Category Archives: பாடல் பெறாதவை
சப்தரிஷிஸ்வரர் திருக்கோயில், லால்குடி
அருள்மிகு சப்தரிஷிஸ்வரர் திருக்கோயில், லால்குடி, திருச்சி மாவட்டம்.
+91 431 2541 329
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | சப்தரிஷிஸ்வரர் | |
அம்மன் | – | சிவகாம சுந்தரி | |
பழமை | – | 500-1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | திருவத்துறை | |
ஊர் | – | லால்குடி | |
மாவட்டம் | – | திருச்சி | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
தாரகாசூரனின் தொல்லை தாங்காமல் சிவனிடம் முறையிட்டார்கள் தேவர்கள். சூரனின் அட்டகாசத்தை அடக்குவதாக சிவன் வாக்களித்தார். அதன்பொருட்டுதான் சூரனை அழிக்க முருகன் பிறந்தான்.
அடர்ந்த வனத்தில் அத்திரி, பிருகு, புலஸ்தியர், வசிட்டர், கவுதமர், ஆங்கீரசர், மாரிசி ஆகியோர் அமைதியாய் வாழ்ந்தனர். அவர்களிடம் திருவிளையாடல் செய்ய ஈசன், இளம்பாலகனான முருகனைக் கொண்டுவந்து அந்த ஏழு குடில் பகுதியில் போட்டார். ரிஷிபத்தினிகள் அதிசயமாய் அக்குழந்தையைப் பார்த்தனர். பாலகுமாரன் லேசாய் அழத்துவங்கினான். ஏழு பெண்களும் குழந்தைக்கு விளையாட்டு காட்டினர். குழந்தைக்குப் பசி ஏற்பட அழுகை அதிகரித்தது. ரிஷி பத்தினிகள் பால் தர மறுத்தார்கள். அதனால் அங்கே வந்த கார்த்திகைப் பெண்கள், தூக்கி பரிவோடு தாலாட்டி பாலூட்டினார்கள். வேள்வி முடித்து வந்த முனிவர்கள் தத்தம் மனைவியர் குழந்தைக்கு பாலூட்ட மறுத்ததைக் கேள்விப்பட்டனர். சிவனின் வாரிசுக்கு பால் கொடுத்தால் எவ்வளவு பாக்கியம். காலம் காலமாய் அந்த சந்தோஷத்தில் காலம் கழிக்கலாமே. அந்த நல்ல வாய்ப்பை கெடுத்து, அந்த புகழைக் கார்த்திகை பெண்களுக்கு கொடுத்து விட்டீர்களே என்று சினந்தார்கள். மனைவியரை அடித்து விரட்டினர். முருகப்பெருமான் தன் அவதார காரணத்தை உணர்ந்தார்.
சங்கரநாராயணர் திருக்கோயில், சங்கரன்கோவில்
அருள்மிகு சங்கரநாராயணர் திருக்கோயில், சங்கரன்கோவில், திருநெல்வேலி மாவட்டம்.
+91- 4636 – 222 265, 94862 40200
காலை 5 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்
மூலவர் | – | சங்கரலிங்கம் | |
அம்மன் | – | கோமதி அம்மன் | |
தல விருட்சம் | – | புன்னை | |
தீர்த்தம் | – | நாகசுனை தீர்த்தம் | |
ஆகமம் | – | காமீகம் | |
பழமை | – | 1000-2000 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | சங்கரன்கோவில் | |
மாவட்டம் | – | திருநெல்வேலி | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
பதினொன்றாம் நூற்றாண்டில் உக்ரபாண்டியன் என்ற மன்னர் பாண்டிய நாட்டை ஆண்டு வந்தார். மதுரை மீனாட்சியை தரிசிக்க யானை மீது செல்வார். கோவிலுக்குப் போகும் வழியில், யானை ஓரிடத்தில் நின்று காலால் மண்ணைக் கிளறுவது வழக்கம். ஒவ்வொரு முறை மதுரைக்குச் செல்லும் போதும் இவ்வாறு நிகழ்ந்து கொண்டிருந்தது. பின்னாளில் அவ்விடம் புன்னை மரங்கள் சூழ்ந்து புன்னை வனமாகக் காட்சி தந்தது. புன்னை வனத்தில் மணிக்ரீவன் என்பவன் பூந்தோட்டம் அமைத்து, பாதுகாத்து வந்தான். நந்தவனத்திற்கு சற்று தொலைவில் பாம்புப் புற்று இருந்ததால், மணிக்ரீவன் கோடரியால் புற்றைத் தகர்க்கலானான். அப்போது அதனுள் இருந்த நாகத்தின் வாலில் கோடரி பட்டதால், வால் துண்டாகியது, புற்றினடியில் நாகமும், அருகில் ஒரு சிவலிங்கமும் இருப்பதைக் கண்டு மணிக்ரீவன் திடுக்கிட்டான். புற்றைத் தாக்கிய பாவச் செயலைச் செய்ததற்கு வருந்தினான். பின்பு இந்த அதிசயச் செய்தியை ஊராரிடமும் மன்னரிடமும் தெரிவித்தான். மன்னர் விரைந்து வந்தார். “உக்ரபாண்டியனே! மதுரைக்குச் சென்று அப்பனை வழிபட்டு வந்த உனக்காகவே யாம் இங்கு தோன்றினோம்” என்ற ஒலி வானில் ஒலித்தது. உக்ரபாண்டியன் புன்னைவனத்தில் முறையாகக் கோவில் எழுப்பி, சிவலிங்கப் பிரதிஷ்டை செய்வித்தார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் இக்கோவில் உள்ளது. நெல்லை மாவட்டத்திலுள்ள பஞ்சபூதத் தலங்களில், பிருத்வித்தலமாக விளங்குகிறது. வரராசபுரம், புன்னைவனம், ஸ்ரீஇராஜபுரம் என்றும் இத்தலம் பெயர்களைப் பெற்றுள்ளது.சங்கன் என்னும் நாக அரசன் சிவன் மீதும், பதுமன் என்ற அரசன் திருமால் மீதும் பக்தி கொண்டிருந்தனர். இருவருக்கும் அடிக்கடி சிவன் பெரியவரா? திருமால் பெரியவரா? என்ற வாதம் எழுந்தது. தீர்ப்பு வேண்டி பார்வதியிடம் முறையிட்டனர். இருவரும் சம சக்தி கொண்டவர்களே என்பதை அவர்களுக்கு தெரிவிக்க, இருவரும் இணைந்து காட்சி தரும்படி அம்பாள் தவமிருந்தாள். இதையடுத்து, இருவரும் ஒன்றாக இணைந்து சங்கரநாராயணராக காட்சி தந்தனர். பின்னர், அம்பிகையின் வேண்டுதலுக்காக சிவன், சங்கரலிங்கமாகவும் எழுந்தருளி னார். நாகராஜாக்கள் இருவரும் சங்கரலிங்கத்தை வழிபட்டு வந்தனர். காலப்போக்கில் இந்த இலிங்கத்தைப் புற்று மூடி விட்டது. நாகராஜாக்களும் அதனுள்ளேயே இருந்தனர். பக்தர் ஒருவர் இந்த புற்றை இடித்தபோது, உள்ளிருந்த நாகத்தின் வாலை வெட்டிவிட்டார். இரத்தம் வெளிப்பட்டது. அதிர்ந்தவர் புற்றுக்குள் பார்த்தபோது இலிங்கத்தைக் கண்டார். தகவல், பாண்டிய மன்னனுக்கு சென்றது. இலிங்கம் இருந்த இடத்தில் அவன் கோயில் எழுப்பினான்.சிவன், அம்பாள் சன்னதிகளுக்கு நடுவில் சங்கரநாராயணர், சன்னதி உள்ளது. சிவனுக்குரிய வலப்பாகத்தில் தலையில் கங்கை, பிறைச்சந்திரன், அக்னி, ஜடாமுடியும் உள்ளன. காதில் தாடங்கம், கையில் மழு, மார்பில் உருத்ராட்சம், இடுப்பில் புலித்தோல் ஆடை இருக்கிறது. திருவாசியில் நாக வடிவில் சங்கன் குடை பிடித்தபடி இருக்கிறான். திருமாலுக்குரிய இடப்பாகத்தில் நவமணி கிரீடம், காதில் மாணிக்க குண்டலம், மார்பில் துளசிமணி மற்றும் இலட்சுமி மாலை, கையில் சங்கு, இடுப்பில் பீதாம்பரம் இருக்கிறது. இவர் பக்கமுள்ள திருவாசியில் நாக வடிவில் பதுமன் குடை பிடிக்கிறான். இச்சன்னதியில் காலை பூஜையில் மட்டும் துளசிதீர்த்தம் தரப்படும். மற்ற நேரங்களில் விபூதி தருகின்றனர். பூஜையின் போது சிவனுக்குரிய வில்வம், பெருமாளுக்குரிய துளசி மாலைகளை அணிவிக்கிறார்கள்.
சிவன் அபிஷேகப்பிரியர். திருமால் அலங்காரப்பிரியர். எனவே திருமாலுக்கு உகந்த வகையில் மூலவர் சங்கரநாராயணர் எப்போதும் அலங்காரத்துடன் காட்சி தருகிறார். இவருக்கு அபிஷேகம் கிடையாது. இச்சன்னதியில் ஸ்படிகலிங்கமாக காட்சி தரும் சந்திரமவுலீஸ்வரருக்கே அபிஷேகம் செய்யப்படுகிறது. சிவராத்திரி, ஏகாதசி நாட்களில் உற்சவருக்கு அபிஷேக, பூஜை நடக்கும். ஆடித்தபசு விழாவன்று மட்டும் அம்பாளுக்கு காட்சி தர இவர் வெளியேபுறப்பாடாகிறார்.சந்திரன்(மதி) போலப் பொலிவான முகம் கொண்ட அம்பிகை, இங்கு தவம் புரிய வந்தபோது, தேவலோக மாதர்கள் பசுக்கள் வடிவில் அவளுடன் வந்தனர். எனவே இவள், “கோமதி” என்று பெயர் பெற்றாள். “ஆவுடையாம்பிகை” என்றும் இவளுக்கு பெயர் உண்டு. “ஆ” என்றாலும் “பசு.” “பசுக்களை உடையவள்” என்று பொருளுண்டு. திங்கள் கிழமைகளில் இவளுக்கு மலர்ப் பாவாடை, வெள்ளிக் கிழமையில் தங்கப்பாவாடை அணிவித்து அலங்காரம் செய்கின்றனர். திருமண, புத்திரதோஷம் உள்ளவர்கள் மாவிளக்கில், நெய் தீபம் ஏற்றி வேண்டிக்கொள்கிறார்கள். அம்பாள் கோயில்களில் பீடத்திற்கு அடியில் அல்லது அம்பிகையின் பாதம் முன்பு ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும். ஆனால், இங்கு அம்பாள் சன்னதி முன்மண்டபத்தில் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதை, “ஆக்ஞா சக்ரம்” என்கின்றனர். மனநோய், மனக்குழப்பம் உள்ளவர்கள் இச்சக்ரத்தின் மேல் அமர்ந்து அம்பிகையிடம் வேண்டிக் கொள்கிறார்கள். இதனால் நோய் நிவர்த்தியாவதாக நம்பிக்கை.
“தபஸ்” என்றால் “தவம்” அல்லது “காட்சி” எனப்பொருள்படும். அம்பாள், சிவ, விஷ்ணுவை சங்கர நாராயணராகக் காட்சி தர வேண்டித் தவமிருந்து, அவரது காட்சியைப் பெற்ற நாளே ஆடித்தபசு திருநாளாகும். இந்த விழா, 12 நாட்கள் நடக்கும். அம்பாளுக்கான பிரதான விழா என்பதால், அம்பாள் மட்டுமே தேரில் எழுந்தருளுவாள். கடைசி நாளில் அம்பிகை தபசு மண்டபம் சென்று, கையில் விபூதிப்பையுடன் ஒரு கால் ஊன்றி தவம் இருப்பாள். மாலையில் சங்கரநாராயணர் இவளுக்கு காட்சி தருகிறார். அதன்பின் சங்கரலிங்க சுவாமி, யானை வாகனத்தில் சென்று அம்பாளுடன் இணைந்து கோயிலுக்குச் செல்வார்.சிவாலயங்களில் ஐப்பசி பவுர்ணமியன்றுதான் இலிங்கத்திற்கு அன்னாபிஷேகம் செய்வர். ஆனால், இக்கோயிலில் சித்திரை மற்றும் ஐப்பசி மாதப்பிறப்பன்று அன்னாபிஷேகம் செய்கின்றனர். துவங்கும் புதிய வருடத்தில் உணவிற்கு பஞ்சமில்லாத நிலை இருக்க வேண்டும் என்பதற்காக சித்திரையிலும், ஐப்பசி புண்ணிய காலத் துவக்கம் என்பதால் அம்மாதத்தின் முதல் நாளிலும் இந்த அபிஷேகத்தை செய்கிறார்கள். பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி விழா நடப்பதுபோல, இங்கும் கொண்டாடப்படுகிறது. இதற்காக கோயிலின் வடக்கு பிரகாரத்தில் சொர்க்கவாசல் இருக்கிறது. அன்று மகாவிஷ்ணு, பல்லக்கில் அனந்த சயனத்தில் எழுந்தருளி, இரதவீதி சுற்றி வருவார். அன்று சொர்க்கவாசல் திறக்கப்படும்.சிவன் சன்னதி பிரகாரத்தில் வன்மீகநாதர் சன்னதி இருக்கிறது. புற்று வடிவில் அமைந்த இச்சன்னதியில் சிவன், சுயரூபத்துடன் காட்சி தருகிறார். தலைக்கு மேலே குடை பிடித்தபடி இருக்கும் நாகத்தின் மீது இவர் அமர்ந்திருப்பது அபூர்வ அமைப்பு. புற்றுக்குள் (வன்மீகம் என்றால் புற்று) இருப்பவர் என்பதால் இவருக்கு இப்பெயர். நாகதோஷம் உள்ளவர்கள் புற்று மீது மஞ்சள் தூவி வேண்டிக் கொள்கிறார்கள். இச்சன்னதி எதிரில் பஞ்ச நாக சிலைகள் இருக்கிறது. பக்தர்கள் இச்சிலைகளுக்கு பாலபிஷேகம் செய்கிறார்கள்.சிவன் சன்னதி கோஷ்டத்தின் (கருவறை சுற்றுச்சுவர்) பின்புறத்தில் இலிங்கோத்பவர் இருப்பார். சில தலங்களில் திருமால் காட்சி தருவார். ஆனால் இங்கு “யோக நரசிம்மர்” இருக்கிறார். புரட்டாசி சனிக்கிழமைகளில் இவருக்கு விசேஷ பூஜை நடக்கிறது. பல் வலி உள்ளவர்கள் இவருக்கு அபிஷேகம் செய்து வேண்டிக் கொள்கிறார்கள். இக் கோயிலில் “சர்ப்ப விநாயகர்” கையில் நாகத்துடன் காட்சி தருகிறார். இராகு, கேது தோஷம் உள்ளவர்கள் இவருக்கு ஞாயிறு இராகு காலத்தில், பாலபிஷேகம் செய்து, பால் பாயசம் படைத்து வேண்டிக்கொள்கிறார்கள். குழந்தைகள், விஷப்பூச்சிகளால் பாதிக்கப்படாமல் இருக்க இவருக்கு அருகம்புல் மாலை அணிவித்தும் வேண்டிக் கொள்கின்றனர்.
பெரும்பாலான முருகத் தலங்களில் கந்தசஷ்டியின்போது, சூரசம்ஹாரத் திற்கு ஒரு முகம் கொண்ட சுப்பிரமணியராக மட்டுமே முருகன் செல்வார். ஆனால் இங்கு ஆறு முகங்களுடன் சண்முகர் செல்கிறார். சம்ஹாரத்தின்போது முருகன், விஸ்வரூபம் எடுத்ததன் அடிப்படையில் இவ்வாறு செல்வதாகச் சொல்கிறார்கள். மறுநாள் முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது.இங்கு சங்கரநாராயணர் சிறப்பு மூர்த்தியாக உள்ளார். இங்கு தல விநாயகர் அனுக்ஞை விநாயகர் எனப்படுகிறார். இக்கோவிலில் சங்கரலிங்க ஸ்வாமி, சங்கரநாராயணர், கோமதியம்மன் எனத் தனித்தனி சந்நிதிகள் உள்ளன. இராஜகோபுரம் ஒன்பது அடுக்குகள், 125 அடி உயரம், இதிகாச, புராணக் காட்சிகளைக் கொண்ட நிலைகள் என கம்பீரமாகக் காட்சி தருகிறது. இங்கு புற்று மண்தான் பிரதான பிரசாதம். நோயுள்ளவர்கள் இந்த மண்ணை நீரில் கரைத்து சாப்பிடுகின்றனர். வீடுகளில் பூச்சி, பல்லி, பாம்புத் தொல்லை இருந்தால், சங்கரலிங்கனாருக்கு வேண்டிக் கொண்டு, அதன் வெள்ளி உருவங்களை வாங்கி காணிக்கையாக அளித்தால் தொல்லை நீங்கும் என்பது நம்பிக்கை.பிரம்மா, விஷ்ணு, சிவன் என மும்மூர்த்திகளும் எழுந்தருளியுள்ள ஒரே தலம் சங்கரநயினார் கோவில் என்னும் பெருமை பெற்றுள்ளது. தென்திசை நோக்கிய துர்க்கை மிகவும் சக்தி வாய்ந்தவள். கோயில் நுழைவு வாயிலில் அதிகார நந்தி, தன் மனைவி சுயஜ்ஜாதேவியுடன் காட்சி தருகிறார். சிவன் எதிரேயுள்ள நந்தி உருத்ராட்ச பந்தலின் கீழ் இருக்கிறார்.மூலஸ்தானத்தில் சிவனும், பெருமாளும் ஒன்றாக அருளுகின்றனர்.
மார்ச், செப்டம்பர் மாதங்களில், 21ம் தேதியிலிருந்து மூன்று நாட்கள் சங்கரலிங்கம் மீது சூரிய ஒளி விழுகிறது.
திருவிழா:சித்திரை, மார்கழி திருவிழாவின்போது சிவன், ரிஷப வாகனத்தில் அறுபத்து மூவருக்கு காட்சி தரும் வைபவம் நடக்கிறது. தை கடைசி வெள்ளியன்று தெப்பத்திருவிழா நடக்கிறது. ஆடித்தபசு, பங்குனி – சித்திரையில் 41 நாட்கள் பிரம்மோற்ஸவம், ஐப்பசியில் திருக்கல்யாணம், தை மாதம் தெப்ப உற்சவம். கோரிக்கைகள்:ஒற்றுமை குணம் உண்டாக, தானே பெரியவன் என்ற எண்ணம் நீங்க இங்கு வேண்டிக் கொள்ளலாம். நேர்த்திக்கடன்:வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவன், இறைவி, சங்கரநாராயணருக்குத் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.