அருள்மிகு வைஷ்ணவி தேவி கோயில், கட்ரா

அருள்மிகு வைஷ்ணவி தேவி கோயில், கட்ரா-182 301, ஜம்மு காஷ்மீர்.

+91-1991-232 125 (மாற்றங்களுக்குட்பட்டது)

இது திரிகுதா என்ற பெயருடைய இமயமலையின் குகைக்கோயில்(பவன்). சனவரி, பிப்ரவரி மாதம் தவிர, இதர மாதங்களில் செல்லலாம். நாள்தோறும் 24 மணி நேரமும் வைஷ்ணவிதேவியை இலவசமாக தரிசிக்கலாம். அருள்மிகு வைஷ்ணவி தேவியைத் தரிசிப்பதற்கும், தங்குவதற்கும் முன்னதாகவே வெப்சைட் மூலமாகப் பதிவு செய்துகொள்ளலாம்.

மூலவர் வைஷ்ணவிதேவி,(சிரோ பாலி)
தீர்த்தம் கங்கா நதி
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்பு
ஊர் கட்ரா
மாவட்டம் கட்ரா
மாநிலம் ஜம்மு & காஷ்மீர்

தட்சன் யாகம் செய்யும்பொழுது சிவபெருமானை அழைக்காமல் அவமானம் செய்தான். ஆனால், சிவனின் சொல்லையும் மீறி, பராசக்தி யாகத்திற்கு சென்றாள். அன்னையையும் தட்சன் அவமதித்ததால், அன்னை கோபத்தில் யாககுண்டத்தில் விழுந்து இறந்துபோனாள்.

அப்போது சிவபெருமான் மகாசக்தியின் உடலை கையில் ஏந்தி ருத்ரதாண்டவம் ஆடினார். அப்போது திருமால் சிவனின் கோபத்தை தணிக்க, சக்தியின் உடல் மீது தனது சக்ராயுதத்தை எறிந்தார். அது உடலை துண்டு துண்டாக்கியது. அவ்வாறு விழுந்த ஒவ்வொரு துண்டும் ஒவ்வொரு சக்திபீடமாகியது. அதில் ஒன்றுதான் ஜம்மு வைஷ்ணவிதேவி கோயிலாகும்.

திரு.ஜஸ்துமல் என்ற தேவி உபாசகருக்கு மகளாக வைஷ்ணவி தேவி பிறக்கிறாள். அழகு மங்கையாக வளரும் பருவத்தில், வைஷ்ணவி தேவியை கவர்ந்து செல்ல எண்ணி, பைரவன் என்ற அரக்கன் துரத்துகிறான். பைரவனிடமிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ளக் குகையில் ஒளிந்து கொள்கிறாள் தேவி. அங்கே அவளுடைய சுயசொரூபம் சக்தி வடிவமாக வெளிப்பட, வெளியே வந்து குகை வாயிலிலேயே அவனை வதம் செய்கிறாள். அவனுடைய உடல் குகை வாயிலிலும், தலை பைரவகாடி என்னும் இடத்திற்கு அருகில் உள்ள மலையில் போய் விழுகிறது. மடியும் தருவாயில் மன்னிப்பு கேட்கும் பைரவனுக்கு வைஷ்ணவி தேவி வரம் தருகிறாள். தனது குகைக்கோவிலை(பவன்) நாடிவரும் பக்தர்களின் பாதம்பட்டு அவன் முக்தி அடைவான் என்று வரம் அருளுகிறாள். அதன்படியே இன்றும் பக்தர்கள் அந்த குகை வாயிலை மிதித்து உள்ளே செல்கின்றனர். திரும்பிச் செல்லும்போது பைரவ காடிக்கு போய், அவனை வழிபட்டுச் செல்கின்றனர். அன்று அப்படி வைஷ்ணவி தேவி ஒளிந்திருந்த குகை இன்று வைஷ்ணவி தேவியின் ஆலயமாக சிறந்து விளங்குகிறது.

கோயில் வருடம் முழுவதும் 24 மணி நேரமும் திறந்திருக்கும். இருபுறமும் பசுமைக் காடுகளுக்கு மத்தியில் 24 மணி நேரமும் பல்வேறு இன, மாநில மக்கள், தத்தம் மொழிகளில் அன்னையைப் போற்றி குரலெழுப்பி, நடந்து செல்வதைக் காண்கிறோம். வயதுப் பாகுபாடின்றி அனைவரும் வைஷ்ணவ தேவியின் தரிசனம் ஒன்றையே குறிக்கோளாக எண்ணி, பக்தி ததும்பச் செல்கின்றனர்.

நடைப் பயணத்தில் முதலில் பவித்ர கங்கா நதியை கடக்க வேண்டும். தன்னை நாடி வரும் பக்தர்களைப் புனிதப்படுத்த வேண்டும் என்பதற்காகத் தேவியே அம்பெய்து நதியை உற்பத்தி செய்ததாக ஒரு செவி வழிக் கதை உண்டு.

வழியில் சரண்பாதுகா என்ற இடம் உள்ளது. இங்கு மாதா, தன் பக்தர்களைப் பின் தொடர்ந்து அரக்கன் வருகின்றானா என்று கண்காணித்து, பாது காவல் செய்வதாக ஐதீகம் உள்ளது. அடுத்து வருவது அர்த் குமாரி. இங்கு, செல்லும் பாதையில் ஒரு குகை இருக்கிறது. குகைக்குள் நுழைந்து அங்குள்ள தேவ கன்னிகை விக்ரகத்தை தரிசித்து, பின்னர், பயணத்தைத் தொடர வேண்டும்.

அர்த் குமாரியில் இருந்து நடந்தால் மாதா வைஷ்ணவி தேவியின் கோயில் அமைந்துள்ள தர்பாருக்கு முக்கால் கிலோ மீட்டருக்கு முன் பஜார் உள்ளது. இங்கு தான் மாதாவை ஆராதிக்க மலர்களையும், நிவேதனங்களையும் வாங்கிக் கொள்ள வேண்டும். தேவியை தரிசிக்கும் போது, அங்குள்ள பூசாரி பக்தர்களுக்கு நாணயங்களைப் பிரசாதமாக வழங்குவார். அதை பத்திரமாக நம்முடைய வீட்டில் உள்ள பூஜை அறையில் வைத்தால், தேவியே நம்முடன் இருக்கின்ற மனத் திடம் ஏற்படும்.

வரிசையில் நகர்ந்து செல்லும் போது 2.5 அடி உயரம், 2.5 அடி அலகம் கொண்ட சிறிய குகை போன்ற துவாரம் உள்ளது. அதில் படுத்தபடி ஒவ்வொருவரும் ஊர்ந்து 38 அடி தூரம் சென்றால் மீண்டும் திறந்த வெளி வரும்.

குகைக்கோயிலை நாம் அடைந்தவுடன் பிண்டி எனப்படும் கருவறை உள்ளது. அங்கு மூன்று சுயம்பு மூர்த்தங்கள் உள்ளது. அவைகளை, தேவியின் மூன்று உருவங்களாக மிக கவனத்துடன் தரிசிக்க வேண்டும்.

 

வைஷ்ணவதேவி, இடதுபுறம் மகா சரசுவதியாகவும், வலதுபுறம் துர்கை என்ற மகாகாளியாகவும், நடுவில் மகாலெட்சுமியாகவும் அருட்காட்சி அளிக்கிறாள். தேவியைத் தரிசித்துவிட்டு வெளியில் வரும் பக்தர்கள் அனைவருக்கும், சர்க்கரைப்பாகு கலந்த பொரி, அன்னையின் வடிவம் பொறித்த வெள்ளி டாலர், இலவசமாக வழங்கப்படுகிறது. இந்தியாவின் வட எல்லையில் உள்ள அம்மன் தலம் இது. அம்மனின் சக்தி பீடங்களில் முக்கியமானது. இங்கு அம்மன் அரூபமாக(சிலை வடிவில் இல்லாமல்) அருள்பாலிக்கிறாள். (துர்கை, லட்சுமி, சரஸ்வதி மூவரும் ஒரே மூலஸ்தானத்தில் அருள்பாலிக்கின்றனர்.)

வைஷ்ணவதேவியை வருடந்தோறும், இந்தியா மற்றும் உலக நாடுகளிலிருந்து சுமார் 50 இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசித்து செல்வதாக நிர்வாகம் தெரிவிக்கின்றது. இந்தியாவில் பஞ்சாப், உத்திரபிரதேசம், உத்தராஞ்சல், பீகார், மகாராட்டிரம், டெல்லி, ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலத்தில் வசிப்பவர்களின் குல தெய்வமாக வைஷ்ணோதேவி விளங்கி, அவர்களது குடும்பங்களை காத்து வருவதாகக் கூறப்படுகிறது. திருமணம் ஆன தம்பதியினர் ஒரு வருடத்திற்குள் இத்தலத்திற்கு தம்பதிகளாக வந்துசெல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த வைஷ்ணவதேவி குகைக்கோயில்(பவன்) கடல் மட்டத்திலிருந்து 5200 அடி உயரத்தில் உள்ளது.

பயணம்:

வைஷ்ணவதேவி தலமான இந்த குகைக் கோயிலுக்கு வர, நாம் முதலில் ஜம்முவை வந்தடையவேண்டும். ஜம்முவிற்கு தினமும் ரயில் மூலம் வரும் பயணிகளில் 75 சதவீத மக்கள் அருள்மிகு வைஷ்ணவதேவியைத் தரிசிக்கவே வருகின்றனர். வைஷ்ணவதேவி மலையை சென்றடைய நாம் முதலில் கட்ரா என்ற சிறிய நகருக்குள் நுழையவேண்டும். இவ்வூர் ஜம்முவிலிருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ளது. ஜம்முவில் இளைப்பாற, “சரசுவதி தாம்மற்றும் வைஷ்ணோதேவி தாம்என்ற இரு தங்கும் விடுதியைப் பக்தர்களுக்காக வைஷ்ணவதேவி போர்டு உருவாக்கியுள்ளது. இங்கு செல்ல, ஜம்மு புகைவண்டி நிலையத்திலிருந்தே அரசுப் பேருந்துகள், தனியார் பேருந்துகள் ஊள்ளன.

2003ல் ஜம்மு புகைவண்டி நிலையத்தில் ஏற்பட்ட அசம்பாவிதத்தால், இந்திய ராணுவம் முழு பாதுகாப்புடன் நம்மை கட்ரா நகருக்கு அனுப்பி வைக்கிறது. கட்ரா பேருந்து நிலையத்தை அடைந்தவுடன் பக்தர்கள் அனைவரும் வைஷ்ணவதேவியைத் தரிசிக்க முதலில் தங்களைப் பதிவு (ரெஜிஸ்ட்ரேசன்) செய்துகொள்ள வேண்டும். பேருந்து நிலையத்திலேயே வைஷ்ணவதேவி போர்டு பதிவு நிலையத்தை” 24 மணி நேரமும் திறந்துவைத்துள்ளனர். நமது பெயர், எந்த ஊர், மாநிலம் போன்ற விவரத்துடன் ஒவ்வொரு குரூப் அல்லது பக்தருக்கு ரெஜிஸ்ட்ரேசன் ஸ்லிப்இலவசமாக தரப்படுகிறது. இந்தப் பதிவுச்சீட்டு இருந்தால் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி உண்டு. இல்லையேல் மலையிலிருந்தாலும் திருப்பி அனுப்பப்படுவார்கள். கட்ரா பேருந்து நிலையத்தில் நாம் பதிவுசெய்தவுடன் 1 கி.மீ தொலைவில் உள்ள திரிகுதா என்ற மலைமுகப்பில் உள்ள இராணுவ சோதனை மையத்தி(செக்போஸ்ட்டி)ல் நாம் கொண்டுசெல்லும் உடமைகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.

முக்கிய வேண்டுகோள் :

மலைக்குச் செல்லும்போது முடிந்தவரை உடைகள், உடமைகளை குறைத்துச் சென்றால் மலை ஏறும்போது அதிக சிரமம் இருக்காது.

வைஷ்ணோதேவி ஆலயம் (பவன்) :
மலை பிரயாணத்திற்காக, மட்டக் குதிரையில் அமர்ந்து பயணித்தல், மற்றும் டோலி (4பேர் அமரும் இருக்கையுடன் தூக்கிச்செல்லுதல்) போன்றவைகள் மூலமாகவும் செல்லலாம். வடநாட்டைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் (வயது, பால் பாகுபாடின்றி) மனஉறுதியுடனும் பக்தியுடனும் நடந்தே வருகின்றனர்.

நடந்து செல்பவர்கள் களைப்பைப் போக்க ஒரு கி. மீட்டருக்கு ஒரு கடை உண்டு. அங்கு காபி, பழச்சாறு முதல் அனைத்தும் கிடைக்கும். அதே போல், இரண்டு கிலோமீட்டருக்கு ஒரு மருத்துவ மனை இருக்கும், ஏறி வருபவர்க ளுக்கு உடல் நிலை பாதித்தால் இலவசமாக முதலுதவி செய்யப்படும்.

வசதி படைத்த, நடக்க இயலாத பக்தர்கள் பதிவுச் சீட்டை கட்ராவில் பெற்றவுடன் பேருந்து நிலைய வாசலில் டெக்கான் ஏர்வேஸ் (போன் நம்பர். 01991-234378,234379) அலுவலகத்தைத் தொடர்புகொண்டால் ஹெலிகாப்டர் மூலம் மலைமீது உள்ள வைஷ்ணவதேவி ஆலயத்துக்குச் சென்று விடலாம். முன்னர், ஹெலிகாப்டர் மூலம் செல்லக் கட்டணம் ரூபாய். 2,000/- (ஒருவழி பயணம் மட்டும்). இப்பொழுது எவ்வளவோ தெரியாது.

அனைத்து பரிசோதனைகளுக்குப் பின், மலைமீது நடக்க, முதலில் நீராட வேண்டிய நதி பாண்கங்கா. வைஷ்ணவதேவி தொடுத்த பாணத்தால் ஊற்றெடுத்து உருவான நதி பாண்கங்கா என்கின்றனர். எனவே பக்தர்கள் இந்த புனித நதியில் நீராடியபின் ஜெய் மாதா தி என்ற சரண கோஷத்துடன் மலை ஏறத் துவங்கலாம். மும்பை தொழிலதிபர் காலஞ்சென்ற திரு.குல்சன்குமார் அவர்கள் பெயரில் மிகப் பெரிய அளவில் பாண்கங்காவில் அன்னதானம் (24 மணி நேரமும்) நடைபெறுகிறது.

அங்கிருந்து 4 கி.மீ. தூரத்தில் வைஷ்ணவதேவி இளைப்பாறிய சரண் பாதுகாவை அடையலாம். மலைப்பாதையில் ஸ்ரைன் போர்டு சார்பில் போஜனாலயாஎன்ற பெயரில் சலுகை விலையில் உணவுக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து அர்த்த குமாரியை அடையலாம். மலையில் நடக்க வேண்டிய மொத்த தூரம் 12 கி.மீ. இம்மலைப் பகுதியில் சுமார் 10 கி.மீ. அதிக ஏற்றத்துடன் ஏறினாலும் கடைசியில் 2 கி.மீ தூரம் நாம் மலையின் இறக்கத்திலேயே சென்று நுழைவு வாயிலை அடையலாம்.

மலைமீதுள்ள இத்தலத்தின் நுழைவு வாயிலிலேயே நமது செல்போன், பேனா, பென்சில், மணிபர்ஸ், பெல்ட் போன்றவைகளை இலவச லாக்கரில் வைத்து விட்டுத்தான் பவன் என்னும் வைஷ்ணவதேவி குகைக்கோவிலுக்குச் செல்ல முடியும். இந்திய ராணுவத்தின் சி.ஆர். பி. எஃப் கட்டுப்பாட்டில் பவன் உள்ளது. எனவே நுழைவு வாயிலில் பக்தர்கள் கடுமையாகப் பரிசோதிக்கப்படுகின்றனர். வாயில் 1,2 மூலம் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். 3ம் எண் வாயில் மூலம் ராணுவத்தினர் மற்றும் இராணுவ அனுமதி பெற்றவர் அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்கள் மலையில் தங்குவதற்கு ஏராளமான வசதிகள் உள்ளது. தங்கும் விடுதிகளில் இலவச போர்வைகள் (ரூ. 100/- டெபாசிட் செய்தவுடன்) போன்றவைகள் உள்ளது.

வருடந்தோறும் நவராத்திரி நாட்களில் திருவிழா நடைபெறுகிறது. அந்நாட்களில் திரிகுதா என்ற இம்மலை அலங்கரிக்கப்பட்டு இருக்கும். நவராத்திரி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுகிறது.

இங்குள்ள அம்மனிடம் எதை வேண்டிக் கொண்டாலும் நிறைவேறும் என்பது பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை. பக்தர்கள் தங்களால் இயன்ற காணிக்கையைச் செலுத்துகின்றனர்.

2 Responses to அருள்மிகு வைஷ்ணவி தேவி கோயில், கட்ரா

  1. K Rathinasami says:

    very useful tips for those who want to go to Shri Vaishnavdevi Temple.Thanks a lot.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *