Category Archives: தோஷ நிவர்த்தி தலங்கள்
அருள்மிகு வலம்புரநாதர் திருக்கோயில், மேலப்பெரும்பள்ளம்
அருள்மிகு வலம்புரநாதர் திருக்கோயில், மேலப்பெரும்பள்ளம், (திருவலம்புரம்), தரங்கம்பாடி தாலுகா, நாகப்பட்டினம் மாவட்டம்.
+91- 4364 – 200 890, 200 685 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | வலம்புர நாதர் | |
உற்சவர் | – | சந்திரசேகரர், பத்மநாயகி | |
அம்மன் | – | வடுவகிர்கண்ணி | |
தல விருட்சம் | – | ஆண்பனை | |
தீர்த்தம் | – | பிரம்ம தீர்த்தம், லட்சுமி தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம் | |
ஆகமம்/பூஜை | – | சிவாகமம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | திருவலம்புரம் | |
ஊர் | – | மேலப்பெரும்பள்ளம் | |
மாவட்டம் | – | நாகப்பட்டினம் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர்கள் | – | அப்பர், சம்பந்தர், சுந்தரர் |
காசி மன்னன் ஒருவன் தன் மனைவி கற்புடையவளா என்பதை சோதிக்க நினைத்தான். ஒரு முறை மன்னனும் அமைச்சர்களும் காட்டிற்கு வேட்டையாட சென்றனர். அப்போது மன்னன், தன் அமைச்சரிடம்,”மன்னர் காட்டிற்கு வேட்டையாட சென்ற போது புலி அடித்து இறந்து விட்டார்” என்ற பொய்யை அரசியிடம் கூறும்படி உத்தரவிட்டார். அமைச்சரும் அதன் படி கூற, அரசி இச்செய்தி கேட்டவுடனேயே உயிரை விட்டாள். இந்த பொய் செய்தி கூறியதால் மன்னனுக்கு பிரம்மகத்தி தோஷம் ஏற்பட்டது. இந்த தோஷம் நீங்க மன்னன் சான்றோர்களிடம் விவாதித்தான். அதற்கு அவர்கள்,”மன்னா! திருவலம்புர திருத்தலத்தில் தினமும் 1000 அந்தணர்களுக்கு அன்னதானம் வழங்கினால் தோஷம் விலகும்” என்றனர். மன்னனும் அதன்படி செய்து வந்தான். ஒரு முறை அன்னதானம் நடந்து கொண்டிருந்த போது, அசரீரி தோன்றி,”அன்னதானம் நடக்கும் இக்கோயிலில் நீண்ட காலமாக ஒலிக்காத மணி, தானே ஒலிக்கும். அப்போது மன்னனின் தோஷம் விலகும்” எனக் கூறியது. அன்னதானம் தொடர்ந்து நடந்து வந்தது. பட்டினத்தார் ஒரு முறை இக்கோயிலுக்கு அன்னதானம் நடக்கும் நேரம் வந்தார். பசியோடு இருந்த அவர், மடப்பள்ளியில் இருந்தவரிடம் தனக்கு உணவு தருமாறு கேட்டார். அவர் உணவு தர மறுக்கவே, மடப்பள்ளியின் பின் பக்கம் வழிந்தோடும் கஞ்சியை இருகைகளால் அள்ளி குடித்து பசியாறியதாகவும், உடனே இதுநாள் அடிக்காமல் இருந்த மணியானது தானே ஒலிக்க ஆரம்பித்ததாகவும் தல வரலாறு கூறுகிறது. அன்னதானமே இன்னும் ஆரம்பிக்க வில்லை, அதற்குள் மணி ஒலித்து விட்டதே என அனைவரும் ஆச்சரியமடைந்து போய் பார்த்தபோது அங்கே பட்டினத்தடிகளை அனைவரும் தரிசித்தனர். உடனே மன்னனின் தோஷம் விலகியது. இதற்கான திருவிழா இப்போதும் சிறப்பாக நடைபெறுகிறது.
திருமால் சிவனைக்குறித்து தவம் செய்யப் போனபோது, திருமகளை இத்தலத்து அம்பிகையின் தோழியாக விட்டு சென்றார். தவத்தின் பலனாக சக்ராயுதமும், கதையும் பெற்றார். அதன் பின் இங்கு வந்து, அம்மனை வணங்கி சங்கும், பத்மமும் பெற்றார் என் தல வரலாறு கூறுகிறது. ஏரண்ட மகரிஷி திருவலஞ்சுழி காவிரியில் இறங்கி வலமாக வந்து இவ்வூரில் கரையேறினார். அதனால் இத்தலம் “திருவலம்புரம்” ஆனது. அவரது ஜீவ சமாதி இங்கு தனி கோயிலாக உள்ளது. சம்பந்தருடன் திருநாவுக்கரசர் பல தலங்கள் சென்று வழிபட்ட போது, சிவபெருமான் இத்தலத்தில் திருநாவுக்கரசரை அழைத்து காட்சி கொடுத்துள்ளார். மூலவர் பிரிதிவி சுயம்பு இலிங்கம். இங்குள்ள இலிங்கத்தின் மேல் பகுதியில் ஒரு கை நுழையும் அளவிற்கு இரு பள்ளங்கள் உள்ளது. எனவே இலிங்கத்திற்கு சாம்பிராணித்தைலம், புனுகுசட்டம் சாத்தப்படுகிறது. அபிஷேகத்தின் போது குவளை சாற்றப்படுகிறது. இதனால் இத்தலம் “மேலப்பெரும்பள்ளம்” ஆனது.
அருள்மிகு மாயூரநாதசுவாமி திருக்கோயில், மயிலாடுதுறை
அருள்மிகு மாயூரநாதசுவாமி திருக்கோயில், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டம்.
+91- 4364 – 223 779, 226 436, 93451 49412, 94422 36436 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 5.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | மாயூரநாதர் (வள்ளலார்) | |
அம்மன் | – | அபயாம்பிகை, அஞ்சொல்நாயகி | |
தல விருட்சம் | – | மாமரம் | |
தீர்த்தம் | – | இடபம், பிரம்ம, அகத்திய தீர்த்தம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | மாயூரம், திருமயிலாடுதுறை | |
ஊர் | – | மயிலாடுதுறை | |
மாவட்டம் | – | நாகப்பட்டினம் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர்கள் | – | திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் |
பார்வதியை மகளாக பெற்ற தட்சன், ஒரு யாகம் நடத்தினான். அதற்கு, தன் மருமகனான சிவனை அழைக்கவில்லை. எனவே சிவன், அம்பாளை யாகத்திற்கு செல்ல வேண்டாமெனக் கூறிவிட்டார். மனம் பொறுக்காத பார்வதிதேவி யாகத்திற்கு சென்றாள். சிவன், வீரபத்திர வடிவம் எடுத்து யாகத்தை அழித்தார். அப்போது, யாகத்தில் பயன்படுத்தப்பட்ட மயில் ஒன்று அம்பாளின் பாதத்தை சரணடையவே, அதற்கு அடைக்கலம் கொடுத்து காத்தாள் அம்பாள். தன் சொல்லை மீறி, யாகத்திற்கு வந்ததால் அம்பாளை, மயில் வடிவம் எடுக்கும்படியாக தண்டித்தார் சிவன். மயிலாக மாறிய அம்பாள் இத்தலத்திற்கு வந்தாள். சிவனை வேண்டித் தவமிருந்தாள். அவளை பிரிய மனமில்லாத சிவனும், மயில் வடிவத்திலேயே இங்கு வந்தார். அம்பாளின் பூஜையில் மகிழ்ந்து கௌரிதாண்டவ தரிசனம் தந்ததோடு, அம்பாளின் சுயரூபம் பெறவும் அருள் செய்தார். மயிலாக வந்து அருள் செய்ததால், “மாயூரநாதர்” என்றும் பெயர் பெற்றார்.
இக்கோயிலில் ஆதி மாயூரநாதருக்கு, பிரகாரத்தில் தனி சன்னதி இருக்கிறது. இங்கு சுவாமி இலிங்கமாக இருக்க, அருகில் அம்பாள் மயில் வடிவில் அவரை வழிபட்ட கோலத்தில் இருக்கிறாள். சுவாமி சன்னதிக்குப் பின்புறத்தில் உள்ள முருகனைக் குறித்து அருணகிரியார் பதிகம் பாடியிருக்கிறார். பெரும்பாலான சிவாலயங்களில் கந்த சஷ்டியின்போது, முருகன் அம்பாளிடம்தான் வேல் வாங்குவார். ஆனால், இத்தலத்தில் சிவனிடம் வேல் வாங்குவது விசேஷம். சிவனது கௌரி தாண்டவத்தை, “மயூரதாண்டவம்” என்றும் சொல்கிறார்கள். இந்த நடராஜர் தனி சன்னதியில் இருக்கிறார். தினமும் மாலையில் இவருக்குத்தான் முதல் பூஜை செய்யப்படுகிறது. இவருக்கு நேரே மயிலம்மன் சன்னதி இருக்கிறது. இதில் அம்பாள், சிவன் இருவரும் மயில் வடிவத்தில் இருக்கின்றனர். ஐப்பசி விழாவில் சிவன், அம்பாளுக்கு நடனக்காட்சி தந்த நிகழ்ச்சி நடக்கிறது. கோஷ்டத்திலுள்ள தெட்சிணாமூர்த்தியின் சிற்பத்தில் ஆலமரத்தில் இரண்டு மயில் மற்றும் குரங்குகள் இருப்பது போல அமைக்கப்பட்டிருப்பது விசேஷமான அமைப்பு. இவருக்கு கீழே நந்தியும் இருக்கிறது.