Category Archives: வீரபத்திரர்

அருள்மிகு வீரபத்திரசுவாமி திருக்கோயில், ராயசோட்டி

அருள்மிகு வீரபத்திரசுவாமி திருக்கோயில், ராயசோட்டி, கடப்பா மாவட்டம், ஆந்திர மாநிலம்.

+91- 8561 – 250 307, 98854 79428, 94410 12682

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 5 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வீரபத்திரர் (ராஜராயுடு)
உற்சவர் கல்யாண வீரபத்திரர்
அம்மன் பத்ரகாளி
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் மாண்டவ்ய தீர்த்தம்
ஆகமம் வீரசைவாகமம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் ராஜவீடு
ஊர் ராயசோட்டி
மாவட்டம் கடப்பா
மாநிலம் ஆந்திரா

தன்னை அழைக்காமல் தட்சன் யாகம் நடத்தியதால் சிவன் தனது அம்சமான வீரபத்திரரை அனுப்பி யாகத்தை அழிக்க உத்தரவிட்டார். யாகத்தை அழித்த பின்பும் வீரபத்திரரின் உக்கிரம் தணியவில்லை. இந்நேரத்தில், மாண்டவ்ய மகரிஷி என்பவர், வீரபத்திரரின் தரிசனம் வேண்டி சிவலிங்கம் அமைத்து தவமிருந்தார். வீரபத்திரர் அவருக்கு உக்கிரமாக காட்சி கொடுத்தார். இதைக்கண்ட மகரிஷி அம்பிகையிடம் அவரைச் சாந்தப்படுத்தும்படி வேண்டினார். அதன்படி அம்பாள் பத்ரகாளியாக இங்கு வந்தாள். வீரபத்திரர் சாந்தமானார். இருவரும் தான் தவமிருந்த இடத்தில் எழுந்தருளும்படி வேண்டினார் மாண்டவ்யர். அத்தலமே தற்போதைய ராயசோட்டி. பிற்காலத்தில் மன்னன் ஒருவன், இங்கு கோயில் எழுப்பினான். இராஜகோபுரத்துடன், வீரபத்திரருக்கென பிரதானமாக அமைந்த பெரிய கோயில் இது. மூலஸ்தானத்தில் வீரபத்திரர் அருகில் தட்சன் வணங்கியபடி அமர்ந்திருக்கிறான். வீரபத்திரருக்கு வலப்புறத்தில் மாண்டவ்யர் பூஜித்த சிவலிங்கம் இருக்கிறது. இந்த இலிங்கத்திற்குப் பூஜை செய்த பிறகே, வீரபத்திரருக்கு பூஜை செய்கின்றனர். வீரபத்திரர் காலையில் பால ரூபமாகவும், மாலையில் மீசையுடன் வீரக் கோலமாகவும் காட்சி தருகிறார். பெருமாள் தலங்களைப் போல, இங்கும் வீரபத்திரரின் பாதம் பொறித்த சடாரியால் ஆசிர்வாதம் செய்யப்படுகிறது. வெற்றிலையை பிரதான பிரசாதமாகத் தருகின்றனர்.

அருள்மிகு வீரபத்திரசுவாமி திருக்கோயில், நாகப்பட்டினம்

அருள்மிகு வீரபத்திரசுவாமி திருக்கோயில், பழைய பஸ் ஸ்டாண்டு அருகில், நாகப்பட்டினம், நாகப்பட்டினம் மாவட்டம்.

+91- 98949 06455 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் விஸ்வநாதர்
உற்சவர் அக்னி வீரபத்திரர், அகோர வீரபத்திரர்
அம்மன் விசாலாட்சி
தல விருட்சம் இலந்தை
தீர்த்தம் வீரகங்கை
ஆகமம் காமீகம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் சிவராததானி
ஊர் நாகப்பட்டினம்
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு

தன்னை அழைக்காமல் யாகம் செய்த தட்சனை அழிக்க, சிவன் தனது அம்சமான வீரபத்திரரை அனுப்பினார். வீரபத்திரரும் தட்சனை அழித்து விட்டார். இதனால் அவரை பிரம்மகத்தி தோஷம் (கொலை பாவம்) பிடித்தது. இந்த தோஷம் தீர, பூலோகத்தில் சிவபூஜை செய்ய வேண்டுமென கூறிய மகரிஷிகள், ஒரு நதியில் அவரது ஆபரணங்களை வீச வேண்டுமென்றும், அவை கரை ஒதுங்கும் இடத்தில் சிவபூஜை செய்யும்படியும் கூறினர். அதன்படி நதியில் வீரபத்திரர் தான் அணிந்திருந்த அணிகலன்களை வீச, அவை இத்தலத்தில் கரை ஒதுங்கின. இங்கே, வீரபத்திரர் இங்கு இலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டார். பிற்காலத்தில் இங்கு வீரபத்திரருக்கும், சிவனுக்கும் கோயில் எழுப்பப்பட்டது.

வீரபத்திரர் தனிசன்னதியில் தெற்கு நோக்கி காட்சி தருகிறார். வழக்கமாக வீரபத்திரர் அருகில் ஆட்டுத்தலையுடன் தட்சன் வணங்கியபடி இருப்பார். இங்கோ, தட்சனின் வெட்டிய தலையை கையில் வைத்துள்ளார். ஐப்பசி பூசம் நட்சத்திரத்தில், வீரபத்திரரின் தோஷம் நிவர்த்தியானதாக ஐதீகம். எனவே அந்நாளில் வீரபத்திரருக்கு விசேஷ பூஜை நடக்கிறது. அன்று சிவபூஜையை வீரபத்திரரே செய்வதாக ஐதீகம். எனவே அன்று உச்சிக்காலத்தில் (மதிய வேளை) உற்சவர் அகோர வீரபத்திரரை, விஸ்வநாதர் சன்னதிக்குள் கொண்டு சென்று பூஜை செய்கின்றனர். அன்று ஒருநாள் மட்டுமே, வீரபத்திரர், சிவன் இருவரையும் சேர்த்து தரிசிக்க முடியும்.