Category Archives: ஈரோடு
அருள்மிகு சின்ன மாரியம்மன் திருக்கோயில், கருங்கல்பாளையம்
அருள்மிகு சின்ன மாரியம்மன் திருக்கோயில், கருங்கல்பாளையம் – 638001, ஈரோடு மாவட்டம்.
**********************************************************************************************************
+91-424 – 2430114 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
தல விருட்சம்: – வேப்பமரம், அரசமரம்
பழமை: – 200 வருடங்களுக்கு முன் ஊர்: – கருங்கல்பாளையம்
மாநிலம்: – தமிழ்நாடு
வீட்டில் குழந்தைகள் கடவுள் பொம்மைகளை வைத்து அலங்காரம் செய்து வழிபடுவார்கள். அதுபோல, ஈரோடு கருங்கல்பாளையத்தில் காவிரி நதிக்கரையில் ஒரு கூழாங்கல்லை வைத்து விளையாட்டாக சிறுவர், சிறுமிகள் விளையாடிய இடம் ஒரு கோயிலாக மாறி விட்டது. இதையே நாளடைவில் அம்மனாக வழிபட்டனர். பின்னர் சிறிய கோயில் கட்டி அம்பாள் சிலை பிரதிட்டை செய்யப்பட்டது. சிறுவர்கள் கட்டிய கோயில் என்பதால், சின்ன மாரியம்மன் கோயில் எனப் பெயர் பெற்றது. இந்த கோயில் 150 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு இருக்கிறது.
இந்த கோயிலின் வாசலில் வேப்பமரமும், அரச மரமும் இருப்பது சிறப்பு. ஒவ்வொரு ஆண்டும் இக்கோயிலில் பூச்சாட்டுதல் நடக்கிறது. அதே போல் பூவோடு எடுத்து குண்டம் இறங்கும் நிகழ்ச்சி தொடர்ந்து நடந்து வருகிறது.
கார்த்திகை மாதத்தில் தேரோட்டம் நடக்கிறது. இந்த தேரோட்ட விழவின் ஒரு அங்கமாக குண்டம் இறங்கும் நிகழ்ச்சி மிகவும் புகழ்பெற்றது.
குண்டம் இறங்கும் நிகழ்ச்சியில் பங்குபெற பள்ளிபாளையம், சங்ககிரி, குமாரபாளையம், திருச்செங்கோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மக்கள் திரண்டு வருவர்.
திருமுகன்பூண்டியில் இருந்து அம்மன் சிலை வடிவமைக்கப்பட்டு இங்கு கொண்டு வரப்பட்டு கடந்த 1989ம் ஆண்டு திருப்பணி செய்யப்பட்டு கோபுரம் கட்டப்பட்டது. பின்னர் அதே ஆண்டில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில், பண்ணாரி
அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில், பண்ணாரி – 638 451, சத்தியமங்கலம், ஈரோடு மாவட்டம்.
*****************************************************************
+91-4295-243366, 243442 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
தல விருட்சம்: – வேங்கைமரம்
பழமை: – 500 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர்: – மண்ணாரி
ஊர்: – பண்ணாரி
மாநிலம்: – தமிழ்நாடு
சுமார் 300 வருடங்களுக்கு முன்பு இச்சுற்று வட்டார மக்கள் ஆடு மாடுகளை மேய்க்க இந்த வனப்பகுதிக்கு வருவது வழக்கம்.
ஒருநாள் காராம் பசு ஒன்று தினந்தோறும் பட்டியை (மாடுகள் கூட்டம்) விட்டுவிட்டு தனியே சென்று வருவதை மேய்க்கிறவன் கவனித்து விட்டான். பிறகு அப்பசுவை பின்தொடர்ந்து சென்று பார்க்கையில் அப்பசு தன் மடியிலூறும் பாலை ஒரு வேங்கை மரத்தின் அடியில் அடர்ந்த புற்கள் சூழ்ந்த ஒரு குறிப்பிட்ட இடத்தில் தன்னிச்சையாக பொழிவதை பார்த்தான்.
இதை ஊர் மக்களிடம் தெரிவிக்க, அவர்கள் வந்து அந்த குறிப்பிட்ட இடத்தை சுத்தம் செய்கையில் அடர்ந்த புற்கள் சூழ்ந்த ஒரு புற்றும் அதனருகில் சுயம்புலிங்கத் திருவுருவமும் வேங்கை மரத்தடியில் இருப்பதைக் கண்டார்கள்.
அப்போது அங்கிருந்தவருக்கு அருள் வந்து, “கேரளாவிலிருந்து பொதிமாடுகளை ஓட்டிக்கொண்டு மைசூர் செல்லும் மக்களுக்கு வழித்துணையாக வந்தேன். எழில் மிகுந்த இவ்விடத்தில் நான் தங்கி விட்டேன். என்னை இனிமேல் பண்ணாரி மாரியம்மன் என போற்றி வழிபடுங்கள்” என்று அருள் வாக்கு கூறினார். இதையடுத்து பண்ணாரி மாரியம்மனுக்குக் குடில் அமைத்து மக்கள் வழிபட்டனர்.