அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில், கருங்குளம்
அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில், கருங்குளம், தூத்துக்குடி மாவட்டம்.
மூலவர் | – | வெங்கடாசலபதி(ஸ்ரீநிவாசப் பெருமாள்) |
தாயார் | – | ஸ்ரீதேவி, பூதேவி |
தல விருட்சம் | – | புளியமரம் |
ஊர் | – | கருங்குளம் |
மாவட்டம் | – | தூத்துக்குடி |
மாநிலம் | – | தமிழ்நாடு |
சுபகண்டன் என்னும் அரசனுக்கு தீராத நோய் ஏற்பட்டது. அதன் காரணமாக உடல் வலியால் மிகவும் அவதிப்பட்டார். திருப்பதி சென்று ஏழுமலையானிடம் தனது உடல் நோயிலிருந்து தன்னை விடுவிக்கும்படி மனமுருக வேண்டிக் கொண்டார். அவரது கோரிக்கையை ஏற்ற திருப்பதி வேங்கடவன், சந்தன மரத்தால் ஆன தேர் ஒன்றை செய்யும்படியும், அவ்வாறு தேர் செய்யும்போது இரண்டு சந்தனக் கட்டைகள் மீதமிருக்கும் எனவும், அந்த சந்தனக் கட்டைகளை, தென்பாண்டி நாட்டிற்கு எடுத்துச் சென்று, கருங்குளத்தில் உள்ள வகுளகிரிமலையில் பிரதிஷ்டை செய்தால் அங்கு வாழும் எல்லா மக்களும் நல வாழ்வு பெறுவர் எனவும், அவ்வாறு செய்தால் மன்னரின் உடல் உபாதை சரியாகும் எனவும், வேங்கடவன், மன்னரின் கனவில் வந்து கூறினார்.
இறைவனின் அருள்வாக்கின்படியே மன்னர் தேர் செய்து மீதமான இரண்டு சந்தனக் கட்டைகளை கருங்குளத்தில் பிரதிஷ்டை செய்தார். அவரது வேதனையும் தீர்ந்தது.
பொதுவாக எல்லா கோயில்களில் உள்ள சுவாமி சிலைகளைப் போல் அல்லாமல், இக்கோயில் மூலவர் சந்தனக் கட்டையால் ஆனவர். திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சுற்றியே நவதிருப்பதி கோயில்கள் உள்ளன. இந்த நவதிருப்பதி கோயில்களுக்கும், இந்த கருங்குளம் வெங்கடாசலபதி கோயிலுக்கும் ஒரு சம்பந்தம் உள்ளது. நாம் நவதிருப்பதி கோயில்களை தரிசனம் செய்வதற்கு முன்னால் இந்த வெங்கடாசலபதியை தரிசித்துச் சென்றால், எல்லா நவதிருப்பதி கோயில்களின் தரிசனமும் எந்தவித தடங்கலும் இல்லாமல் முழுமையாகக் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இக்கோயில் சுமார் 1200 வருடங்களுக்கு முந்தைய கோயில். இக்கோயில் தாமிரபரணி ஆற்றின் தெற்குக் கரையில் அமைந்துள்ள மிக அழகிய கோயில். இயற்கை அழகு நிறைந்த, சுத்தமான காற்று வீசும் பகுதியில், இக்கோயில் அமைந்துள்ளது. வெங்கடாசலபதிக்கு தினமும் திருமஞ்சனம் என்பது சிறப்பு. இது, விஷ்ணுதாரு ரூபமாக காட்சி தரும் தலமாக விளங்குகிறது.
இக்கோயிலுக்கு சென்று தரிசனம் செய்வது திருப்பதி திருமலைக்குச் சென்று வருவதற்குச் சமம் என்று சொல்கிறார்கள். இக்கோயில் தலவிருட்சம் புளியமரம். இந்த மர இலைகள் மாலை நேரத்திலும் சுருங்குவதில்லை. அதனாலேயே இந்த மரத்தினை உறங்காப் புளி என்றும், இக்கோயில் கிணறு எந்த காலத்திலும் வற்றியதில்லை என்பதால், தண்ணீர் ஊற வேண்டிய அவசியம் இல்லாததால் ஊறாக் கிணறு என்றும் அழைக்கப்படுகின்றன.
வகுளகிரி மலையின் மேல் அமைந்துள்ளதால் வகுளகிரி க்ஷேத்திரம் என்றும் இக்கோயில் அழைக்கப்படுகிறது. இதய நோய் பிரச்சினை உள்ளவர்கள் இக்கோயிலுக்கு வேண்டிக் கொண்டு சித்திரான்னங்களாகிய தேங்காய் சாதம், புளியஞ் சாதம், எலுமிச்சை சாதம், சர்க்கரைப் பொங்கல், தயிர் சாதம் போன்ற இவற்றை சுவாமிக்கு படையல் போட்டு அனைவருக்கும் பிரசாதமாகத் தருவர். இங்கிருக்கும் வெங்கடாசலபதி மருத்துவர்களுக்கெல்லாம் மருத்துவர். அதனாலேயே பல இருதய நோய் சிகிச்சை நிபுணர்கள் இங்கு வந்து தாங்கள் செய்யும் மருத்துவம் எல்லோரது நோய்களையும் சரிபடுத்த வேண்டும் என்றுவேண்டிச் செல்வர்.
சித்திராப் பௌர்ணமி விழா இங்கு வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. புரட்டாசி மாதத்தின் எல்லா சனிக்கிழமைகளிலும் கருட சேவை நடைபெறுகிறது. பவித்ரோத்சவம் ஜூலை மாதத்தில் மூன்று நாட்கள் நடைபெறுகிறது. மாசிமகமும் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
வழிகாட்டி:
இந்த அழகிய வெங்கடாசலபதி திருக்கோயில், திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பாதையில் உள்ளது. இக்கோயில் திருநெல்வேலியில் இருந்து 18 km தொலைவிலும், தூத்துக்குடியில் இருந்து 40 km தொலைவிலும் அமைந்துள்ளது.
Leave a Reply