Category Archives: 108 திவ்விய தேசங்கள்

அருள்மிகு சீனிவாசப்பெருமாள் (அண்ணன் பெருமாள்) திருக்கோயில், திருவெள்ளக்குளம் (திருநாங்கூர்)

அருள்மிகு சீனிவாசப்பெருமாள் (அண்ணன் பெருமாள்) திருக்கோயில், திருவெள்ளக்குளம் (திருநாங்கூர்) – 609106 நாகப்பட்டினம் மாவட்டம்.

+91- 4364 – 266 534 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7 முதல் இரவு 8 மணிவரை நடை திறந்திருக்கும்.

மூலவர் அண்ணன் பெருமாள், கண்ணன், நாராயணன்
உற்சவர் சீனிவாசன், பூவார் திருமகள், பத்மாவதி
தாயார் அலர்மேல் மங்கை
தல விருட்சம் வில்வம், பரசு
தீர்த்தம் வெள்ளக்குள தீர்த்தம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் திருவெள்ளக்குளம் (திருநாங்கூர்)
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு

துந்துமாரன் என்ற அரசனுக்கு சுவேதன் என்ற மகன் இருந்தான். அவனுக்கு ஒன்பது வயதில் அகால மரணம் ஏற்படும் என வசிஷ்ட முனிவர் கூறினார். அரசன் தன் மகனை காப்பாற்ற முனிவரிடம் வழி கேட்டார். அவர்,”திருநாங்கூரில் உள்ள பொய்கையில் நீராடி அங்குள் பெருமாளை வேண்டி, தவம் இருந்தால் பலன் கிடைக்கும்என்றார். முனிவர் கூறியபடி சுவேதன் குளத்தில் நீராடி வசிஷ்டர் கூறிய நரசிம்ம மிருத்யஞ்சய மந்திரத்தைசீனிவாசப்பெருமாளின் முன்பாக ஒரு மாத காலம் கூறிவந்தான். மனமிறங்கிய பெருமாள்,”சுவேதா! நரசிம்ம மந்திரத்தை தொடர்ந்து கூறியதால் நீ சிரஞ்சீவி ஆனாய். அத்துடன் எவனொருவன் இத்தலத்தில் 8000 தடவை இம் மந்திரத்தை கூறுகிறானோ அவனுக்கு எம பயம் கிடையதுஎன்று கூறினார். வைணவத்தலங்களில் எம பயம் நீக்கும் தலம் இது.

மணவாள மாமுனிகளுக்கு பெருமாள் காட்சி கொடுத்த தலம்.

12 ஆழ்வார்களில் திருமங்கை ஆழ்வார் இரண்டு கோயில்களில் உள்ள பெருமாளைத்தான் அண்ணாஎன அழைத்து பாடியுள்ளார். ஒன்று திருப்பதியில் உள்ள பெருமாள். மற்றொன்று இத்தலப் பெருமாள். இதில் திருப்பதிக்கு முன்பே இத்தலத்துப் பெருமாளை அண்ணாஎனப் பாடியதால் இங்குள்ள பெருமாள் திருப்பதி ஏழுமலையானுக்கு அண்ணன்ஆகிவிடுகிறார். எனவேதான் இங்குள்ள சீனிவாசப்பெருமாளின் திருநாமம் அண்ணன் பெருமாள்என்றும் இத்தலம் அண்ணன் கோயில்என்றும் வழங்கப்படுகிறது. திருப்பதியைப்போன்றே இத்தலத்திலும் பெருமாளின் திருநாமம் சீனிவாசன்“, தாயாரின் திருநாமம் அலர்மேல்மங்கை“. திருமங்கையாழ்வார் இத்தலத்தைப் பூலோக வைகுண்டம் என்று பாடியுள்ளார்.

இங்குள்ள குளத்தில் குமுத மலர்களைப் பறிக்க தேவ மாதர்கள் வருவது வழக்கம். அப்படி வந்த போது ஒரு மனிதனின் பார்வை பட்டு இவர்களில் குமுதவல்லி தேவலோகம் செல்லும் சக்தியை இழக்கிறாள். இதனை கேள்விப்பட்ட நீலன் என்ற பெயரில் படைத்தளபதியாக விளங்கிய திருமங்கை இவளைத் திருமணம் செய்ய விரும்புகிறார். குமுதவல்லி தன்னைத் திருமணம் செய்யப் பல நிபந்தனைகள் விதிக்கிறாள். இவரும் நிபந்தனைகளை எல்லாம் நிறைவேற்றினார். கடைசியில் வைணவ அடியார்களுக்கு அன்னமிடும் நற்செயலில் ஈடுபடச்செய்தார். இதனையறிந்த பெருமாள் மன்னனுக்கு காட்சி கொடுத்து திருமந்திரத்தை உபதேசித்து ஆழ்வாராக மாற்றினார். ஒரு மங்கையினால் ஆழ்வாராக மாறியதால் திருமங்கை ஆழ்வார்என அழைக்கப்பட்டார். குமுதவல்லி நாச்சியார் தனி சன்னதியில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று. இத்தல இறைவன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் தத்வத் யோதக விமானம் எனப்படும். ருத்ரர், ஸ்வேதராஜன் ஆகியோர் இத்தல இறைவனின் தரிசனம் கண்டுள்ளனர்.

பாடியவர்கள்:

திருமங்கையாழ்வார் மங்களாசாஸனம்

கண்ணார் கடல்போல் திருமேனி கரியாய் நண்ணார்முனை வென்றி கொள்வார் மன்னுநாங்கூர் திண்ணார் மதிள்சூழ் திருவெள்ளக்குளத்துள் அண்ணா! அடியேன் இடரைக் களையாயே.

திருமங்கையாழ்வார்

திருவிழா:

திருப்பதியைப்போல் இத்தலத்திலும் புரட்டாசியில் பிரமோற்சவம். வைகாசி முதல் ஐந்து தேதிகளில் வசந்த உற்சவம். ஆடிமாதம் கடைசி வெள்ளி திருக்கல்யாணம்.

பிரார்த்தனை:

மிகப்பெரிய பிரார்த்தனை ஸ்தலமான இங்கு அறுபது, எழுபது, எண்பதாம் கல்யாணம் செய்து கொள்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:

திருமண தடை நீங்கவும், எம பயம் நீங்கவும் இங்கு துலாபாரம் காணிக்கை கொடுக்கிறார்கள்.

இருப்பிடம் :

சீர்காழிக்கு தெற்கே 6 கி.மீ. தூரத்தில் இத்தலம் உள்ளது. சீர்காழியிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் பஸ்சில் செல்லலாம்.

அருகிலுள்ள ரயில் நிலையம் : சீர்காழி

அருகிலுள்ள விமான நிலையம் : சென்னை, திருச்சி

தங்கும் வசதி : மயிலாடுதுறை

அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில், நாகப்பட்டினம்

அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில், நாகப்பட்டினம் – 611001 நாகப்பட்டினம் மாவட்டம்.

+91- 4365 – 221 374 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் நீலமேகப் பெருமாள்
உற்சவர் சவுந்திரராஜர், கஜலட்சுமி
தாயார் சவுந்திரவல்லி
தல விருட்சம் மாமரம்
தீர்த்தம் சார புஷ்கரிணி
ஆகமம்/பூசை பாஞ்சராத்ரம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் சுந்தரவனம்
ஊர் நாகப்பட்டினம்
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு

உத்தால பாத மகாராஜனின் குமாரன் துருவன். சிறுவனான இவன் நாரதர் மூலம் இத்தலத்தின் பெருமையை அறிந்தான். உலகம் முழுவதும் தனக்கே அடிமையாக வேண்டும் என்று பெருமாளை குறித்து, தவம் செய்தான். இவனது தவத்தை கலைக்க தேவர்கள் இடைஞ்சல் செய்தனர். இருப்பினும் தவத்தை வெற்றிகரமாக முடித்த துருவன் முன்பு பெருமாள் கருடன் மீது அமர்ந்து பேரழகு பொருந்தியவராக தரிசனம் தந்தார். பெருமாளின் பேரழகில் மயங்கிய துருவன் தான் கேட்க வந்த வரத்தை மறந்தான். இறைவனது பேரழகே போதும். இதில் தான் உண்மையான சுகம் இருக்கிறது. அந்தப் பேரழகை எப்போதும் தரிசிக்கும் பாக்கியத்தைத் தரவேண்டும் எனப் பெருமாளிடம் கேட்டான். பெருமாளும் தனது சவுந்தரியமான திருக்கோலத்தை துருவனுக்கு காட்டி அவன் தவமிருந்த தலத்திலேயே தங்கினார். அழகான இவர் சவுந்தரராஜப் பெருமாள்என்றழைக்கப்படுகிறார்.