Category Archives: இராமநாதபுரம்
அருள்மிகு வெயிலுகந்த விநாயகர் திருக்கோயில், உப்பூர்
அருள்மிகு வெயிலுகந்த விநாயகர் திருக்கோயில், உப்பூர், ராமநாதபுரம் மாவட்டம்.
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்
பழமை: – 500-1000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்: – சூரியபுரி, தவசித்திபுரி, பாவ விமோசனபுரம், வன்னிமந்தார வனம்
ஊர்: – உப்பூர்
மாநிலம்: – தமிழ்நாடு
இந்த திருக்கோயில் தோற்றம் பற்றி பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. தட்சன் தனது மகளான தாட்சாயிணியை மணந்த சிவபெருமான், தன்னைப் பணிய வேண்டும் என விரும்பினான். தன்னை வணங்காத ஈசனை அவமானப்படுத்த ஒரு மாபெரும் வேள்வியை உருவாக்கினான். சிவபெருமான் தவிர ஏனைய வானவர்களும், தவசிகளும் தட்சனின் அழைப்பைப் பெற்று அதில் பங்கேற்றனர். இதனால் ஆத்திரமுற்ற பார்வதி தனது தந்தைக்கு புத்திபுகட்ட வந்தபோது அவமானப்படுத்தப்பட்டாள். அதனால் வெகுண்ட சக்தி, தந்தையின் யாகத்தை அழிக்குமாறு வீரபத்திரரை அனுப்பினார். யாகத்தில் கலந்து கொண்டு செய்த குற்றத்திற்காகத் தண்டனையும் பெற்ற சூரியன் பரிகாரம் தேட முற்பட்டார்.
பாண்டி நாட்டில் கீழக்கடற்கரை ஓரமாக தேவிபுரம், காளிபுரம், திருப்புணவாயில் ஆகிய தலங்களுக்கு அருகே அமைந்துள்ள வன்னிமந்தாரவனம் என்ற பகுதியில் உள்ள விநாயகரை துதித்து தவத்தில் ஈடுபட்டார். ஆதவனின் தவத்தால் மகிழ்வுற்ற விநாயகர் உடன் காட்சியளித்து அவரது பாவங்கள் விலகுமாறு அருளினார். தனக்கு அருள்புரிந்ததுபோல் பக்தர்களுக்கும் அருள் வழங்குமாறு வெய்யோன் வேண்டினார். மேலும் திருமேனி மீது தனது ஒளிக்கதிர்கள் முழுமையாக விழுந்து வணங்க வழிகாட்டுமாறு சூரியன் வரம் பெற்றார். சூரியன் கதிர்கள் தன் மீது முழுமையாக வீசுமாறு கோயில் கொண்டதால் இப்பெருமானுக்கு வெயிலுகந்த விநாயகர் என்ற பெயர் நிலைத்தது.