அருள்மிகு முத்துமாரி அம்மன், காரைக்குடி
அருள்மிகு முத்துமாரி அம்மன், காரைக்குடி, சிவகங்கை மாவட்டம்
***************************************************************************
செட்டிநாட்டுச் சீமையின் முக்கிய நகரான காரைக்குடி நகரின் மையப்பகுதியில் உள்ள முத்துப்பட்டினம் மீனாட்சிபுரத்தில் கோயில் அமைந்துள்ளது.உள்ளது முத்துமாரியம்மன் கோயில்.
1956ம் ஆண்டு நவம்பர் 8ம் நாள் லலிதா என்ற 8வயது சிறுமி காரைக்குடி அருகிலுள்ள மீனாட்சிபுரத்திற்கு உடல் முழுவதும் அம்மையுடன் வந்தாள். தனியாக வந்த அந்த சிறுமியைத் தான்தோன்றி பெருமாள் என்ற தெய்வ அடியார் சந்தித்தார். சிலநாளில் சிறுமியின் வாயிலிருந்து கிளம்பிய வார்த்தைகளெல்லாம் அருள்வாக்காக வெளிவந்து பல அற்புதங்களை நிகழ்த்தியது. சிலநாளில் அந்த சிறுமியின் உடல் மீதிருந்த அம்மை முத்துக்கள் போல் முளைத்தது. சிறுமி படுத்த படுக்கையானாள். பலபேர் சிறுமியை கிண்டலடித்தனர். அதை அவள் பொருட்படுத்தவில்லை. ஒருநாள் தன்னை ஏளனப்படுத்திய ஒருவரை, “உன் தோட்டத்தில் ஒரு கிணறு இருக்கிறது; அந்தக்கிணற்றடியில் இருக்கும் தக்காளிச்செடியில் ஒரே ஒரு தக்காளி இருக்கும். அதைப்பறித்துக் கொண்டு வா“ என்றாள். அவரோ! சிரித்தபடியே,”என் வீட்டிலா? கிணற்றடியிலா? தக்காளிச் செடியா? எனக்கே தெரியாமல் செடியாவது, பழமாவது“ எனக் கிண்டலாகப் பதில் கூறினார்.
சிறுமியோ,”நீ போய்ப் பார். தக்காளியைக் கொண்டு வா“ எனக் கூறினாள். அவர் தனது வீட்டிற்கு சென்று பார்த்தார். அங்கு கிணற்றடியில் திடீரென முளைத்திருந்த தக்காளிச் செடியில் ஒரே ஒரு பெரிய தக்காளிப்பழம் மட்டும் இருந்தது. அப்போது தான் அவருக்கு அந்த தெய்வச் சிறுமியின் மகிமை புரிந்தது. உடனே தக்காளிப்பழத்தை பறித்து சிறுமியிடம் கொடுத்து அவளது காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றார். அன்று முதல் பக்தர்கள் இத்தலத்தில் தக்காளியை தங்களது காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.
ஒருநாள் அந்த தெய்வச்சிறுமி,”நான் மகமாயியாக இதே இடத்தில் இருந்து அருள்பாலிப்பேன். எனக்கு கோயில் அமைத்து வழிபட்டால் நோய்நொடிகள் தீரும். மனமகிழ்ச்சி கூடும். கன்னியருக்கு மணமாகும். தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சகல நலன் வீடு தேடி வந்து சேரும்“ எனக்கூறி முக்தியடைந்தாள்.
அவளை முத்துமாரியாகக் கருதி மக்கள் வழிபட்டனர். 1956ம் ஆண்டு நவம்பர் 17ம் தேதி அன்னை முத்துமாரியம்மன் கோயில் அமைந்தது.
கோயில் அமைப்பு:
கருவறையில் அம்மன் நின்ற நிலையிலும், அதற்கு முன்னர் பீடம் அமைக்கப்பட்டு பீடத்தின் மீது அம்மன் தலையும் அமைக்கப்பட்டுள்ளது. அர்த்த மண்டபத்தில் விநாயகர், முருகன் திருவுருவங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மகா மண்டபத்தை அடுத்து கொடிமரம் உள்ளது. தெற்கு பிரகார மண்டபத்தை அடுத்து தார்ரோடும், வடக்கு பிரகார மண்டபத்தை அடுத்து கலையரங்கமும், கோயில் அலுவலகமும், மடப்பள்ளியும் அமைந்துள்ளது. கருவறைக்கு மேலே சிறிய விமானம் ஒன்று மட்டும் உள்ளது. முத்துமாரியம்மன் உற்சவ விக்கிரகமும் கருவறையிலேயே வைக்கப்பட்டுள்ளது.
மாசி – பங்குனி பெருவிழா:
மாசி மாதக் கடைசி செவ்வாய் கிழமை அம்பாளுக்கு காப்புக்கட்டி விழா துவங்கும். பங்குனி முதல் செவ்வாய் எட்டாம் நாளில் அம்பாளுக்கு பொங்கல் வைத்தல், மது முளைப்பாரி, கரகம், அக்கினிச்சட்டி எடுத்தல் சிறப்பாக நடத்தப்படும். பால்குடங்கள், பூக்குழி இறங்குதல் நடக்கின்றது. பல்லாயிரக் கணக்கானோர் நேர்த்திக்கடன் செலுத்துவர். மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து நாடுகளில் வசிக்கும் தமிழர்கள், நேர்த்திக்கடன் நேர்ந்து பால்குடம் எடுப்பது சிறப்பு.
Leave a Reply