அருள்மிகு சங்கரனார் திருக்கோயில், பார்த்திபனூர்

அருள்மிகு சங்கரனார் திருக்கோயில், இராமேஸ்வரம் ரோடு, பார்த்திபனூர், இராமநாதபுரம் மாவட்டம்.

+91- 94420 47977, +91- 99767 11487

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். கோயிலுக்குச் செல்பவர்கள் முன்னரே போனில் தொடர்பு கொண்டுவிட்டுச் செல்வது நல்லது.

மூலவர்

சங்கரனார் (சொக்கநாதர்)

தாயார்

மீனாட்சி

தல விருட்சம்

மாவலிங்க மரம்

தீர்த்தம்

சங்கரன் குளம்

பழமை

500 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்

நல்லூர்

ஊர்

பார்த்திபனூர்

மாவட்டம்

இராமநாதபுரம்

மாநிலம்

தமிழ்நாடு

மகாபாரதப் போரின்போது பாண்டவ, கவுரவ படையினர் ஒருவருக்கொருவர் நிகராக போரிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது வியாசர் அர்ஜுனனிடம், சிவனிடம் பாசுபத அஸ்திரம் பெற்றால் எளிதில் துரியோதனரை வெற்றி கொள்ளலாம் என ஆலோசனை கூறினார். அதன்படி அர்ஜுனன் சிவனை வேண்டித் தவமிருந்தான். அவனது தவத்தை கலைக்க முகாசுரனை அனுப்பினார் துரியோதனர். பன்றி வடிவில் வந்த அசுரனை, அர்ஜுனன் அம்பால் வீழ்த்தினான். அப்போது சிவன், வேடன் வடிவில் சென்று, அது தனக்குரியது என்றார். அர்ஜுனன் மறுத்தான். சிவன் தானே அதை வேட்டையாடியதாகச் சொல்லி சண்டைக்கு இழுத்தார். அவருடன் போரிட்ட அர்ஜுனன், அம்பு எய்தான். அது சிவனின் தலையைப் பதம் பார்த்தது. இரத்தம் வழிய நின்ற சிவன், அவனுக்கு சுயரூபம் காட்டினார். வருந்திய அர்ஜுனன், மன்னிப்பு வேண்டினான். சிவன் அவனை மன்னித்ததோடு, பாசுபதாஸ்திரம் கொடுத்தருளினார். அதன்பின், அவன் பல இடங்களில் சிவ வழிபாடு செய்தான். அவன் இத்தலத்திற்கு வந்தபோது, இங்கு சுயம்புலிங்கம் இருந்ததைக் கண்டு வழிபட்டான். பிற்காலத்தில் பக்தர் ஒருவரிடம் அசரீரியாக சிவன், இங்கு இலிங்கமாக எழுந்தருளியிருப்பதை உணர்த்தியபின், இக்கோயில் எழுப்பப்பட்டது.

மூலஸ்தானத்தில் சங்கரனார், சதுர பீடத்துடன் காட்சி தருகிறார். சிவனின் பாடலில் பிழை இருப்பதாக கூறி எதிர்த்த நக்கீரரை, சிவன் நெற்றிக்கண்ணால் எரித்தார். மீண்டும் சங்கப்புலவர்கள் வேண்டவே, அவரை உயிர்ப்பித்தார். தவறை உணர்ந்த நக்கீரர், சிவனை உணர்ந்து மன்னிப்பு வேண்டினார். பின் சிவத்தல யாத்திரை சென்றார். அவ்வாறு சென்றபோது இத்தலத்தில் சிவ வழிபாடு செய்தார். நக்கீரர் சிவனுடன் வாதம் செய்தபோது, “சங்கறுப்பது எங்கள் குலம், சங்கரனாருக்கு ஏது குலம்?” என்றார். இவ்வாறு சங்கரனார்என்று சிவனை நக்கீரர் குறிப்பிட்டதால், இத்தலத்தில் சிவன் சங்கரனார்என்ற பெயரிலேயே அழைக்கப்படுகிறார். மனக்குழப்பம் உள்ளவர்கள் சுவாமியிடம் வேண்டிக்கொள்ள நிவர்த்தியாவதாக நம்பிக்கை.

சுவாமிக்கு வலப்புறத்தில் அம்பிகைக்கு தனிச்சன்னதி உள்ளது. இவள் மதுரை மீனாட்சியின் அமைப்பில் காட்சி தருவது விசேஷம். கோயில் வளாகத்தில் தலவிருட்சம் மாவலிங்க மரம் இருக்கிறது. பார்த்தனாகிய அர்ஜுனன் வழிபட்ட தலமென்பதால், “பார்த்தனூர்என்று அழைக்கப்பட்டு, பிற்காலத்தில் இவ்வூர் பார்த்திபனூர்என்று மருவியது. புராதனமான இக்கோயில் தற்போது பாழடைந்து இருக்கிறது. மூலவர் சன்னதியும், முன்மண்டபத்துடன் மட்டும் தற்போது இக்கோயில் காட்சியளிக்கிறது. இத்தலவிநாயகர் சித்தி விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். முன் மண்டபத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகன் காட்சி தருகிறார். முருகன் சிலை, திருவாட்சியுடன் சேர்த்து வடிக்கப்பட்டிருக்கிறது. எதிரே பாலமுருகன் இருக்கிறார். தெட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், பைரவர், நாகர் ஆகியோரும் இருக்கின்றனர். கோயில் பாதுகாப்பில்லாத நிலையில் இருப்பதால் சுவாமி சிலைகள் அனைத்தும் முன் மண்டபத்தில் வைத்திருக்கிறார்கள்.

திருவிழா:

திருக்கார்த்திகை, சிவராத்திரி, ஐப்பசியில் அன்னாபிஷேகம்.

கோரிக்கைகள்:

மனக்குழப்பம் உள்ளவர்கள் இறைவனிடமும், திருமணத்தடை, கிரக தோஷம் நீங்க அம்பாளுக்கு வேண்டிக்கொள்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:

இங்கு வேண்டிக்கொண்டு பிரார்த்தனை நிறைவேறியவர்கள் சிவன், அம்பாளுக்கு விசேஷ அலங்காரம், அபிஷேக, அர்ச்சனை செய்து வழிபடுகின்றனர். கோயில் திருப்பணியிலும் பங்கெடுக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *