Category Archives: மாவட்டவாரியாக ஆலயங்கள்
அகஸ்தீஸ்வரர் கோயில், எட்டியத்தளி
அருள்மிகு அகஸ்தீஸ்வரர் கோயில், எட்டியத்தளி, புதுக்கோட்டை மாவட்டம்.
சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான அகஸ்தீஸ்வரர் கோவில், அறந்தாங்கியில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள எட்டியத்தளியில் உள்ளது. அகஸ்திய முனிவர் வழிபட்ட தலம் இது. இவ்வாலயத்தில் சனி பகவானுக்கு ஒரு சந்நிதி கட்டப்பட்டது. திருநள்ளாறு சனிபகவானை விட இவர் அருள் வழங்குவதில் பலமடங்கு சக்தி மிக்கவர் என்று கூறப்படுகிறது.
தமிழகத்தில் மற்ற ஆலயத்தில் நவக்கிரகங்களில் சனி பகவானும் இடதுபுறம் ராகு பகவானும், வலதுபுறம் கேது பகவானும் இருப்பர். ஆனால் இந்த ஆலயத்தில் சனி பகவானின் வலதுபுறம் ராகு பகவானும், இடதுபுறம் கேது பகவானும் உள்ளனர். இந்த ஆலயத்திற்கு வந்து நவக்கிரகங்களை வழிபட்டால் சனி தோஷமும், ராகு தோஷமும் நீங்குகிறதாம்.
அகஸ்திய முனிவருக்குக் களத்திரதோஷம் இருந்ததாகவும், அவர் இங்கு பூஜித்ததால் களத்திரதோஷம் நீங்கியதாகவும் கூறப்படுகிறது. ஜாதகத்தில் களத்திர தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து சுவாமியை வழிபட்டால், திருமணம் விரைவில் நடைபெறுகிறது.
அகத்தீசுவரர் கோயில், தாராபுரம்
அருள்மிகு அகத்தீசுவரர் கோயில், தாராபுரம், திருப்பூர் மாவட்டம்.
98420 16848
காலை 6.30 முதல் பகல் 11.30 மணி, மாலை 4.30 முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
நாம் எல்லாவற்றிலுமே வெற்றி பெற வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். ஆனால், பல முட்டுக்கட்டைகள் நம் இலக்கை அடையவிடாது தடுக்கின்றன. இவற்றையெல்லாம் தகற்துத் தள்ளுபவராக திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அகஸ்தீஸ்வரர் அருளுகிறார். இவர் மணலால் செய்யப்பட்ட லிங்கமாக இங்கு அருளுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கயிலாயத்தில் சிவபிரான், பார்வதிதேவியை திருமணம் செய்த போது, வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. உலகை சமப்படுத்த பொதிகை மலைக்கு செல்லுமாறு, அகத்தியருக்கு சிவன் கட்டளையிட்டார். அங்கு செல்லும் வழியில், அகத்தியர் பல இடங்களில் இலிங்கப் பிரதிட்டை செய்து வழிபட்டார். அமராவதி ஆற்றங்கரைக்கு வந்த போது, மணலில் ஒரு இலிங்கம் வடித்தார். அகத்திஸ்தியர் வடித்த இலிங்கம் என்பதால் சுவாமிக்கு அகத்தீஸ்வரர் என்ற திருப்பெயர் ஏற்பட்டது. பிற்காலத்தில், இலிங்கம் இருந்த இடத்தில், பிற்காலத்தில் கோயில் வடிக்கப்பட்டது. இந்த ஊரே தற்போதைய தாராபுரம்.
பஞ்சபாண்டவர்கள் ஒரு ஆண்டு இங்கு வாழ்ந்ததாக கூறப்படுகிறது. திருமலை சுவாமி சித்தர் வழிபட்டுள்ளார். ராமேசுவரம், கும்பகோணம், காஞ்சிபுரம் நகரிலுள்ள கோயில்களில் உள்ள மணல் இலிங்கங்களுக்கு அபிசேகம் நடப்பதில்லை. ஆனால், இங்கு தினமும் அபிசேகம் நடந்து வருகிறது. எண்ணெய் காப்பு சாத்தும் முன் இந்த இலிங்கத்தில், மணலில் சேர்ந்துள்ள “காக்கா பொன்” என்னும் துகள் ஒளிர்வதைக் காணலாம். இந்த இலிங்கத்தை இங்கு நிறுவுமுன், இத்தலத்தின் மகிமையால் ஈர்க்கப்பட்ட அகத்தியர், இவ்வூரில் காசியில் இருந்து ஒரு லிங்கம் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்ய விரும்பினார். அது முடியாமல் போனதால், அமராவதி ஆற்றை கங்கையாக எண்ணி, அதிலுள்ள மணலை பிடித்தே இலிங்கம் வடித்தார். இதனால், தடையில்லாமல் விரைவில் செயல்களை முடிக்க இந்த அகத்தீசுவரரை வணங்குகின்றனர். குறிப்பாக நீதிமன்ற வழக்குகள் முடிவுக்கு வரவும், தடைபட்ட சுபநிகழ்ச்சிகள் நடக்கவும், படித்து முடித்ததும் தாமதமின்றி வேலை கிடைக்கவும், முன்னேற்ற திருப்பங்கள் ஏற்படவும் பூஜை செய்து வரலாம்.