Category Archives: பாடல் பெற்றவை
அருள்மிகு சத்தியவாகீஸ்வரர் திருக்கோயில், அன்பில்
அருள்மிகு சத்தியவாகீஸ்வரர் திருக்கோயில், அன்பில், திருச்சி மாவட்டம்.
+91 431 254 4927 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | சத்தியவாகீசுவரர், பிரம்மபுரீசுவரர் | |
அம்மன் | – | சவுந்திரநாயகி | |
தல விருட்சம் | – | ஆலமரம் | |
தீர்த்தம் | – | காயத்திரி தீர்த்தம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | அன்பிலாலந்துறை, கீழன்பில் ஆலந்துறை | |
ஊர் | – | அன்பில் | |
மாவட்டம் | – | திருச்சி | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர்கள் | – |
திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர் |
இக்கோயில் அற நிலையத்துறைக்கு உட்பட்டிருந்தா லும் கூட, பாழ்பட்டுப் போனதால் தல வரலாறு தெளிவாக கிடைக்க வில்லை. மூலவர் சத்யவாகீசுவரர். இவர் கிழக்கு நோக்கி சுயம்புவாக எழுந்துள்ளார். வாகீச முனிவர் பூஜை செய்ததால் “சத்தியவாகீசுவரர்” என அழைக்கப்படுகிறார். பிரம்மன் வழிபட்டதால் “பிரம்மபுரீஸ்வரர்” என்ற நாமமும் இவருக்கு உண்டு. அம்பாள் “சவுந்தரநாயகி.” ஊர் பெயர் அன்பில் கோயிலின் பெயர் ஆலந்துறை. இரண்டும் சேர்த்து அன்பிலாந்துறை ஆனது. இக்கோயிலில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவர் “செவிசாய்த்த விநாயகர்” மட்டுமே.
தேன் சுவை பாடல்கள் பாடிய திருஞானசம்பந்தர் சிவத்தலங்கள் பலவற்றிற்கு வந்தார். சிவனுக்கு இவரைச் சோதிக்க ஆசை. காவிரியில் தண்ணீர் கரை புரண்டோடச் செய்தார். ஞானசம்பந்தரால் கோயில் இருக்கும் இடத்தை அடைய முடியவில்லை. தூரத்தில் நின்ற படியே சுயம்புவாய் அருள்பாலிக்கும் சிவபெருமானைப் பாடினார். காற்றில் கலந்து வந்த ஒலி ஓரளவே கோயிலை எட்டியது. அங்கிருந்த சிவமைந்தர் மூத்த விநாயகர், “இளைய பிள்ளையார்” எனப்பட்ட தன் சகோதரனுக்கு சமமான ஞானசம்பந்தனின் பாட்டைக் கேட்பதற்காக, தன் யானைக்காதை பாட்டு வந்த திசை நோக்கி சாய்த்து கேட்டு ரசித்தார். அப்போது புன்முறுவல் முகத்தில் அரும்பியது. ஒரு காலை மடக்கி, இன்னொரு காலை குத்துக்காலிட்டு அமர்ந்து ரசித்த அக்காட்சியை சிற்பமாக வடித்தார் ஒரு சிற்பி. அச்சிலை இன்றும் எழிலுற இருக்கிறது. கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரம் கம்பீரமாக நிற்கிறது. கோபுரத்தில் அம்பிகையின் திருமணக் கோலம். ஊர்த்துவ தாண்டவமாடும் பரமசிவன், கஜசம்ஹாரமூர்த்தி என்று எராளமான வடிவங்கள்.
அருள்மிகு ஆலந்துறையார் (வடமூலநாதர்) திருக்கோயில், கீழப்பழுவூர்
அருள்மிகு ஆலந்துறையார் (வடமூலநாதர்) திருக்கோயில், கீழப்பழுவூர், அரியலூர் மாவட்டம்.
+91- 99438 82368 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | ஆலந்துறையார்(வடமூலநாதர்) | |
அம்மன் | – | அருந்தவ நாயகி | |
தல விருட்சம் | – | ஆலமரம் | |
தீர்த்தம் | – | பிரம, பரசுராம தீர்த்தம் | |
ஆகமம் | – | சிவாகமம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | திருப்பழுவூர் | |
ஊர் | – | கீழப்பழுவூர் | |
மாவட்டம் | – | அரியலூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர் | – | திருஞான சம்பந்தர் |
கயிலாயத்தில் அன்னை பார்வதி விளையாட்டாக சிவனின் கண்ணை பொத்தியதால், சிவனின் இரு கண்களாக விளங்கும் சூரிய, சந்திரரின் ஒளி இல்லாமல் போனது. இதனால் உலக இயக்கம் நின்றது. முனிவர்களும் தேவர்களும் கலங்கி நின்றனர். அப்போது சிவபெருமான் தனது தேவியிடம்,”விளையாட்டாகத் தவறு செய்தாலும் மற்றவர்களுக்கு அது பாதிப்பை ஏற்படுத்துமானால், அது பாவமே ஆகும். இந்த பாவத்திற்கு பிராயச்சித்தமாக, நீ என்னைப் பிரிந்து பூலோகம் செல். அங்கு பல தலங்களில் தவம் செய்து இறுதியாக அங்குள்ள யோகவனத்தில் தங்கியிரு. நான் அங்கு வந்து உன்னுடன் சேர்வேன்” என்றார்.
அதன்படி பார்வதி தவத்தை முடித்து விட்டு, யோகவனத்தில் புற்று மண்ணால் சிவலிங்கம் அமைத்து, ஒற்றைக்காலில் நின்று தவம் செய்தாள். இறைவனும் அவளுடன் இணைந்தார். அந்த யோகவனமே இன்றைய பழுவூராகும். தவம் செய்த அம்பிகை என்பதால் அம்பாள் “அருந்தவநாயகி” எனப்படுகிறாள்.
“பழு” என்றால் ஆலமரம். எனவே சுவாமி “ஆலந்துறையார்” எனப்படுகிறார். தல விருட்சமான ஆலமரம் இப்பகுதியில் அதிகமாதலால் “திருப்பழுவூர்” என பெயர் பெற்றது. முதலாம் பராந்தக சோழன் காலத்தில் இங்கு திருப்பணி நடந்துள்ளது. கிழக்கு நோக்கிய 5 நிலை ராஜகோபுரத்துடன், இரண்டு பிரகாரங்கள் உள்ளன. கோயில் கிழக்கு நோக்கியது. கோயில் எதிரில் குளம் உள்ளது. அம்பாள் சன்னிதி தனியே உள்ளது. அர்த்தமண்டப சுவரையொட்டி காலசம்காரர், அர்த்தனாரீசுவரர், கல்யாணசுந்தரர், கங்காளர், பைரவர் ஆகியோருடைய உருவங்கள் உள்ளன. தென்புற மேடைமீது அறுபத்துமூவர், திரிபுராந்தகர், ரிஷபாரூடர் ஆகியோரது உற்சவத்திருமேனிகள் உள்ளன. பிரகாரத்தில் துர்கை, திருநாவுக்கரசர், சம்பந்தர், வினாயகர், வீரபத்திரர், சப்தமாதர்கள் ஆகியோரது திருமேனிகள் உள்ளன. இறைவன் நேரே பார்த்தல் தெரிகிறார். மிகவும் அழகான மூர்த்தம். நாடோரும் 4 கால பூஜைகள் நடைபெருகின்றன. 1974 இல் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது . பங்குனியில் நடைபெரும் விழாவில் 3 ஆம் நாள் சுவாமி மேலப்பழுவூர் சென்று அங்குள்ள சமதக்னி முனிவருக்கு காட்சி தரும் ஐதீகம் நடைபெருகிறது.