அருள்மிகு மீன்குளத்தி பகவதி அம்மன் கோயில், பல்லசேனா
அருள்மிகு மீன்குளத்தி பகவதி அம்மன் கோயில், பல்லசேனா, பாலக்காடு மாவட்டம்
***********************************************************************************
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்டுள்ள மீன்குளத்தி பகவதி ஆலயம். இது கேரளாவில் பல்லசேனா என்ற சிறிய கிராமத்தில் உள்ளது. பாலக்காட்டில் இருந்து எவரும் ஊருக்குச் செல்லும் வழியைக் கூறுவார்கள்.
இங்கு தமிழக மக்களே அதிகம் வருகை தருகின்றனர். கோயம்புத்தூர், காந்திபுரத்திலிருந்து காலை கோவில் வரையும், மாலை கோவிலில் இருந்து காந்திபுரத்திற்கும் பேருந்து இருக்கிறது.
பல நூற்றாண்டுகள் முன்னர் வீர சைவ வெள்ளாளர்கள் என்ற சமூகத்தினர் கும்பகோணம், மதுரை, தஞ்சாவூர் போன்ற ஊர்களில் இருந்து கேரளாவுக்குச் சென்று வைர வியாபாரம் செய்து வந்தனர். நாளடைவில் அங்கு சென்று வருவது கடினமாக இருந்ததால் பல குடும்பங்கள் பாலக்காட்டை உள்ளடக்கி இருந்த அன்றைய மலபாரில் சென்று தங்கினார்கள். அவர்கள் மதுரை மீனாட்சி அம்மனைத் தமது குல தெய்வமாக கருதி வணங்கி வந்ததால், போகும்போது தம்முடன் மீனாட்சி அம்மன் ஆலயத்தில் இருந்து ஒரு கல்லையும் எடுத்துச் சென்று இருந்தனர். அதை ஒரு இடத்தில் வைத்து மீனாட்சி அம்மனாக வழிபட்டனர். அதன் பின் சிலர் வருடாவருடம் மதுரைக்குச் சென்று குல தெய்வ தரிசனம் செய்துவிட்டு வருவார்கள்.
அவர்களில் ஒரு குடும்பத்தில் வயதானவருக்கு அதிக வயதாகிவிட்டதால் வருடாவருடம் மதுரைக்குச் சென்று அம்மனை வழிபட முடியவில்லை. ஒரு நாள் அவர் ஒரு குளத்தருகில் தம்முடைய ஓலைக் குடையை என்றும் போல வைத்து விட்டு குளித்துவிட்டு வந்தார். ஆனால் அவரால் குடையை அந்த இடத்தில் இருந்து தூக்க முடியவில்லை. பயந்து போனவர் உள்ளூரில் இருந்தவர்களை அழைத்து வந்து அந்த அதிசயத்தைக் காட்ட, வந்த எவராலும் அந்தக் குடையை தூக்க முடியவில்லை. அங்கு ஜோதிடர் (பிரசன்னம் கூறுபவர்) அழைத்து வரப்பட்டார். அவர் அந்த இடத்தில் மதுரை மீனாட்சி குடிகொண்டு உள்ளாள் எனவும் ஆகவே அவர்கள் அந்த இடத்திலேயே அவளுக்கு ஆலயம் எழுப்பி வழிபடுமாறு கூறினார். அதன்படி அனைவரும் நிதி திரட்டி அங்கு ஆலயம் அமைத்தனர்.
ஆனால் நானூறு ஆண்டுகளுக்குப் பின்னால் அம்மன் மீண்டும் இன்னொருவர் கனவில் தோன்றி தனக்கு பெரிய ஆலயம் எழுப்புமாறு கூற அவள் கூறியபடி அந்த பழைய ஆலயத்தைத் தள்ளி இன்னொரு பெரிய ஆலயம் அமைத்தனர். அதுவே மீன்குளத்தி மீனாட்சி ஆலயமாயிற்று.
அம்மன் மீன்கள் நிறைய இருந்த குளத்தின் அருகில் கிடைத்ததினால் அவள் பெயர் மீன் குளத்தி என ஆயிற்று. அவளை அனைவரும் மதுரை மீனாட்சியாகவே கருதி அங்கு வழி படுகின்றனர். கருணை பொங்கும் தாய்மைப் பெருக்கு நிறைந்த கண்களைத் தரிசித்த உடனே நம் பாரம் எல்லாம் நீங்கிய புத்துணர்ச்சியை உணரமுடியும்.
செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அதிகம் இருக்கும். குறைகளை முறையிட வேண்டுதல்கள் பலித்திட ஞாயிறு அன்று வழிபட நல்ல பலன் கிடைக்கும். பில்லி சூன்யம் பாதிப்பு அகல செவ்வாய் அன்று வழிபடப் பலன் உணரலாம். திருவருள் பெற்று மனம் அமைதி அடைவதை வெள்ளிக்கிழமை வழிபாடு பரிபூரணமாக உதவும்..
“இந்த வீட்டின் ஐஸ்வர்யம் மீன்குளத்து பகவதி அம்மா” போன்ற வாசகங்களும், ஒட்டும் படங்களும் ஆலயத்தின் உள்ளே அர்ச்சனை சீட்டு வழங்கும் இடத்திற்கு அருகிலேயே கிடைக்கிறது.
களபம் என்னும் சந்தனக் கல்லில் அரைத்த சந்தனம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. குங்குமமும், அர்ச்சித்த மலரும் சந்தனத்தோடு வழங்குகின்றனர்.
கல்யாண அர்ச்சனை, பாக்ய சூக்த அர்ச்சனை, கல்விக்கு என்று தனித்தனி அர்ச்சனைகள் அனுமதி சீட்டுடன் வாழைப்பழமும், வெற்றிலை பாக்கும் வைத்து வாழை இலையில் வைத்துக் கொடுப்பதை அர்ச்சித்து வாங்கி வரலாம். நிறப்பறபணம் பூஜை என்பது விளைச்சல் அமேகமாக் வேண்டி அறுவடைக்குப் பிறகு ஒருபடி விளை பொருளை அம்மனுக்குக் காணிக்கையாகத்தரும் பூஜையாகும்.
சத்ரு தோஷ பூஜை, புத்ர சந்தான பூஜை வியாபார விருத்தி பூஜை, மஹா கணபதி ஹோமம் சிறப்பாகச் செய்யப்படுபவை.
கடுமதுரம் என்னும் அதி இனிப்புப் பாயசம் வழங்கப்படுகிறது. வீட்டில் இருந்து சிறு பாத்திரம் எடுத்துச் செல்லவேண்டும். அல்லது அங்கிருக்கும் கடைகளில் பிளாஸ்டிக் டப்பா வாங்கி கொடுத்துப் பெறலாம்.
அம்மனுக்கு அருகில் இருக்கும் சிவ லிங்கத்தை உன்னிப்பாக விழிப்புடன் தேடிப்பார்த்தே தரிசிக்க முடியும். அம்மனையே மெய் மறந்து தரிசித்ததால் சிவலிங்கம் கண்களில் படவில்லையே என்று மறுபடியும் வரிசையில் நின்று தரிசித்து வருவார்கள்.
மீன் தன் கண்களின் பார்வையாலேயே தன் குஞ்சுகளைக் காப்பதுபோல் தன் கருணை நிறைந்த பார்வையாலேயே பக்தர்களைக் காப்பதாலும், மீன்போன்ற கண்ணழகு கொண்டதாலும், அவள் மீனாட்சி.
வீடுகட்டும் பிரர்த்தனை நிறைவேறியவர்கள் வீடு மாதிரியும், குழந்தைவரம் பெற்றவர்கள் தொட்டிலும் காணிக்கை அளித்தவை அங்கே காட்சிப்படுகின்றன.
கட்டிய பூக்களை ஏற்பதில்லை. உதிரிப்பூக்களே ஏறகப்படுகிறது. தர்ப்பையால் தான் பூத்தொடுக்கிறார்கள். சிவப்பு நிறமுள்ள மலர்களும், தாமரையும் அம்மனுக்கு விஷேசம். கோவிலுக்கு அருகில் மந்திரித்த கயிறும், திருநீறும் கட்டணத்துடன் அளிக்கிறார்கள்.
கோவில் வாசலில் இருக்கும் காவல் தெய்வம் பழமைவாய்ந்த பஞ்சவிருட்சத்தின் கீழ் உள்ளது. தரிசனம் முடித்து தேங்காயை நம் பெயர் நட்சத்திரம் கூறி தலையைச் சுற்றி ஈடு தேங்காயாக உடைத்து திருஷ்டி கழிக்கிறார்கள்.
குளத்தில் மிதக்கும் வாத்துக்களும், நீந்தும்மீன்களும் சுற்றி இருக்கும் தென்னை மரங்களும், வழியெங்கும் பச்சைப்பட்டாடை உடுத்த வயல் வெளி, குளங்கள் குளிர்சியான காற்றும் இது கடவுளின் பூமிதான் என்று கட்டியம் கூறும்.
Leave a Reply