அருள்மிகு கோபிநாத சுவாமி திருக்கோயில், ரெட்டியார்சத்திரம்
அருள்மிகு கோபிநாத சுவாமி திருக்கோயில், ரெட்டியார்சத்திரம், திண்டுக்கல் மாவட்டம்.
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை மணி 4 முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் |
– |
|
கோபிநாத சுவாமி |
உற்சவர் |
– |
|
கிருஷ்ணர் |
தாயார் |
– |
|
கோப்பம்மாள் |
தல விருட்சம் |
– |
|
வேப்பமரம் |
பழமை |
– |
|
500 வருடங்களுக்கு முன் |
ஊர் |
– |
|
ரெட்டியார்சத்திரம் |
மாவட்டம் |
– |
|
திண்டுக்கல் |
மாநிலம் |
– |
|
தமிழ்நாடு |
நாயக்கர் காலத்தில் காசி யாத்திரை சென்ற ஒர் அந்தணர் வழியிடையில் ஆந்திர மாநிலம் பெல்லாரி தேசத்தை அடைந்தார். நீணட நாட்களாக மழை இல்லாததால் அங்கு வறட்சி நிலவியது. நாட்டை ஆண்டு வந்த வல்லாள மன்னனுக்கு கோப்பம்மாள் என்ற மனைவியும், கோபிநாதன் என்ற மகனும் இருந்தனர். அவர்களுக்கு கணக்கற்ற பசு மந்தைகள் இருந்தன. வறுமையில் இருந்த மன்னனிடம் தனது பசிப்பிணியை போக்குமாறு அந்தணர் கோரினார். பல சிரமத்திற்கு மத்தியில் அவருக்கு மன்னனும் உணவு கொடுத்து உபசரித்தான். பசி தீர்ந்த அந்தணர், பாண்டிய நாடு சென்றால் வறட்சி நீங்கி வளமுடன் வாழலாம். பசுக்களுக்கும், தங்களுக்கும் நல்ல உணவு கிடைக்கும் என யோசனை கூறிவிட்டு யாத்திரையை தொடர்ந்தார். வல்லாள மன்னனுக்கு பின்னர் அவனது மனைவியும், மகனும் சில பணியாட்கள் உதவியுடன் பசு மந்தைகளுடன் பாண்டிய நாடு நோக்கி புறப்பட்டனர். நுழைவு வாயிலான ரெட்டியார் சத்திரம் அருகில் ஓர் குன்றின் அடியில் தங்கினர். அப்பகுதி செழிப்பாக காட்சியளித்தது. அந்த இடத்தில் தங்கி பசுக்களை காத்து வந்தனர். சில ஆண்டுகள் கழித்து படிப்படியாக மழை குறைந்து அப்பகுதியில் வறட்சி ஏற்பட்டு, மாடுகள் இறையின்றி வாடின. வறுமையில் வாடிய கோபிநாதன் மாடுகளுக்கு இரையாகப் புல் முளைத்து வறுமை நீங்கினால், தன் உயிரை மாய்த்து காணிக்கை ஆக்குகிறேன் என இறைவனிடம் வேண்டிக் கொண்டான். அன்று இரவு நல்லமழை பெய்து வெள்ளம் ஓடியது. புல் மலை முழுவதும் முளைத்தது. தன்னுடைய சங்கல்பம் நிறைவேறியதால் ஒரு வேப்ப மரத்தில் எருதுவைக் கட்டி விட்டு அதன் கொம்பில் விழுந்து இறந்தான். இதைப் பார்த்த அவனது தாயும் உயிர் விட்டாள். இது நிகழ்ந்து சில ஆண்டுகளுக்கு பின்னர் மலை அருகிலுள்ள கன்னிவாடி ஜமீன்தார் மான் வேட்டைக்கு இம்மலைக்கு மாட்டு வண்டியில் வந்துள்ளார். அந்த மாடுகள் நடக்க முடியாமல் தரையில் படுத்துவிட்டன. கோபிநாதன் விட்டுச்சென்ற மாடுகள் ஜமீன்தாருக்கு மான்களாக காட்சியளித்தன. அவற்றை வேட்டையாட அவர் முயற்சி செய்தார். ஒன்றும் சிக்காததால் கவலையுடன் ஊர்திரும்பிய ஜமீன்தார் கோடாங்கியை அழைத்து குறிகேட்டுள்ளார். அவர் முந்தைய கால அற்புதங்களை கூறினார்.
அன்றே, அந்தி வேளையில் சித்தர் ஒருவர் தோன்றி “இம்மலையில் கோபிநாதன் எழுந்தருளியுள்ளார். அவர் பசுக்களிடம் ஆசாபாசங்கள் கொண்டவர். அவருக்கு மாடுகளை காணிக்கையாக்குகிறேன் என நேர்ந்து கொள். நித்திய பூஜைகளும், திருவிழாக்களும் நடந்துவர சிலை அமைத்து கோயில் கட்ட ஏற்பாடு செய்க. மாடுகளும் நலம்பெறும், நீயும் உமது நாடும் இறையருள் பெறுவாய்” எனக் கூறிவிட்டு மறைந்தார். அதன்படி மலைமேல் வேப்பமரத்தடியில் குழல் ஊதுகின்ற பாவனையில் கோபிநாதனுக்கும், கஞ்சிக் கலயத்தைத் தலையில் சுமந்த நிலையில் தாயார் கோப்பம்மாளுக்கும் சிலை அமைந்தார். ஏராளமான பசுக்களை மலையில் காணிக்கையாக செலுத்தினார். காட்டு கோயிலாக மாடு மேய்ப்பவர்களும், சுற்றுப்புற கிராம மக்களும் வழிபட்டு வந்தனர். பின்னர் கோயில் கட்டப்பட்டு அனைவருக்கும் கேட்டவரம் தரும் “கோபிநாதனாக” அருள்பாலித்து வருகிறார். அவர் குடிகொண்டிருக்கும் மலை கோபிநாதன் மலை என அழைக்கப்பட்டு வருகிறது. மலைமேல் நுழைவு வாயிலில் கருடாழ்வார். ஆஞ்சநேயர் ஆசி வழங்குகின்றனர். கருவறையில் கண்ணபிரான் என்னும் கோபிநாதன் கையில் புல்லாங்குழலை ஊதுகின்ற தோரணையில் காட்சியளிக்கிறார். அடுத்து உற்சவ மூர்த்தி இரண்டு கைகளிலும் வெண்ணை உருண்டைகளை பக்தர்களுக்கு ஊட்டுவது போல அமைக்கப்பட்டுள்ளார். இடப்புறம் தாயார் கோப்பம்மாள் கற்சிலை அமைந்துள்ளது. இத்தலத்தின் அடிவாரத்தில் மாங்கரை எனும் ஆறும் அமைந்துள்ளது. மலைமீது 619 அடிஉயரத்தில் உள்ள கோபிநாதனை படிகள் வழியாக ஏறிச்சென்று தரிசிக்கலாம்.
திருவிழா:
ஒவ்வொரு சனிக்கிழமையும், புரட்டாசி சனிக்கிழமையும், தைப்பொங்கல் திருநாட்களிலும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. ஆவணித் திங்கள் கிருஷ்ண ஜெயந்தி திருநாளில் அணிகலன்கள் பூட்டி அழகு செய்து, ஆபரணங்களும் கொண்டு அழகு முகம் காட்சிதருகிறார்.
கோரிக்கைகள்:
குழந்தைவரம் வேண்டுவோர், பணியிட மாற்றம் விரும்புவோருக்கும் கேட்ட வரம் தந்து அருள் பாலித்து வருகிறார் கால்நடை தெய்வமாகிய கோபிநாத சுவாமி.
நேர்த்திக்கடன்:
சுவாமிக்கு திருமஞ்சனம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
Leave a Reply