அருள்மிகு கொண்டத்துக்காளியம்மன் திருக்கோயில், பெருமாநல்லூர்

அருள்மிகு கொண்டத்துக்காளியம்மன் திருக்கோயில், பெருமாநல்லூர்-641 666, கோயம்புத்தூர் மாவட்டம்.
*********************************************************************************************************

+91 – 421 235 0544, 235 0522 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – கொண்டத்துக்காளியம்மன் (குண்டத்தம்மன்)

உற்சவர்: – கொண்டத்துக்காளியம்மன்

தல விருட்சம்: – வேப்பமரம்

தீர்த்தம்: – கிணற்று நீர்

பழமை: – 1000-2000 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்: – பெரும்பழனம்

ஊர்: – பெருமாநல்லூர்

மாவட்டம்: – கோயம்புத்தூர்

மாநிலம்: – தமிழ்நாடு

இப்பகுதியை சேரமன்னர்கள் ஆண்டபோது, போரில் வெற்றி மட்டுமே கிடைக்க வேண்டும் என்பதற்காக தங்கள் குருநாதரிடம் ஆலோசனை கேட்டனர்.

அவர்களுக்கு ஆலோசனை வழங்கிய குருநாதர், போரில் வெல்ல படைபலம் மட்டுமின்றி காளியின் அருள்பலமும் வேண்டும் எனக்கூறி, அவளுக்கு கோயில் அமைத்து களப்பலி கொடுத்துப் போருக்குச் சென்றால் எளிதில் வெல்லலாம் என்றார்.

அதன்படி மன்னர்கள் இவ்விடத்தில் காளிதேவிக்கு தனியே கோயில் ஒன்றைக் கட்டினர். பின்பு அண்டை நாடுகள் மீது படையெடுத்துச் செல்லும் முன்பு காளியை வணங்கி பெரிய குண்டம் ஒன்றில் வேள்வி வளர்த்து அதில் வீரர் ஒருவரை பலி கொடுத்து விட்டுச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

இத்தல விநாயகர் பால விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

இங்கு நைவேத்யமாக சர்க்கரைப் பொங்கல் படைக்கின்றனர். சுற்றுப்பிரகாரத்தில் சப்தகன்னியர், குதிரைகளுடன் முனியப்பன், கருப்பராயர் ஆகியோர் அருள்புரிகின்றனர்.

கோயிலின் எதிரே சற்று தூரம் தள்ளி கருப்பசாமி எல்லைக்காவல் தெய்வமாக வீற்றுள்ளார். சுற்றுவட்டார மக்களால் குலதெய்வமாக வணங்கப்படும் இங்கு குண்டத்திருவிழா சிறப்புடன் கொண்டாடப்படுகிறது.

அக்குண்டத்தில் இறங்குபவர்கள் வீரமக்கள்என்ற சிறப்புபெயருடன் அழைக்கப்படுகின்றனர்.

அம்பாள் சன்னதிக்கு இடப்புறம் முத்துக்குமரன், தனது கழுத்தில் சொருகிய வாளை கையில் பிடித்தபடி, அருட்காட்சி தருவது வேறு தலங்களில் இல்லாத சிறப்பாகும்.

மன்னர் காலத்திற்கு பின்னர், வழிவழியாக மக்கள் கொண்டத்துக்காளி அம்மனை வழிபட்டு குண்டம் இறங்கி வந்தனர். இப்பகுதியை வெள்ளையர்கள் ஆண்டு வந்தபோது, குண்டம் இறங்கும் திருவிழாவிற்கு தடை விதித்தனர். ஆனால், தடையை மீறி பக்தர்கள் குண்டம் இறங்கச் சென்றனர். அப்போது, அங்கு வந்த வெள்ளைக்காரத்துரை பக்தர்கள் குண்டத்தில் இறங்கமுடியாதபடி அதில் அரக்கை ஊற்றினர். இதனால் மனம் கலங்கிய திரளான பக்தர்கள் வருந்தியபடியே அம்பாளைத் துதித்து அனைவரும் குண்டத்தைச் சுற்றி நின்று பார்த்துக்கொண்டிருந்தனர். அக்கூட்டத்தில் இடையே புகுந்த பன்றி, குண்டத்தில் இறங்கி ஒடி திருவிழாவை துவக்கி வைத்ததைக் கண்டு அதிர்ந்த வெள்ளையனுக்கு கண்பார்வை மங்கியது. பன்றி வடிவில் வந்தது அம்பிகை என பக்தர்கள் கூறவே, தனது தவறை உணர்ந்த அவன், பக்தர்கள் குண்டம் இறங்க அனுமதித்தான். அதன்பின், அவனுக்குப் பார்வை கிடைத்தது.

இப்பகுதி பழனங்கள் (வயல்வெளி) நிறைந்த பழமையான பகுதியாக இருந்ததால் இவ்வூர் தொடக்கத்தில் பெரும்பழனம்என்றும் பெரும்பழனாபுரிஎன்றும் வழங்கப்பட்டு, காலப்போக்கில் பெருமாநல்லூர் என்ற பெயர் பெற்றது. கூத்தனூர் என்ற பெயரும் உண்டு.

இங்கு வீற்றிருக்கும் கொண்டத்துக்காளியம்மன் ஏழு பேராக அவதரித்த அம்பாள் சகோதரிகளில், ஒருவராக, எட்டு கைகளில் ஆயுதங்களையும், கல்வியையும் ஏந்தி, இலட்சுமி, காளி, சரசுவதி என மூன்று அன்னையர்களின் அம்சமாக அருள்பாலிக்கிறாள்.

குண்ட திருவிழா, பங்குனியில் 11 நாள் திருவிழா மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

கோரிக்கை:

குடும்ப பிரச்னை தீர, குழந்தைச் செல்வம் கிட்ட, விவசாயம் செழிக்க, தோல் சம்பந்தப்பட்ட பிணிகள் தீர, இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:

குண்டம் இறங்கல், அக்னிச்சட்டி, பால்குடம், அங்கபிரதட்சணம், குண்டத்தில் உப்பு, மிளகு, கரும்பு போடுதல் ஆகியன.

தோல் நோய் தீர்ந்திட காளிக்குரிய சிங்க வாகனத்தின் மீது வெற்றிலை, பாக்கு வைத்து வணங்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *