அருள்மிகு வடக்கூர் அம்மன், மணமேல்குடி
அருள்மிகு வடக்கூர் அம்மன், மணமேல்குடி, புதுக்கோட்டை மாவட்டம்
பத்தினியாக வாழ்ந்த நல்லதங்காள், வறுமையின் கொடுமையால் தன் குழந்தைகளைக் கிணற்றில் வீசி, தானும் உயிரை மாய்த்துக் கொண்ட சோகத்தை சொல்லில் வடிக்க இயலாது. கடும் பஞ்சம் தலைவிரித்தாடிய அந்த காலகட்டத்தில், குடிக்கக்கூட தண்ணீர் இன்றி மனிதர்கள் கொத்துக் கொத்தாக செத்து மடிந்தனர். சுமார் பன்னிரண்டு வருடங்கள் மக்களைக் இப்பஞ்சம் வாட்டியதாம். இந்த காலகட்டத்தின் இறுதி ஆண்டில்தான் நல்லதங்காள் இறந்தாள்.
இதே ஆண்டில், தமிழகத்தின் கிழக்குக் கடற்கரைச் சீமையில் அந்த அதிசயம் நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கிக்குக் கிழக்கே 37-வது கி.மீ. தூரத்தில் உள்ளது மணமேல்குடி. பெயருக்கு ஏற்றாற்போல் திரும்பிய பக்கமெல்லாம் மணல்.
இந்த ஊர், கிழக்கு கடற்கரையை உச்சி முகர்ந்தபடி உள்ளது. கிராமமா, நகரமா என்று பிரித்துப் பார்க்க முடியாதபடி இருக்கும் இந்த ஊரின் வடக்குத் திசையில் இருக்கும் ஒரு பகுதியை, வடக்கு மணமேல்குடி என்றும் வடக்கூர் என்றும் சொல்கிறார்கள்.
முற்காலத்தில், இந்தப் பகுதி(வடக்கூர்) இலுப்பை மரக் காடாக இருந்தது. புதர்கள் நிறைந்த இந்த வனத்துக்குள் எவரும் போக மாட்டார்கள்.
இந்நிலையில், வெளியூருக்குச் சம்பாதிக்கச் சென் றிருந்த பிரமன் நாடார் என்பவர் தனது சொந்த ஊரான மணமேல்குடிக்குத் திரும்பினார். ஒரு நாள், காலைப் பொழுதில் காலாற நடக்க ஆரம்பித்த பிரமன் நாடார், இந்த வனத்துப் பக்கமாக வந்தார்.
அங்கு ஓரிடத்தில், பசுமையாக வளர்ந்து நிற்கும் புற்களைக் கண்டார். “தேசமெல்லாம் மழை பொய்த்து, பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில், இந்த இடம் மட்டும் எப்படிப் பசுமையாக இருக்கிறது?” என்று வியந்தார். உடனே வீட்டுக்குச் சென்றவர், மண்வெட்டி அரிவாளுடன் திரும்பி வந்தார்.
பசுமையாக வளர்ந்து நின்ற புற்களையும், அருகில் இருந்த புதர் மற்றும் செடிகொடிகளையும் வெட்டி அப்புறப்படுத்தினார். அப்போது குறிப்பிட்ட ஒரு இடத்தில் அவரது மண்வெட்டி ஆழமாகப் பதிந்தது. பிரமன் நாடார், தன் முழு சக்தியையும் திரட்டி, மண் வெட்டியை இழுக்க, அந்த இடத்தில் இருந்து ரத்தம் பீறிட்டது.
இதைக் கண்டு பதறிய நாடார், வீட்டுக்கு ஓடி வந்தார். வனத்தில், தான் கண்ட அதிசயத்தைத் தன் தாயாரிடம் சொன்னார். அப்போது அருள் வந்து ஆடிய அவரின் தாயார், இடக் கையில் மகனைப் பிடித்துக் கொண்டு, வனத்தை நோக்கி ஆவேசமாக ஓடினார்.
வழியில் திருவத்தம் பூசாரி வீட்டு வாசலில் நின்றவர், “டேய் பூசாரி, வெளியில வாடா” என்று குரல் கொடுத்தார்.
“ஒரு பெண், இப்படியா ஆணவத்துடன் மட்டு, மரியாதை இல்லாமல் கூப்பிடுவது?” என்று கோபம் கொண்டார் திருவத்தம் பூசாரி. உடனே, வீட்டில் வைத்திருந்த கருப்பரின் அரிவாளைத் தூக்கிக் கொண்டு, அந்த அம்மாவை வெட்டுவதற்காக சினத்துடன் வந்தார்.
ஆனால், இரண்டு கைகளால் பிடித்துத் தூக்கும் அளவுக்கு மிகவும் கனமான அந்த அரிவாள், தானாக முறிந்து விழுந்தது. அதிர்ச்சி அடைந்த பூசாரி, அந்த அம்மாவின் காலில் விழுந்தார்.
பிறகு, அந்த அம்மா, தன் வலக்கையில் பூசாரியையும் இடக்கையில் தன் மகனையும் பிடித்துக் கொண்டு ஓட்டமும் நடையுமாக வனத்தை அடைந்தார். அங்கே, பிரமன் நாடார் புல் வெட்டிய இடத்தில், அமர்ந்த திருக்கோலத்தில் அம்மன் சிலை ஒன்று இருந்தது. அதன் தலையில் மண்வெட்டியால் வெட்டுப்பட்ட காயம். அதில் இருந்து உதிரம் கசிந்து கொண்டிருந்தது.
அப்போது அந்த அம்மா, “அகில உலகத்துக்கும் படியளக்கும் சக்தியான நான், கொஞ்ச காலம் இந்த இடத்தில் அவதாரமெடுத்து நின்று, எனது சக்தியை இங்குள்ள மக்களுக்குக் காட்ட வேண்டி உள்ளது. எனவே, நீங்களே எனக்குப் பணிவிடைகள் செய்து, பூசை செய்ய வேண்டும்” என்று மகனுக்கும் பூசாரிக்கும் அருள் வாக்கு கூறினார்.
இதைக் கேட்ட பூசாரியும் நாடாரும் உடனடியாக அந்த இடத்தில் பனை ஓலையால் குடில் எழுப்பி, சுயம்புவாக அவதரித்த அந்த அம்மனுக்கு பூசைகளைச் செய்ய ஆரம்பித்தனர்.
நாட்கள் கடந்தன. ஒரு நாள், இந்தப் பகுதியின் ஜமீன்தாரான ராமகிருஷ்ணன், அம்மன் எழுந்தருளியிருக்கும் இடத்தின் வழியாகக் குதிரையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, மணியோசையும் பூசை செய்யும் சத்தமும் கேட்க, குதிரையில் இருந்து இறங்கி வந்த ஜமீன்தார், “இங்கு என்ன நடக்கிறது?” என்று பூசாரியிடம் கேட்டார். நடந்தது முழுவதையும் விவரித்தார் பூசாரி.
இதைக் கேட்டதும் கோபம் கொண்ட ஜமீன்தார், “ஊரே பஞ்சமா கெடக்கு. அதப் போக்க வழியில்லை. சாமி என்னடா சாமி? இந்த சாமிக்கு உண்மையிலேயே சக்தி இருந்தா, நான் அடுத்த ஊருக்குப் போயிட்டுத் திரும்பறதுக்குள்ள மழை பெய்யணும். இல்லேன்னா, நீ, தலையை இழக்கத் தயாரா இரு” என்று எச்சரித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த பூசாரி, “மழை பெய்யும். போ” என்று கத்தினார்.
ஜமீன்தாரும் கோபத்துடன் குதிரையில் ஏறிக் கிளம்பினார். அங்கிருந்து அவர் அகன்றதும் அம்ம னிடம் வந்த பூசாரி, கண்ணீர் மல்க வேண்டினார். அவ்வளவுதான். ஜமீன்தார், அருகில் உள்ள வெள்ளாற்றைத்தான் கடந்திருப்பார். வானம் இருண்டு இடிமின்னலுடன் பேய் மழை பெய்யத் துவங்கியது. இதனால், வழியில் குறுக்கிட்ட மற்றொரு ஆறான விளங்குளம் ஆற்றைக் கடந்து, அடுத்துள்ள சோழக்காடு கிராமத்துக்கு ஜமீன்தாரால் செல்ல முடியவில்லை. வெள்ளம் தறிகெட்டு ஓடியதால், வெள்ளாறு, விளங்குளம் ஆறு ஆகிய இரு ஆறுகளுக்கும் இடையே சிக்கித் தவித்தார் ஜமீன்தார்.
அப்போதுதான் அவருக்கு அம்மனின் மகிமை புரிந்தது. சோழக்காட்டுக்குப் போகாமல் அம்மன் ஆலயத்தை நோக்கித் திரும்பினார். வெள்ளாற்றின் கரையில் உள்ள ஆலமரத்தின் விழுதில் குதிரையை கட்டி வைத்து விட்டு, வத்தை (மரக்கட்டைகளை இணைத்துச் செய்யப்படும் மிதவை) மூலம் ஆற்றைக் கடந்து இக்கரைக்கு வந்த ஜமீன்தார், அம்மனின் காலடியில் வந்து விழுந்தார். தன்னை மன்னித்து ஏற்கும்படி கதறினார். இதையடுத்து காடு கழனிகள் செழித்தன; மக்களும் நலமடைந்தனர்.
மக்கள், வடக்கூரின் கிழக்கு எல்லையில் அவதரித்த இந்த அம்மனை ‘வடக்கூர் அம்மன்‘ என்று பெயர் சூட்டி வழிபட ஆரம்பித்தனர்.
சுயம்புவாக உதித்த இந்த அம்மனுக்கு, சமீபத்தில் ஆலயம் எழுப்பியுள்ளனர்.
ஆலயத்தின் இடது பிராகாரத்தில் வடக்கு நோக்கி கருப்பண்ணசாமியும் கிழக்கு நோக்கி பேச்சியம்மனும் இருக்கிறார்கள்.
ஆலயத்துக்கு வெளியே வடப் புறத்தில் இருக்கும் வேப்ப மரத்தின் நிழலில் விநாயகர் இருக்கிறார். இவருக்கு எதிரே பெரிய மண்டபம் ஒன்று இருக்கிறது. அந்தக் காலத்தில் மணமேல்குடி பகுதியில் எவருக்கேனும் அம்மை கண்டுவிட்டால், இந்த ஆலயத்தின் பின்பகுதியில் உள்ள திருக்குளத்தில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து, அம்மை கண்டவருக்கு குடிக்கக் கொடுத்து, அம்மனின் திருநீறை அள்ளிப் பூசினால் அம்மை இறங்கி விடுமாம்.
இப்போதும் இந்த வழக்கம் தொடர்கிறது என்றாலும் அம்மை கண்டு மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டவர்கள், வடக்கூர் அம்மனை வேண்டிவிட்டு, விநாயகருக்கு எதிரே இருக்கும் மண்டபத்தில் தங்குகின்றனர். பிறகு, அம்மை குணமானதும் வீட்டுக்குச் செல்கின்றனர். மிக ஆபத்தான நிலையில் இருந்தவர்கள்கூட இந்த மண்டபத்துக்கு வந்து உயிர் பிழைத்துச் சென்ற சம்பவங்களும் நடைபெற்றுள்ளன.
கோயில் வாசலுக்கு எதிரே அரசமரமும் வேப்ப மரமும் ஒரே இடத்தில் பின்னிப் பிணைந்து நிற் கின்றன. வடக்கூர் அம்மனிடம், குழந்தை வரம் கேட்டு வருபவர்கள், மரத்தாலான தொட்டில்களை செய்து இந்த மரங்களில் கட்டிவிட்டுப் போகிறார் கள். திருமணத் தடை நீங்கவும், திருட்டுப்போன பொருட்கள் திரும்பக் கிடைக்கவும் அம்மனிடம் வேண்டிக் கொள்கின்றனர்.
ஒவ்வொரு மாதமும் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளிலும், ஆடி மாதம் அனைத்து வெள்ளிக் கிழமைகளிலும் பெண்கள் கூட்டம் அலைமோதும். எனினும், ஆனி மாதத்தில் வரும் முளைப்பாரி திருவிழாதான் இங்கு பிரபலம்.
இரண்டு வார காலம் நடைபெறும் இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகள் 13-ஆம் நாளன்று நடைபெறுகின்றன. அன்று காலை அம்மனுக்கு காவடியும், இரவு 9 மணிக்கு அருகில் உள்ள கீழக் குடியிருப்பு கிராமத்தில் இருந்து முளைப்பாரியும் எடுத்து வருகிறார்கள். அதே வேளையில் அருகில் உள்ள ‘மடத்தூர்‘ என்ற கிராமத்தில் இருந்து மதுக் குடங்களை (தென்னம்பாளையை குடங்களில் இட்டு எடுத்துச் செல்லுதல்) எடுத்து வருகிறார்கள். நேர்த்திக் கடன் வைத்தவர்கள் ஏராளமான துளைகள் போடப்பட்ட (சூளையில் வைக்காத மண் பானை) பானைக்குள் (இதை ஆயிரம் கண் பானை என்கிறார்கள்) மாவிளக்கேற்றி அதையும் மதுக் குடங்களுடன் எடுத்து வருகிறார்கள்.
மதுக்குடங்கள் ஆலயத்துக்கு வந்து சேர்ந்ததும் அதிகாலை 2:00 மணிக்கு ஆலய வாசலில் ஊர்ப் பொங்கல் வைக்கிறார்கள்.
அடுத்து, சற்று தொலைவில் உள்ள ஊத்துக் கரை என்ற இடத்தில் முளைப்பாரி எடுத்து வந்தவர்கள் நிற்பார்கள். அவர்களை, பூசாரியும் பொதுமக்களும் மேளதாளத்துடன் சென்று ஆலயத்துக்கு அழைத்து வருகின்றனர். இதில் இரண்டு முளைப்பாரிகளை மட்டும் அம்மனிடம் வைத்து விட்டு, மற்றவற்றை கோயிலின் முன்மண்டபத்தில் வைக்கிறார்கள்.
தொடர்ந்து, அம்மனுக்குத் திரை போட்டுவிட்டு, காவல் தெய்வமான கருப்பண்ணசாமிக்கு கிடா வெட்டு பூஜைகள் நடைபெறுகின்றன. பிறகு, நல்ல நேரம் பார்த்து அம்மனுக்குக் காப்பு களைந்து, அனைத்து முளைப்பாரிகளையும் குளத்தில் செலுத்தி விட்டு, வீடுகளுக்குத் திரும்புகிறார்கள்.
– நன்றி. சக்தி விகடன்
this story is very very true