Category Archives: திருவாரூர்
அருள்மிகு நடுதறியப்பர் திருக்கோயில், கோயில் கண்ணாப்பூர்
அருள்மிகு நடுதறியப்பர் திருக்கோயில், கோயில் கண்ணாப்பூர், வலிவலம் (வழி), திருவாரூர் மாவட்டம்.
+91 -4365 – 204 144, 94424 59978 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 7 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | நடுதறியப்பர், வஸ்ததம்பபுரீஸ்வரர், நடுதறிநாதர் | |
உற்சவர் | – | பிடாரியம்மன் | |
அம்மன் | – | மாதுமைநாயகி, ஸ்ரீ வல்லிநாயகி | |
தல விருட்சம் | – | கல்பனை | |
தீர்த்தம் | – | கங்காமிர்தம், சிவகங்கை, ஞானாமிர்த்தம், ஞானகுபம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | திருக்கன்றாய்பூர் | |
ஊர் | – | கோயில் கண்ணாப்பூர் | |
மாவட்டம் | – | திருவாரூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர் | – | திருநாவுக்கரசர் |
ஒரு காலத்தில் சிவபெருமான் உமாதேவியாருடன் கயிலாய மலையில் வீற்றிருந்தார். படைத்தல் முதலிய தொழில்கள் பிரமதேவனை முதலாகக் கொண்ட தேவர்களால் நடத்தப்பெற்றன. அப்பொழுது இறைவன் முன்பு சுதாவல்லி என்னும் வித்யாதரப் பெண், உமை உருவம் தாங்கி நடித்து இறைவனுக்கு மகிழ்ச்சி உண்டாக்கினாள். இதைக்கண்ட உமாதேவியார் சுதாவல்லியை நோக்கி தன்னுருக்கொண்ட அவளிடத்தில் சினங்கொண்டு, “நீ மண்ணுலகத்தில் பிறக்க” எனச் சபித்தார். பின் நிகழ்ச்சி அறியாது நடித்த சுதாவல்லி கண்கலங்கினாள். என்ன செய்வேன் என பதறினாள். அப்பொழுது இறைவி,”நீ மண்ணுலகம் அடைந்து சிவனை பூஜித்து எம்மை அடைவாய்” எனக்கூறி அருள்பாலித்தாள். அப்படியே சுதாவல்லி தென்தமிழ் நாட்டை அடைந்து, தேவூருக்குத் தென்பால் திகழ்கின்ற இத்திருத்தலத்தில் பரம்பரை சைவ வேளாளர் மரபில் சிவஞானம் நிரம்பப் பெற்று பிறந்து கமலவல்லி என்னும் திருப்பெயருடன் வளர்ந்துவந்தாள். இடையறாது சிவபெருமானை சிந்தித்து வந்தாள். கமலவல்லி சைவ நெறியில் வளர்ந்து வந்தாள். பழவினைத் தொடர்பால் சிவபூசனை செய்துவந்தாள். திருமணப் பருவத்தை அடைந்தாள். பெற்றோர் பார்த்து தக்கவன் என்று கருதிய ஒருவனுக்கு கமலவல்லியை மணம் செய்வித்தனர். அந்த ஊரிலேயே தனி இல்லத்தில் பெற்றோர் இல்லறத்தை நடத்தச் செய்தனர். கமலவல்லி காரைக்கால் அம்மையாரைப் போன்று இவ்விறைவனுக்கு இனியளாய் நடந்துவந்தாள். எனினும் உயிரிறைவனாகிய சிவபெருமானிடத்து பேரன்பு பூண்டு, தக்க அறங்ளை செய்து வாழ்ந்துவந்தாள். சிவனை இடைவிடாது பூஜை செய்தாள். கணவன், கமலவல்லியின் உயர்வை உணராமல் அவள் சிவனைப் பூஜிப்பதில் வெறுப்புகொண்டு சிவலிங்கத்தை ஒரு கிணற்றில் எறிந்துவிட்டான். கமலவல்லி இதை உணர்ந்து, கணவனுக்கு மாறாக சிவனைப் பூஜிப்பதா அல்லது சிவபூஜையை விடுவதா என சிந்தித்தாள். கணவன் அறியாதவாறு சிவபூஜை செய்வது என்ற முடிவிற்கு வந்தாள். தன் வீட்டு பசுங்கன்று கட்டும் தறி(முளை) ஒன்றை சிவலிங்கமாக பாவித்துப் பூஜை செய்துவந்தாள். இப்படி இவள் தன் கருத்துக்கு மாறாக நடக்கிறாள் என்பதை அறிந்த கணவன் சினம்கொண்டு, அக்கன்று கட்டும் தறியைக் கோடரி கொண்டு தாக்கினான். உதிரம் வெளிப்பட்டது. கமலவல்லியின் பக்தியை உலகவரும் அவள் கணவரும் அறிய இறைவன் அக்கட்டுத்தறியில் இலிங்க வடிவம் கொண்டு காட்சியளித்தார்.
அருள்மிகு கைலாச நாயகி சமேத கண்ணாயிரநாதர் திருக்கோயில், திருக்காரவாசல்
அருள்மிகு கைலாச நாயகி சமேத கண்ணாயிரநாதர் திருக்கோயில், திருக்காரவாசல் (திருக்காறாயில்), திருவாரூர் மாவட்டம்.
+91- 4366-247 824, +91- 94424 03391 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | கண்ணாயிரநாதர் | |
அம்மன் | – | கைலாச நாயகி | |
தல விருட்சம் | – | பலா மரம் | |
தீர்த்தம் | – | பிரம்ம தீர்த்தம், சேஷ தீர்த்தம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | திருக்காறாயில், திருக்காறைவாசல் | |
ஊர் | – | திருக்காரவாசல் | |
மாவட்டம் | – | திருவாரூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர்கள் | – | அப்பர், சம்பந்தர் |
“டங்கம்‘ என்றால் “கல் சிற்பியின் சிற்றுளி” என்று அர்த்தம். “விடங்கம்” என்றால் “சிற்பியின் உளி இல்லாமல்” என்று பொருள். “சிற்றுளி கொண்டு செதுக்கப்படாமல்‘ தானே உருவான இயற்கை வடிவங்களை “சுயம்பு” அல்லது “விடங்கம்” என்று குறிப்பிடுவார்கள். அப்படி உளி இல்லாமல் உருவான 7 இலிங்கங்கள் சப்தவிடங்கத்தலங்கள் எனப்பட்டன.
ஒரு சமயம் இந்திரன், அசுரர்களால் தனக்கு ஏற்பட இருந்த பெரிய ஆபத்தினை முசுகுந்த சக்கரவர்த்தியின் உதவியால் போர் செய்து அசுரர்களை வென்றார். “வெற்றிக்கு கைமாறாக முசுகுந்த சக்கரவர்த்தியிடம் என்ன வேண்டும்?” என இந்திரன் கேட்க,”தாங்கள் பூஜை செய்து வரும் விடங்க இலிங்கத்தைப் பரிசாகத் தாருங்கள்” என முசுகுந்தன் கேட்டார். ஆனால் இந்திரனுக்கோ அந்த இலிங்கத்தை தர மனமில்லை. தேவசிற்பியான மயனை வரவழைத்து தான் வைத்திருப்பதைப்போலவே 6 இலிங்கங்களை செய்து அவற்றைத் தர நினைக்கிறான். ஆனால் முசுகுந்தன் “செங்கழுநீர் பூவின் வாசம் உடைய” உண்மையான சிவலிங்கத்தை தன் ஆத்ம சக்தியால் கண்டுபிடிக்கிறார். இது இறைவனின் திருவிளையாடல் என்பதை உணர்ந்த இந்திரன் தன்னிடமிருந்த உண்மையான சிவலிங்கத்துடன் பிற இலிங்கங்களையும் முசுகுந்தனுக்குப் பரிசாக தந்து விடுகிறார். ஏழு இலிங்கங்களையும் ஏழு இடங்களில் பிரதிஷ்டை செய்து முசுகுந்தன் பூஜை செய்தார். இவை சப்தவிடங்கத்தலங்கள் எனப்பட்டன. அவை திருவாரூரில் வீதி விடங்கர், திருநள்ளாறில் நகர விடங்கர், நாகப்பட்டினத்தில் சுந்தர விடங்கர், திருக்குவளையில் அவனி விடங்கர், திருவாய்மூரில் நீலவிடங்கர், வேதாரண்யத்தில் புவனி விடங்கர், திருக்காரவாசலில் ஆதி விடங்கர் என அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் சிவபெருமான் “குக்குட நடனம்” ஆடித் தரிசனம் தருகிறார். மகாவிஷ்ணு, மகாலட்சுமி, இந்திரன், கபால முனிவர், பதஞ்சலி முனிவர், வியாக்ரபாதர் ஆகியோர் இங்கு தரிசனம் செய்துள்ளனர். இங்குள்ள தெட்சிணாமூர்த்தி “ஞான தெட்சிணாமூர்த்தியாக” அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் அருள்பாலிக்கும் சொர்ணாகர்ஷண கால பைரவரை வழிபாடு செய்தால் இழந்த பொருள்களை மீண்டும் பெறலாம் என்பது ஐதீகம். புராண காலத்தில் இத்தலம் முழுவதும் “காரகில்” எனும் மரங்கள் அடர்ந்த காடாக இருந்தது. எனவே “திருக்காரகில்” என வழங்கப்பட்டு அதுவே “திருக்காரவாசல்” என பெயர் மருவியது.