அருள்மிகு சரநாராயணப் பெருமாள் திருக்கோயில், திருவதிகை

அருள்மிகு சரநாராயணப் பெருமாள் திருக்கோயில், திருவதிகை, கடலூர் மாவட்டம்.

+91-4142-243540, 94437 87186 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 8 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.15 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

சரநாராயணப்பெருமாள்

தாயார்

ஹேமாம்புஜவல்லித்தாயார், செங்கமலத்தாயார்

தல விருட்சம்

வில்வம்

தீர்த்தம்

கருட தீர்த்தம்

பழமை

1000 வருடங்களுக்கு முன்

ஊர்

திருவதிகை

மாவட்டம்

கடலூர்

மாநிலம்

தமிழ்நாடு

முன்பொரு சமயம் சிவபெருமான் திரிபுர அசுரர்களை போரிட்டு அழிக்க, தேவர்கள் தேர் ஒன்றினை படைத்தனர். தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க சூரிய, சந்திரர் தேரின் இரு சக்கரங்களாகவும், பூமி தேரின் தட்டாகவும், நான்கு வேதங்கள் குதிரைகளாகவும், மேருமலை வில்லாகவும், ஆதிசேஷன் நாணாகவும் பிரம்மன் தேர் ஓட்டுபவராகவும், விஷ்ணு அம்பாகவும் இருந்து சிவனுக்கு உதவினர் என்கிறது புராண நூல்கள். இதன் மூலம், சிவனுக்கு விஷ்ணு அம்பாக (சரமாக) இருந்து போருக்கு உதவியதால் விஷ்ணு இத்தலத்தில் சரநாராயணப்பெருமாள்என அழைக்கப்படுகிறார். ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் திருவதிகை வீரட்டானேசுவரர் கோயிலில் திரிபுரம் எரிக்கும் திருவிழா நாளில், கருட வாகனத்தில் பெருமாள் சரத்துடன் எழுந்தருளி சரம் கொடுக்கும் நிகழ்ச்சியும் தொடர்ந்து நடை பெற்று வருகிறது.

திருமாலின் திவ்வியத்திருத் தலங்களில் இக்கோயிலில் தான் சயன நரசிம்மர் சயனத் திருக்கோலத்தில் தெற்கு நோக்கி சயனித்திருக்கிறார். மேலும் தாயாரும் உடன் எழுந்தருளியிருப்பதால் இது போக சயனம் ஆகும். இந்த சயன நரசிம்மர், திருவக்கரையில் வக்ராசுரனை அழித்து விட்டு, அதன் பரிகாரத்துக்காக இத்தலத்தில் வந்து சயனித்துள்ளார்.

எழுநூறு ஆண்டுகளுக்கு முன் வேதாந்த தேசிகர் திருவஹீந்திரபுரம் செல்லும் போது இந்த சயன நரசிம்மரை வழிபட்டதாக கூறப்படுகிறது. சிவனைப்போலவே இந்த சயன நரசிம்மருக்கு ஒவ்வொரு பிரதோஷத்திற்கும் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.

இங்கு தாயாரின் சன்னதி தனியாக உள்ளது. தாயாரின் திருநாமம் ஹேமாம்புஜ நாயகி, செங்கமலத்தாயார் என்பதாகும். ஒவ்வொரு உத்திரத்தன்றும் இவருக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது. மற்ற கோயில்களில் கைகூப்பிநிற்கும் கருடாழ்வார், இங்கு கைகட்டி சேவகம் செய்யும் நிலையில் அருள்பாலிக்கிறார். மேலும் இங்குள்ள கருடாழ்வாருக்கு, திரிபுர சம்ஹாரத்தின்போது பெருமாள், சங்கு, சக்கரங்களை தந்தாகப் புராணம் கூறுகிறது.

ஆயிரத்து 300 வருடங்களுக்கு முன்பு ஊரின் மட்டத்திற்கு கீழ் இந்த ஊர் ஓம்என்ற வடிவில் இருந்திருக்கிறது. இங்குள்ள பெருமாள் உப்பிலியப்பன் சீனிவாசனைப்போல், மார்க்கண்டேய மகரிஷி மகள் ஸ்ரீதேவியை திருமணம் செய்து கொண்டு நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார். அருகில் மிருகண்ட மகரிஷியின் மகன் மார்க்கண்டேய மகரிஷி. புரட்டாசி மாதம் முழுவதும் சிறப்பு அலங்காரமும், சிறப்பு பூஜையும் நடைபெறுகிறது. இந்த மாதத்தில் திருப்பதி செல்ல முடியாதவர்கள் இங்குள்ள பெருமாளை வழிபாடு செய்யலாம்.

சரநாராயணப்பெருமாள், சயன நரசிம்மர், ஹேமாம்புஜ வல்லித்தாயார் என ஒவ்வொருவருக்கும் தனித்தனி சன்னிதி உள்ளது.

சரநாராயணப்பெருமாள் திருக்கோயில் உள்ள இடம் அதிகாபுரி க்ஷேத்திரம் ஆகும். விமானம் நளினக விமானம். இங்குள்ள மூலவர் சரநாராயணப்பெருமாள் முழுவதும் சாளக்கிராமத்தால் ஆனவர். இவர் நின்ற திருக்கோலத்தில் அருள் பாலிக்கிறார். திருக்கோவிலூர் தேஹளீசப்பெருமாளால் அபிமானம் பெற்ற திருக்கோயில், நிகமாந்த மகா தேசிகரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலம். வில்லிபுத்தூரார் எழுதிய மகாபாரதத்தில் அர்ஜுனன் குருக்ஷேத்திரப்போர் முடிந்து, பிராயச்சித்தத்திற்காக இங்கு வந்து வழிபட்டதாகப் புராணம் கூறுகிறது. பிரமாண்ட புராணத்தில் இந்த பெருமாளைப்பற்றியும் கூறப்பட்டுள்ளது. இத்திருக்கோயில் பல்லவ அரசர்களால் நிர்மாணிக்கப்பட்டது.

திருவிழா:

சித்திரை விசேஷ திருமஞ்சனம், வைகாசி வசந்த உற்சவம், ஆடி ஒவ்வொரு வெள்ளியிலும் ஊஞ்சல் சேவை, ஆவணி ஸ்ரீஜெயந்தி உற்சவம், புரட்டாசி பெருமாள் புறப்பாடு, ஐப்பசி தீபாவளி உற்சவம், கார்த்திகை திருக்கார்த்திகை உற்சவம், மார்கழி தனுர்மாத பூஜை, தை உள் புறப்பாடு, மாசி ஒரு நாள் மண்டகப்படி, பங்குனி உத்திர திருமஞ்சனம் என மாதம் தோறும் ஒரு விழா.

கோரிக்கைகள்:

இது ஓர் பிரார்த்தனை ஸ்தலமாகும். அமாவாசை வழிபாடு இக்கோயிலின் தனிச்சிறப்பு.

நேர்த்திக்கடன்:

பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *