அருள்மிகு கோவர்த்தனாம்பிகை திருக்கோயில், பெருமாநல்லூர்
அருள்மிகு கோவர்த்தனாம்பிகை திருக்கோயில், பெருமாநல்லூர்– 641 666. திருப்பூர் மாவட்டம்.
*********************************************************************************************************
+91 – 421 235 0544, 235 1396 (மாற்றங்களுட்பட்டவை)
காலை 7.30 மணி முதல் 1 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
பழமை: – 500 வருடங்களுக்கு முன்
ஊர்: – பெருமாநல்லூர்
மாநிலம்: – தமிழ்நாடு
ஒரு காலத்தில் மக்கள் தெய்வ பக்தியை அறவே மறந்து வெறுக்கத்தக்க பாவச்செயல்களில் ஈடுபட்டனர். நல்லோர் அழிந்து, தீயோர் பெருகினர். இதனால், கடுங்கோபங்கொண்ட சிவபெருமான் மனிதர்களின் மீது மண்மாரியை பொழிவித்தார்.
பூமியே அழியும் நிலைக்கு வந்தது. அப்போது சிவபக்தர்கள் சிலர், மக்களின் பாவங்களை மன்னித்து அவர்களுக்கு நற்புத்தி கொடுத்து பாவ விமோசனம் தந்து அழிவிலிருந்து காத்தருளும்படி பார்வதி தேவியிடம் வேண்டினர்.
கருணை கொண்ட அம்மன், மக்களுக்காக சிவனிடம் வேண்டினாள். ஆனால், அவளது வேண்டுதலுக்கு சிவன் இணங்கவில்லை. இதனால் அம்மன் கைலாயத்தை விட்டு பூமிக்கு வந்து பெரும்பழனம் என்ற வில்வமர காட்டில், சிவனை நோக்கி மேற்கு திசையைப் பார்த்தபடி கடுந்தவம் இருந்தாள். அவளது தவத்திற்கு மதிப்பளித்த சிவபெருமான் இவ்விடத்தில் அம்பாளுக்கு காட்சி தந்தார்.
அம்பாள் அங்கு கோவர்த்தனாம்பிகை என்ற பெயருடன் அமர்ந்தாள். சிவன் உத்தமலிங்கேசுவரர் என்ற பெயரில் லிங்க வடிவானார். பிற்காலத்தில் சோழமன்னர்கள் இங்கு கோயில் எழுப்பினர்.
நுழைவு வாயில் மண்டபத்தின் மையத்தில் எருது வாகனத்தில் அமர்ந்த கோலத்தில் அம்மையப்பர், பன்னிரு கைகளில் ஆயுதங்களுடன் தெற்கு நோக்கியபடி வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர் , கீழ் வலக்கையில் எழுத்தாணிக்கொம்புடன் மேற்கு நோக்கியபடி விநாயகர், பின்புறம் சனீசுவரர் ஆகியோர் தனித்தனி சன்னதிகளிலும், சுற்றுப்பிரகாரத்தில் சண்டிகேசுவரர், விட்டுணுதுர்க்கை, தட்சிணாமூர்த்தி ஆகியோரும் தனித்து அருள்புரிகின்றனர்.
இத்தலத்தில் அம்பாள் மேற்கு நோக்கி தவம் புரிந்ததால் சிவனும் மேற்கு நோக்கிய படியே அருட்காட்சி தருகிறார். அவருக்கு இடப்புறம் தனி சன்னதியில் உச்சிப்பகுதியில் சிங்கமுக உருவம் கொண்ட திருவாசியின் மீது நின்ற கோலத்தில் தலையில் கடிண்ட மகுடத்துடன், மேற்கு நோக்கியபடி கைகளில் தாமரை, குவளைகள் கொண்டு அம்மன் காட்சி தருகிறாள்.
அம்பாள் தவம் இருந்து மக்களைக் காத்து அருளிய இப்பகுதி பழனங்கள் (வயல்வெளி) நிறைந்த பழமையான பகுதியாக இருந்ததால் இவ்வூர் தொடக்கத்தில் “பெரும்பழனம்” என்றும் “பெரும்பழனாபுரி” என்றும் வழங்கப் பட்டது.
காலப்போக்கில் பெருமாநல்லூர் என்று மருவியது. சோழமண்டலத்தைச் சேர்ந்த பொன்னம்பலக்கூத்தன் என்பவர் இத்தலத்தையும், இங்குள்ள விநாயகர் கோயிலையும் புதுப்பிக்கத் தானம் செய்துள்ளார். அவரது பெயரால் இவ்வூர் கூத்தனூர் என்றும் அழைக்கப்படுகிறது.
சிவனின் சிறந்த பக்தரான சுந்தரரும், அவரது நண்பர் சேரமானும் இணைந்து வந்து இவ்விடத்தில் உத்தமலிங்கேசுவரரைப் பூசித்து அருள் பெற்றுச் சென்றனர்.
ராசராச உத்தம சோழன், உத்தம சோழ வீரநாராயணன் ஆகிய மன்னர்களால் கட்டப்பட்டதால் இங்குள்ள இறைவன் உத்தமலிங்கேசுவரர் என்ற திருப்பெயரால் அழைக்கப்படுகிறார்.
அழகிய சிற்பங்களைத் தாங்கிய தூண்களில் சிவராத்திரி கொண்டாடும் காரணத்தை விளக்கும் காட்சி, ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி, அர்த்தநாரீசுவரர், வீரபாகு, மனைவியுடன் நம்பிராசர் சிற்பங்கள் கலைநயத்துடன் அமைக்கப் பட்டுள்ளன.
திருவிழா:
சித்திரையில் 11 நாள் பிரம்மோத்சவம், ஆனித்திருமஞ்சனம், சனிப்பெயர்ச்சி, நவராத்திரி, சிவராத்திரி, திருக்கார்த்திகை.
கோரிக்கை:
திருமணத்தடை நீங்க, குழந்தைச் செல்வம் பெற, கல்வியில் சிறந்து விளங்க இறைவனை வேண்டுகின்றனர்.
நேர்த்திக்கடன்:
அம்மைக்கும் அப்பனுக்கும் புத்தாடை அணிவித்தும், கோயில் திருப்பணிக்குப் பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
Leave a Reply