Category Archives: கோயம்புத்தூர்

விருந்தீஸ்வரர் திருக்கோயில், வடமதுரை

அருள்மிகு விருந்தீஸ்வரர் திருக்கோயில், வடமதுரை, கோயம்புத்தூர் மாவட்டம்.

+91- 94428 44884

காலை 7 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் விருந்தீஸ்வரர்
தல விருட்சம் முருங்கை
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் வடமதுரை
மாவட்டம் கோயம்புத்தூர்
மாநிலம் தமிழ்நாடு

நால்வரில் ஒருவரான சுந்தரர் சிவாயலங்கள் தோறும் சென்று வழிபட்டு வந்தார். அவினாசியில் அவினாசி இலிங்கேஸ்வரையும் அன்னை கருணாம்பிகையையும் தரிசித்து விட்டு, விருந்தீஸ்வரர் கோயிலுக்கு வரும்போது மிகுந்த பசி ஏற்பட்டது. தள்ளாடிபடியே கோயிலை அடைந்தார். அவரது நிலை கண்ட ஒரு தம்பதியர் அவரை உபசரித்தனர். கணவன், விசிறி விட, மனைவி வன முருங்கைக்கீரையுடன் அமுது தயாரித்து அளித்தாள். அமுதை சாப்பிட்டவுடன் சுந்தரருக்கு புத்தொளி பிறந்தது. இந்த புத்தொளிக்கு காரணம் அமுது படைத்த வேடுவராக வந்த இறைவனும், இறைவியுமே காரணம் என்பதை அறிந்தார் சுந்தரர் நெகிழ்ந்து போனார். சுந்தரருக்கு விருந்து படைத்ததால் இத்தல இறைவன் விருந்தீஸ்வரர்ஆனார். அதிகார நந்தியை பிரதோஷ காலங்களில் குளிர்ச்சியான பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்தால் அவரும் குளிர்ந்து, நமக்கு வேண்டியதை கொடுத்து நம்மையும் குளிர்விப்பார்.

வில்லீஸ்வரர் திருக்கோயில், இடிகரை

அருள்மிகு வில்லீஸ்வரர் திருக்கோயில், இடிகரை, கோவை மாவட்டம்.

+91- 0422 – 2396821

காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும் மாலை 6 மணி முதல் 7.30 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.

மூலவர் வில்லீஸ்வரர், வில்லீஸ்வர பரமுடையார்
உற்சவர் சந்திரசேகர்
அம்மன் வேதநாயகி
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் கிணற்று நீர்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் இருகரை
ஊர் இடிகரை
மாவட்டம் கோயம்புத்தூர்
மாநிலம் தமிழ்நாடு

கரிகாற்சோழமன்னன் தனது நாடு சிறக்கவும், தனக்கு ஏற்பட்ட புத்திரதோசம் நீங்கவும் குறத்தி ஒருத்தியின் ஆலோசனையின் படி, கொங்குநாட்டில் காடு திருத்தி, குளங்கள் வெட்டி 36 சிவ ஆலயங்களை கட்டினான். அவ்வாறு கோயில்கள் கட்டியபோது 29 வது கோயிலை, வில்வமரங்கள் நிறைந்து, வனமாக இருந்த இவ்விடத்தில் எழுப்பிட எண்ணினான். எனவே, இவ்விடத்தில் கோயிலை அமைக்க வில்வமரங்களை வெட்டி காடுகளைத் திருத்தினான். அப்போது அங்கு காவல் தெய்வமாக இருந்த துர்க்கை பத்திரகாளியம்மன், தனக்கு பலி கொடுத்து விட்டு, பின் ஆலயம் எழுப்பும்படி கூறினாள். அதற்கு ஒப்புக்கொண்ட மன்னர் சிவாலயம் கட்டி முடித்த பின் துர்க்கைக்கு தனியே கோவில் ஒன்றை எழுப்புவதாக கூறி, மீண்டும் காடுகளைச் சீரமைத்தான். அப்போது, அவ்விடத்தில் மண்ணில் இருந்து சிவலிங்கம் ஒன்று கிடைத்தது. அதனையே இவ்விடத்தில் பிரதிஷ்டை செய்த மன்னன் சிவனுக்கு கோயிலை எழுப்பி வழிபட்டார். அதன்பின், ஊருக்கு எல்லையில் வில்லிதுர்க்கை பத்திரகாளிக்கு கோழி, ஆடு, பன்றி என முப்பலி கொடுத்துவிட்டு, தனியே மற்றோர் கோயிலையும் எழுப்பினார்.