Category Archives: திருவள்ளூர்
அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயில், திருவல்லிக்கேணி
அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயில், திருவல்லிக்கேணி, சென்னை-600 005.
+91- 44 – 2844 2462, 2844 2449 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | பார்த்தசாரதி |
உற்சவர் | – | வேங்கடகிருஷ்ணன், ஸ்ரீதேவி, பூதேவி |
தாயார் | – | உருக்மிணி |
தல விருட்சம் | – | மகிழம் |
தீர்த்தம் | – | கைரவிணி புஷ்கரிணி |
ஆகமம் | – | வைகானஸம் |
பழமை | – | 1000-2000 வருடங்களுக்கு முன் |
புராணப் பெயர் | – | பிருந்தாரண்ய க்ஷேத்ரம் |
ஊர் | – | திருவல்லிக்கேணி, சென்னை |
மாவட்டம் | – | திருவள்ளூர் |
மாநிலம் | – | தமிழ்நாடு |
திருமாலின் பக்தனான சுமதிராஜன் என்னும் மன்னனுக்கு, பெருமாளை குருக்ஷேத்ரப் போரில் தேரோட்டியாக இருந்த கண்ணனாகத் தரிசிக்க வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது. தனக்கு அக்காட்சியை தந்தருளும்படி பெருமாளிடம் வேண்டினார். சுவாமியும் இங்கு தேரோட்டியாக காட்சி தந்தார். மகிழ்ந்த மன்னர், அதே கோலத்தில் தங்கும்படி வேண்டவே, பாரதப் போரில் அர்ச்சுனனுக்கு சாரதியாக இருந்த திருக்கோலத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெருமாள் ஆயுதம் எதையும் எடுப்பதில்லை என்று செய்த சபதத்திற்கு ஏற்ப ஒரு கையில் சங்கு மட்டுமே ஏந்தி இருக்கிறார். பாரதப்போரில் அர்ச்சுனன் மீது பீஷ்மர் தொடுத்த அம்புகளையெல்லாம் தானே முன்னின்று ஏற்றுக் கொண்டு அர்ச்சுனனுக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்ததை விளக்கும் வகையில் இன்றும் பார்த்தசாரதி முகத்தில் அம்பு பட்ட வடுக்கள் காணப்படுகின்றன. இந்த ஐதீகத்தின் அடிப்படையில் பெருமாள் ஸ்ரீ பார்த்தசாரதி என்றழைக்கப்படுகிறார். “வேங்கடகிருஷ்ணர்” என்றும் பெயர் பெற்றார். இத்தலத்து உற்சவர், பார்த்தசாரதி ஆவார். பிற்காலத்தில் இவர் பிரசித்தி பெறவே, இவரது பெயரில் கோயில் அழைக்கப்பட்டது.
அருள்மிகு பிரசன்ன ராகவப்பெருமாள், ராயபுரம், சென்னை
அருள்மிகு பிரசன்ன ராகவப்பெருமாள், ராயபுரம், சென்னை
சென்னை ராயபுரத்தில் எழுந்தருளியிருக்கும் பிரசன்ன ராகவப்பெருமாளை பலர் அறிந்திருக்கமாட்டார்கள். திருமால் வாமன அவதாரம் எடுத்து மஹாபலி சக்ரவர்த்தியிடம் பிட்சை கேட்டு வந்தபோது மஹாபலியின் கமண்டலத்திலிருந்து நீர் வராமல் தடுத்தார் சுக்ராச்சாரியார். அப்போது வாமனனாகிய திருமால், தர்ப்பைப்புல்லால் கமண்டலத்தில் அடைப்புதீரச் செய்தபோது, வண்டாக மறைந்திருந்த சுக்ரனின் ஒரு கண்பார்வை பறிபோயிற்று. தானம் அளிப்பதைத் தடுத்த பாவம் நீங்கிட, சுக்ரன் கும்பகோணத்தில் அமைந்துள்ள திருவெள்ளியங்குடிக்குச் சென்று திருமாலை வழிபட்டு சாபம் நீங்கப் பெற்றார். அதோடு இழந்த கண்ணொளியையும் திரும்ப அடைந்தார். அதுசமயம் கருட பகவான் திருமாலிடம், அனைவரும் காணும் ஸ்ரீராமனாக காட்சிதர வேண்டும் என்று வேண்டிக் கொண்டதன் பேரில், தனது சங்குசக்ரங்களை கருடனிடம் கொடுத்துவிட்டு, வில் அம்பு ஏந்தி ஸ்ரீராமனாகக் காட்சி தந்தார் என்பதால், அவருக்குக் கோலவில்லி ராமன் என்ற பெயர் ஏற்பட்டது. இராமன் என்பதற்கு அடையாளமாக, வில் அம்புகள் தற்போதைய அமைப்பில் இல்லாமல், திருமால் சதுர்புஜத்துடன் சங்கு சக்ரதாரியாய் வில் அம்பு இல்லாமலே கோலவில்லிராமன் என்ற திருப்பெயருடன் காட்சியளிக்கிறார். அதே போன்று திருநாங்கூர் திவ்யதேசத்திலும் ஒரு கோலவில்லிராமனை வில்லுடன் தரிசிக்கலாம்.
இப்புராணக் கதையை நினைவூட்டும் வகையில் சென்னை ராயபுரத்தில் பிரசன்ன ராகவனாகக் காட்சியளிக்கிறார். மூல மூர்த்தி, சதுர்புஜங்களுடன் ஸ்ரீனிவாசனாகக் காட்சியளித்தாலும், உற்சவமூர்த்தியின் திருக்கோலம் மாறுபட்ட நிலையிலிருக்கிறது. அவர் சங்கு சக்ரதாரியாய் முதுகில் அம்புராதூணியுடன் காட்சியளிப்பதும், அவருக்கு வலது பக்கத்தில் சீதா பிராட்டியும், இடது புறத்தில் இலட்சுமணன் அஞ்சலி அஸ்த்ததுடன் முதுகில் அம்புராத்தூணியுடனும் காட்சியளிப்பது மிகமிக அபூர்வமான அமைப்பாகும். அருகே அமர்ந்த நிலையில் அஞ்சலி ஹஸ்த்ததுடன் அனுமன், வித்தியாசமாய்க் காட்சியளிப்பது மாறுதலான காட்சி. திருமாலின் நூதனக் காட்சியை இங்கு காணலாம். சென்னை ராயபுரத்தில், ஆதம்தெருவில் இக்கோயில் உள்ளது.