Category Archives: நவகைலாயங்கள்

அருள்மிகு கைலாசநாதர் கோயில், சேர்ந்தபூமங்கலம்

அருள்மிகு கைலாசநாதர் கோயில், சேர்ந்தபூமங்கலம், தூத்துக்குடி மாவட்டம்.

 

மூலவர் : கைலாசநாதர்

அம்பிகை : சௌந்தர்யநாயகி

நவகயிலாயத்தில் ஒன்பதாவதாக விளங்கும் இத்தலத்தின் இறைவன் சுக்கிர அம்சமாக விளங்குகிறார். அகத்தியர் தனது சீடர் உரோமச முனிவருக்காகத் தாமிரபரணி ஆற்றில் விட்ட ஒன்பது மலர்களில் ஒன்பதாவது மலர் சேர்ந்த இடம். இதனால் இவ்வூருக்குச் சேர்ந்த பூமங்கலம் என்ற பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது தாமிரபரணி ஆறு கடலோடு சங்கமிக்கும் இடம் என்பதால் சேர்ந்தமங்கலம் என்ற பெயர் வந்ததாகவும் ஒரு சிலர் கூறுகிறார்கள். இரண்டும் சேர்ந்து சேர்ந்தபூமங்கலம்ஆயிற்று.

கோயிலுக்கு கோபுரம் கிடையாது. கொடிமரம் உள்ளது. இக்கோயில் கல்வெட்டில் குடநாட்டு ஆத்தூர் சேர்ந்தமங்கலம் என்றும் அவனிய சதுர்வேதிமங்கலம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது இக்கோயில் முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியனால் கட்டப்பட்டிருக்கலாம் என்கிறார்கள் சிலர். சேந்தன் என்று குறிப்பிடப்பட்ட பாண்டியன் குலசேகரன் காலத்தில் கட்டப்பட்டது என்கிறார்கள் சிலர். நவகைலாயங்களுக்கும் சென்று வழிபட்டால் நவக்கிரக தலங்களுக்கும் சென்று வழிபட்ட பலன் உண்டு.

வழிகாட்டி: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூரிலிருந்து வடக்கில் சுமார் 15 கி.மீ தொலைவிலும், தூத்துக்குடியிலிருந்து தெற்கே 20 கி.மீ தொலைவிலும் தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் உள்ளது.

பாபநாசநாதர் திருக்கோயில், பாபநாசம்

அருள்மிகு பாபநாசநாதர் திருக்கோயில், பாபநாசம், திருநெல்வேலி மாவட்டம்.

+91- 4634 – 223 268

காலை 6.30 மணி முதல் 1 மணி வரை, மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பாபநாசநாதர்
அம்மன் உலகம்மை
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் இந்திரகீழ க்ஷேத்திரம்
ஊர் பாபநாசம்
மாவட்டம் திருநெல்வேலி
மாநிலம் தமிழ்நாடு

கைலாயத்தில் சிவனுக்கும், பார்வதிக்கும் திருமணம் நடந்த போது வடக்கே தாழ்ந்து, தெற்கே உயர்ந்தது. பூமியை சமப்படுத்துவதற்காக, அகத்தியரைப் பொதிகை மலைக்கு அனுப்பினார் சிவன். சித்திரை மாதப்பிறப்பன்று அவருக்கு தனது திருமணக் கோலத்தை காட்டியருளினார். கருவறைக்கு பின்புறம் பிரகாரத்தில் கல்யாண சுந்தரராக அம்பாளுடன் ரிஷபத்தின் மீது அமர்ந்த கோலத்தில் சிவன் இருக்கிறார். அருகிலேயே அகத்தியரும் அவர் மனைவி, லோபாமுத்திரையும் வணங்கிய கோலத்தில் உள்ளனர்.

அசுர குருவான சுக்ராச்சாரியாரின் மகன் துவஷ்டா என்பவனை, குருவாக ஏற்றான் இந்திரன். ஒருசமயம் துவஷ்டா அசுரர்களின் நலனுக்காக யாகம் ஒன்றை நடத்தினார். இதனை அறிந்த இந்திரன் அவரைக் கொன்று விட்டான். இதனால் அவனை பிரம்மகத்தி தோஷம் பிடித்தது. பூலோகத்தில் பல தலங்களுக்கும் சென்று சிவனை வழிபட்டு விமோசனம் தேடினான். வியாழ பகவான் இந்திரனிடம், இத்தலத்தில் உள்ள சுவாமியை வணங்கினால் தோஷம் நீங்கும் என்றார். அதன்படி இந்திரன் இத்தலத்தின் எல்லைக்கு வந்தபோதே பாவம் நீங்கப்பெற்றான். இந்திரனின் பாவத்தை நீக்கிய சிவன் என்பதால் இவரை பாபநாசநாதர்என்கின்றனர். இத்தலத்திற்கு இந்திரகீழ க்ஷேத்திரம்என்ற பெயரும் இருக்கிறது.