அருள்மிகு வாகீஸ்வரர் திருக்கோயில், பெருஞ்சேரி
அருள்மிகு வாகீஸ்வரர் திருக்கோயில், பெருஞ்சேரி, நாகப்பட்டினம் மாவட்டம்.
காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் |
– |
|
வாகீஸ்வரர் |
தாயார் |
– |
|
சுவாதந்தர நாயகி |
தல விருட்சம் |
– |
|
பன்னீர் மரம் |
பழமை |
– |
|
500 வருடங்களுக்கு முன் |
ஊர் |
– |
|
பெருஞ்சேரி |
மாவட்டம் |
– |
|
நாகப்பட்டினம் |
மாநிலம் |
– |
|
தமிழ்நாடு |
பார்வதியின் தந்தையான தக்கன் சிவபெருமானை அழைக்காமல் ஒரு யாகத்தை தொடங்கினார். இந்த யாகத்திற்கு தேவர்களும், பிரம்மனும் வந்தனர். யாகம் தொடங்கியது. அழைக்காத இந்த யாகத்திற்கு பார்வதி தேவி சென்று அவமானப்பட்டாள். இதைக் கண்ட சிவபெருமான் கோபப்பட்டு நெற்றிக் கண்ணைத் திறந்தார். தக்கனை அழிக்க வீரபத்திரனை தோற்றுவித்தார். தக்கனிடம் சென்ற வீரபத்திரன், “தக்கனே! வேள்விக்குத் தலைவராகிய எங்கள் சிவபெருமானுக்குரிய அவிர்பாகத்தைக் கொடு. ஏன் வீணாக அழிகிறாய்?” எனக் கேட்டும் தக்கன் உடன்படவில்லை. சிவபெருமானை மேலும் இகழ்ந்தான். உக்கிர மூர்த்தியான வீரபத்திரருக்கு சினம் பொங்கியது. யாகத்தை அழித்ததுடன் யாகத்தில் பங்கேற்ற தேவர்கள், நவக்கிரக நாயகர்கள் மற்றும் பிரம்மா, சரஸ்வதி ஆகியோரை கடுமையாக தண்டித்தார். அத்துடன் அருகே இருந்த ஆட்டின் தலையை எடுத்து தக்கன் உடலில் பொருத்தினார். வீரபத்திரனால் பாதிக்கப்பட்ட சரஸ்வதி தன் நிலையைக் கண்டு வேதனைப்பட்டாள். கணவரிடம் கூறிப் புலம்பினாள். தவத்தால் எதையும் அடையலாம் என்று பிரம்மா கூற, சரஸ்வதி பெருஞ்சேரிக்கு வந்தாள். இங்கு கோயில் கொண்டிருக்கும் வாகீஸ்வர சுவாமியை நோக்கிப் பல ஆண்டுகள் தவமிருந்தாள். சரஸ்வதி தன் முன் தோன்றிய சிவபெருமானிடம், எல்லோருடைய நாவிலும் வீற்றிருந்து வாக்கு விருத்தியளிக்கும் பேற்றை எனக்குத் தந்தருள வேண்டும் என்று வேண்டி வரம் பெற்றாள்.
இங்குள்ள இறைவன் வாகீஸ்வரர் இலிங்கத் திருமேனியில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இங்கு ஆவுடையார் சதுரவடிவில் அமைந்திருப்பதும், இவர் விமானம் இந்திர விமானமாய் அமைந்திருப்பதும் சிறப்பாகும். உட்பிராகாரத்தில் சரஸ்வதி தேவி சிவபெருமானை பூஜை செய்யும் சிற்பம் மிக அற்புதமாக அமைந்துள்ளது.
இது ஒரு குரு பரிகார தலமாகும். வியாழன் தேவகுருவாகப் பதவி பெற்ற தலமாக இது கருதப்படுகிறது. பெரிய ஞானியான வியாழன் முக்காலத்தையும் உணரும் சக்தி உடையவர். வேத ஆகமங்களைக் கற்றவர். அவருடைய மனைவி தாரை ஒரு பேரழகி. வியாழனின் குரு குலத்தில் தங்கி ஒரு மாணவனாக இருந்தவர்களில் சந்திரனும் ஒருவன். தாரையும், சந்திரனும் பழகி குரு துரோகம் செய்தனர். முக்காலத்தையும் உணர்ந்த வியாழன் இச்செயலையும் உணர்ந்தார். சந்திரனுக்கு குஷ்ட ரோகம் உண்டாகும்படி சபித்தார். எனினும் அவரது மனக்கலக்கம் நீங்கவில்லை. தல யாத்திரை புறப்பட்டார். இத்தலம் வந்தார். மனம் சற்றே நிம்மதி அடைந்தது போல தோன்றியது. ஆனால் முழு நிம்மதி கிடைக்கவில்லை. சிவபெருமானை நோக்கித் தவமிருக்கத் தொடங்கினார். பஞ்சாக்கினி மத்தியில் நின்று தவம் செய்யத் தொடங்கினார். பன்னிரண்டு ஆண்டுகள் ஓடின. இறைவன் மனமிரங்கி அவர் முன் தோன்றினார். அவருக்கு மனச் சாந்தி ஏற்பட்டது. பிறகு பிரகஸ்பதியாகிய வியாழன் விருப்பப்படி சந்திரனின் குஷ்டம் நீங்கியது. தாரை இறைவனை வணங்கித் தூய்மை பெற்றாள்.
வியாழன் மாயூரத்தில் உள்ள தட்சிணாமூர்த்தியை வழிபட்டு, தான் தேவகுரு ஆகவேண்டும் என்று முன்பே வேண்டிருந்தார். இறைவன் பெருஞ்சேரி சென்று சிவலிங்கத்தை பூஜை செய்யுமாறு பணிந்தார். வியாழனும் பெருஞ்சேரியில் சிவபெருமானை பூஜித்ததாலும், தவம் இருந்து மெய்ஞானம் பெற்றதாலும், சிவபெருமான் தேவர்களுக்கெல்லாம் குருவாக அவரை இத்தலத்தில் நியமித்தததாக கூறப்படுகிறது. எனவே, இத்தலத்து இறைவன் வாக்கு நல்கிய வள்ளல் என்ற பெயரிலும் இத்தலத்தில் அழைக்கப்படுகிறார். வியாழன் பிரார்த்தனை செய்து, இத்தலத்து இறைவனை வணங்கி, நினைத்தபடி தேவகுரு ஆனது போல், தன்னை வணங்கும் பக்தர்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்றும் வள்ளலாகவே இத்தலத்து இறைவன் திகழ்கிறார்.
கோயில் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பைக் கடந்ததும் அகன்ற பிராகாரம். கொடி மரம், நந்தி, பலிபீடம், இவற்றைக் கடந்ததும் மூன்று நிலை ராஜகோபுரம். அதை அடுத்து சிறப்பு மண்டபம். மண்டபத்தின் வலதுபுறம் அம்மன் சன்னதி. அடுத்துள்ள மகாமண்டபத்தை அடுத்து அர்த்த மண்டபமும், அதையடுத்து வாகீஸ்வரர் சன்னதியும் உள்ளன. தேவ கோட்டத்தின் தெற்கு திசையில் விநாயகர், சரஸ்வதி, தட்சிணாமூர்த்தியும், மேற்கில் அண்ணாமலையாரும், வடக்கில் பிரம்மாவும், துர்க்கையும் அருள்பாலிக்கின்றனர். பிராகாரத்தின் மேற்கில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், கஜலட்சுமியும்; வடக்கில் சண்டிகேசுவரர் சன்னதியும் உள்ளன. வடகிழக்கு மூலையில் நவகிரக நாயகர்கள் அருள்பாலிக்கின்றனர். கிழக்கு பிராகாரத்தில் நான்கு பைரவர் திருமேனிகள் உள்ளன. எண்ணூறு ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் கட்டப்பட்டதாகச் சொல்கின்றனர். இங்குள்ள இறைவன் வாகீஸ்வரர் இலிங்கத் திருமேனியில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இங்கு ஆவுடையார் சதுரவடிவில் அமைந்திருப்பதும், இவர் விமானம் இந்திர விமானமாய் அமைந்திருப்பதும் சிறப்பாகும்.
திருவிழா:
சிவராத்திரி.
கோரிக்கைகள்:
பக்தர்கள் தங்களது கோரிக்கைகள் நிறைவேற இங்குள்ள வியாழனை வழிபடுகின்றனர். கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்க இங்குள்ள சரஸ்வதி தேவியை வழிபடுவது சிறப்பு.
நேர்த்திக்கடன்:
சிவனுக்கும் அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
Leave a Reply