Category Archives: மாவட்டவாரியாக ஆலயங்கள்

அருள்மிகு ஐயப்பன் கோயில், அம்பாடத்து மாளிகா

அருள்மிகு ஐயப்பன் கோயில், அம்பாடத்து மாளிகா, மஞ்ஜப்புரா காலடி, எர்ணாகுளம் மாவட்டம். கேரளா மாநிலம்.

+91- 484 – 228 4167 (மாற்றங்களுக்குட்பட்டது)

தினமும் இக்கோயில் திறக்கப்படாது. சபரிமலையில் நடை திறக்கும் மாதபூஜை உள்ளிட்ட நாட்களில் மட்டும், காலை 5 – 1 மணி, மாலை 5 – 8 மணி வரை நடை திறந்திருக்கும். பங்குனி உத்திரத்தன்று நடை திறக்கப்பட்டிருக்கும். பெண்களுக்கும் அனுமதி உண்டு.

மூலவர் ஐயப்பனாக கருதி வழிபடப்படும் வெள்ளி தடி, விபூதி பை, கல்
தீர்த்தம் பூர்ணாநதி
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் மஞ்ஜப்புரா, காலடி
மாவட்டம் எர்ணாகுளம்
மாநிலம் கேரளா

ஐயப்பனின் தந்தையான பந்தளராஜாவுக்கு உதயணன் என்ற திருடனால் தொந்தரவு இருந்தது. உதயணன் மக்களிடம் கொள்ளையடித்து வந்தான். இதனால் பந்தள மகாராஜா தன் மகன் ஐயப்பனிடம் இதுபற்றி சொன்னார். ஐயப்பன் உதயணனை அழிக்கச்சென்ற போது, அம்பலப்புழா மற்றும் ஆலங்காட்டு ராஜாக்கள் தங்கள் படையுடன் அவருக்கு உதவியாக சென்றனர். அன்றுமுதல் இந்தக் குடும்பங்கள் ஐயப்பனின் நெருங்கிய நண்பர் களாயினர். இதன் பிறகு ஐயப்பன், மகிஷியை அழிக்க பூமிக்கு வந்த தன் கடமை முடிந்து விட்டதால், சபரிமலைக்குப் புறப்பட்டார். தான் செல்லும் முன் எருமேலியில் இருந்து சபரிமலைக்கு செல்லும் பாதையை சீரமைக்கும்படி அம்பலப்புழா மற்றும் அம்பாடத்து மாளிகா குடும்பத்தினரிடம் விளக்கினார். உடனே அம்பலப்புழா குடும்பத்தினரும், ஐயப்பனின் நண்பரான வாபரும் எருமேலி வழியாக சபரிமலைக்கு செல்லும் பாதையை சீரமைத்தனர். இதுவே பெரிய பாதைஎனப்படுகிறது. இதன்பிறகு, ஐயப்பனும், அம்பாடத்து மாளிகை குடும்பத்தினரும் சபரிமலை சென்றனர். அங்கு பரசுராமர் ஸ்தாபித்த சாஸ்தா சிலையில், ஐயப்பன் ஜோதி சொரூபமாக ஐக்கியமாகி விட்டார்.

அருள்மிகு ஐயப்பன் கோயில், ஆரியங்காவு

அருள்மிகு ஐயப்பன் கோயில், ஆரியங்காவு, கொல்லம் மாவட்டம், கேரளா மாநிலம்.

+91- 0475-221 1566, 94452 52368

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 7 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் ஐயப்பன்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர் ஆரியங்காவு
மாவட்டம் கொல்லம்
மாநிலம் கேரளா

சபரிமலையில், பிரம்மச்சாரியாக வீற்றிருக்கும் ஐயப்பன், ஆரியங்காவில் மனைவியுடன் கிரகஸ்தராக காட்சி தருகிறார். மதுரையைச் சேர்ந்த சவுராஷ்டிர வகுப்பினர், திருவிதாங்கூர் மகாராஜா அரண்மனைக்கு தேவையான துணிகளை நெய்து, அங்கு எடுத்துச் சென்றனர். இவ்வாறு சென்ற வியாபாரிகளில் ஒருவர், ஆரியங்காவு கணவாய் வழியே சென்றார். அவருடன் அவரது மகள் புஷ்கலாவும் உடன் சென்றாள். காட்டுப்பாதை கடினமாக இருந்ததால், தன் மகளை அங்குள்ள மேல்சாந்தியின் (பூஜாரி) இல்லத்தில் தங்க வைத்துவிட்டு, தான் திரும்பி வரும் வரை பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டு திருவிதாங்கூர் சென்று விட்டார். புஷ்கலா தன்னாலான கைங்கரியங்களைச் சாஸ்தாவுக்கு செய்து வந்தாள். நாளடைவில் சாஸ்தாவை தன் காதலனாகவே நினைக்கத் துவங்கி விட்டாள். சாஸ்தாவும் அவளை ஆட்கொள்ள முடிவெடுத்தார். திருவிதாங்கூர் சென்று திரும்பிக் கொண்டிருந்த வியாபாரியை மத யானை ஒன்று விரட்டியது. அப்போது இளைஞன் ஒருவன் அங்கே தோன்றி யானையை அடக்கி அவரைக் காப்பாற்றினான். அவனுக்கு நன்றி தெரிவித்த வியாபாரி, அந்த இளைஞனுக்கு என்ன வேண்டுமெனக் கேட்டார். அவன், “உங்கள் மகளை எனக்கு திருமணம் செய்து தருவீர்களா?” எனக் கேட்டதும், அவர் சம்மதித்தார். உடனேயே அவன் மறைந்து விட்டான். அதிசயித்த வியாபாரி, ஆரியங்காவு வந்து சேர்ந்தார். கோயிலுக்குச் சென்றார். அங்கே தான் பார்த்த இளைஞனின் உருவில் சாஸ்தா காட்சி கொடுப்பதைக் கண்டார். மதகஜ வாகன ரூபனாக அவரைக் கண்ட வியாபாரி, “நீயே என் மகளை ஆட்கொள்ள வந்தாயா?” என அதிசயித்தார். பின்னர், தன் ஊர் மக்களை வரவழைத்து, திருவிதாங்கூர் சமஸ்தானத்து அதிகாரிகளுடன் பேசி திருமணம் நிச்சயிக்கப்பட்டது. சாஸ்தாவும் நேரில் எழுந்தருளி புஷ்கலாவை ஆட்கொண்டார். இந்த திருமண நிகழ்ச்சி இப்போதும், மார்கழி மாதத்தில் இத்தலத்தில் நிகழ்த்தப்படுகிறது. மதுரையில் இருந்து சவுராஷ்டிர இனத்தவர் தங்கள் குல பெண்ணுக்கு சீதனம் எடுத்துச் சென்று திருக்கல்யாணத்தை நடத்தி வைக்கின்றனர்.