்தார். இவரே இங்கு மலைக்கோயில் மூர்த்தியாக அருளுகிறார். அருகில் பிருகு, மார்க்கண்டேயர் இருவரும் இருக்கின்றனர். இவருக்கு அபிஷேகம் கிடையாது. வருடத்தில் ஒருமுறை கார்த்திகை மாதத்தில் தைலக்காப்பு மட்டும் செய்யப்படுகிறது.

இராமாயணம் எழுதிய வால்மீகி மகரிஷிக்கு, இராமபிரானை, திருமணக்கோலத்தில் தரிசிக்க வேண்டும் என்று ஆசை எழுந்தது. அவர் இத்தலம் வந்து சுவாமியை வேண்டித் தவமிருந்தார். பெருமாள் அவருக்கு சீதா, இலட்சுமணன், பரதன், சத்ருக்கனன் ஆகியோருடன் திருமணக்கோலத்தில் காட்சி தந்தார். அப்போது வால்மீகி, தனக்கு காட்டிய தரிசனப்படியே நிரந்தரமாக அங்கேயே தங்கும்படி வேண்டினார். சுவாமியும் அவ்வாறே அருளினார். இவர் மலையடிவாரத்தில் தனிக்கோயிலில் இருக்கிறார். நீர் சூழ்ந்த மலையின் மத்தியில் இருந்ததால் இவருக்கு, “நீர்வண்ணப்பெருமாள்என்றும், தலத்திற்கு திருநீர்மலைஎன்றும் பெயர் ஏற்பட்டது. நீல நிற மேனி உடையவர் என்பதால் இவருக்கு நீலவண்ணப்பெருமாள்என்ற பெயரும் உண்டு. இராமபிரானுக்கும் சன்னதி இருக்கிறது. இவரது சன்னதியில், சுவாமியை வணங்கியபடி சுயம்புவாக தோன்றிய வால்மீகி காட்சி தருகிறார்.