அருள்மிகு முத்தால பரமேசுவரியம்மன் திருக்கோயில், பரமக்குடி
அருள்மிகு முத்தால பரமேசுவரியம்மன் திருக்கோயில், பரமக்குடி – 623 707. ராமநாதபுரம் மாவட்டம்.
+91- 4564 – 229 640, +91- 94434 05585 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை மணி 5 முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர்: – முத்தால பரமேசுவரியம்மன்
தல விருட்சம்: – கடம்ப மரம்
பழமை: – 500 வருடங்களுக்கு முன்
ஊர்: – பரமக்குடி
மாநிலம்: – தமிழ்நாடு
முற்காலத்தில் சோழ நாட்டை ஆண்ட மன்னன் ஒருவன், விநோதமான போட்டி ஒன்றை அறிவித்தான். சிறிய துளையுடைய முத்துக்களை, கையால் தொடாமலேயே மாலையாக தொடுக்க வேண்டுமென்பதே போட்டி. அந்நாட்டில் வசித்த அறிஞர்கள் பலரும், மாலை தொடுக்க முயன்று, முடியாமல் தோற்றனர். அவ்வூரில் வசித்த வியாபாரி ஒருவரின் மகள், தான் மாலை தொடுப்பதாகக் கூறினாள். மன்னனும் சம்மதித்தான்.
அரசவைக்குச் சென்ற அப்பெண், ஓரிடத்தில் பாசி மணிகளை வரிசையாக அடுக்கினாள். மறுமுனையில், சர்க்கரைப் பாகு தடவிய நூலை வைத்தாள். சர்க்கரையின் வாசனை உணர்ந்த எறும்புகள், பாசிமணியின் துளை வழியே உள்ளே சென்று, நூலை இழுந்து வந்தன.
சமயம் பார்த்து காத்திருந்த அப்பெண், நூலை எடுத்து மாலை தொடுத்தாள். மகிழ்ந்த மன்னன், மதிநுட்பமான அப்பெண்ணை பாராட்டிப் பரிசு வழங்கியதோடு, அவளையே மணக்க விரும்பினான். அப்பெண் மறுத்தாள். மன்னன் அவளைக் கட்டாயப்படுத்தினான்.
இதனால் மனம் வெறுத்த அப்பெண், தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்டாள். மனிதத்தன்மையில் இருந்து தெய்வத்தன்மைக்கு உயர்ந்த அப்பெண்ணை அடக்கம் செய்த இடத்திலிருந்து மண் எடுத்து வந்து இங்கு வைத்து கோயில் கட்டினர். முத்துமணி மாலை கோர்த்தவள் என்பதால் “முத்தால பரமேசுவரி” என்று பெயர் பெற்றாள்.
வைகை நதியின் தென்கரையில் அமைந்த கோயில் இது. கருவறையில் முத்தால பரமேசுவரியம்மன், சாந்த சொரூபமாகத் தாமரை பீடத்தில் அமர்ந்திருக்கிறாள். எதிரே சிம்ம வாகனம் இருக்கிறது.
நான்கு கரங்களில் சூலம், கபாலம், கட்கம், டமருகம் ஆகிய ஆயுதங்கள் வைத்திருக்கிறாள். அம்பாள் சன்னதிக்கு பின்புறத்தில் மாரியம்மன் சன்னதி இருக்கிறது. பிரகாரத்தில் நாகதேவதைகளுடன் மாரியம்மன் காட்சியளிக்கிறாள். முன்மண்டபத்தில் மார்த்தாண்டியம்மன், காவல் தெய்வம் போத்திராசா, கருப்பணசாமி மற்றும் ஆஞ்சநேயர் சன்னதிகள் உள்ளன. இங்கிருந்து சற்று தூரத்தில் சிவன் கோயில் ஒன்றுள்ளது. பக்தர் ஒருவருக்காக மதுரையில் அருளும் சுந்தரேசுவரர், எழுந்தருளிய தலம் இது. இவரது பெயரால் ஊர் பரமக்குடி (பரமன் குடிகொண்ட ஊர்) என்றழைக்கப்படுகிறது. விசயதசமியன்று இவர் இக்கோயிலுக்கு எழுந்தருளுவார்.
பூச்சொரிதல் சிறப்பு:
அம்பிகை இங்கு உக்கிரமாக இருப்பதால், மாசி, பங்குனியில் பூச்சொரிதல் விழா நடக்கிறது. அப்போது பக்தர்கள் அம்பிகைக்கு, விதவிதமாக மலர் கொடுக்கின்றனர். அதை வைத்து அம்பிகையின் முகம் மட்டும் தெரியும்படியாக, சன்னதி முழுக்கப் பூக்களால் அலங்காரம் செய்கின்றனர். இந்த வைபவம் இங்கு பிரசித்தி பெற்றது.
அம்பிகைக்கு பால்குடம்:
முருகன் கோயில்களில் பக்தர்கள், பால் குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். ஆனால், அம்பாள் தலமான இங்கு பங்குனி பிரம்மோத்சவத்தின்போது பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அன்று இவள், சிவனுக்குரிய ரிடப வாகனத்தில் புறப்பாடாவது மற்றொரு சிறப்பு.
திருவிழா:
வெள்ளிக்கிழமைகளில் இவளுக்கு விசேஷ பூஜை செய்யப்படுகிறது. பங்குனியில் பிரம்மோத்சவ விழா நடைபெறும். மாசி பூச்சொரிதல் விழா, ஆடியில் முளைக்கொட்டு திருவிழா; பின்னர் நவராத்திரி.
குழந்தைகள் புத்திசாலித்தனத்துடன் இருக்க இவளுக்கு பூசை செய்து வேண்டிக்கொள்கிறார்கள்.
வெள்ளிக்கிழமைகளில் இவளுக்கு விசேட பூசை செய்யப்படுகிறது. அம்மை நோய் நீங்க இங்கு அதிகளவில் வேண்டிக்கொள்கிறார்கள்.
நாகதோஷம் உள்ளவர்கள் இங்குள்ள நாகர் சன்னதியில் பாலபிசேகம் செய்து வேண்டிக்கொள்கிறார்கள்.
அம்பிகையிடம் வேண்டி பிரார்த்தனை நிறைவேறியவர்கள், விசேட அபிசேகம் செய்து, புத்தாடை அணிவித்து, சர்க்கரைப் பொங்கல் படைத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
Leave a Reply