அருள்மிகு கல்யாண வீரபத்திரர் திருக்கோயில், சத்யவேடு
அருள்மிகு கல்யாண வீரபத்திரர் திருக்கோயில், சத்யவேடு, சித்தூர் மாவட்டம், ஆந்திர மாநிலம்.
+91- 97046 49796 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | வீரபத்திரர் | |
உற்சவர் | – | கல்யாண வீரபத்திரர் | |
தல விருட்சம் | – | வில்வம், வேம்பு, அரசு | |
ஆகமம் | – | சிவாகமம் | |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | சத்திவீடு | |
ஊர் | – | சத்தியவேடு | |
மாவட்டம் | – | சித்தூர் | |
மாநிலம் | – | ஆந்திரம் |
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு சத்தியவேட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசித்த சிவபக்தர்கள் வீரபத்திரருக்கு கோயில் கட்ட விரும்பினர். வீரபத்திரர் சிலை செய்யும் பணி சிற்பி ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டது. பணி முடிந்து, சிலையை மாட்டுவண்டியில் ஏற்றி சத்தியவேடு வந்த போது, வண்டியின் அச்சு முறிந்தது. எனவே, சிலையை இறக்கி வைத்துவிட்டு சக்கரத்தை சரி செய்தனர். மீண்டும் சிலையை தூக்க முயன்றபோது, அது அவ்விடத்தில் இருந்து அசையவில்லை. அப்போது அசரீரி ஒலித்து, சிலையை அங்கேயே பிரதிஷ்டை செய்யும்படி கூறியது. அதன்படி வீரபத்திரரை அந்த இடத்திலேயே பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பினர்.
குரு வீரபத்திரர்: மூலஸ்தானத்தில் வீரபத்திரருக்கு வலப்புறம் பாணலிங்கம் இருக்கிறது. வீரபத்திரருக்கு பூஜை செய்தபின்பு, லிங்கத்திற்கு பூஜை செய்கின்றனர். இத்தல வீரபத்திரர் தெற்கு நோக்கி காட்சி தருவதால், “குரு வீரபத்திரர்‘ என்ற சிறப்பு பெயர் இருக்கிறது. தென்திசை, சிவனின் குரு அம்சமான தெட்சிணாமூர்த்திக்கு உரியது. கல்வி, கலைகளில் சிறப்பிடம் பெற வியாழக்கிழமைகளில் இவருக்கு கொண்டைக்கடலை மாலை அணிவித்து வழிபடும் வழக்கம் உள்ளது. கிரக தோஷம் உள்ளவர்கள் ஹோமம் செய்து வேண்டிக்கொள்கிறார்கள். ராகு, கேது பரிகார ஹோமத்திற்கு ரூ.300, பிற கிரகதோஷ பரிகார ஹோமங்களுக்கு ரூ.1000 கட்டணம். சித்ரா பவுர்ணமியன்று வீரபத்திரர்– பத்ரகாளி திருக்கல்யாண வைபவம் நடக்கும்.
லிங்கோத்பவர் பூஜை: சிவராத்திரியின்போது மூன்று நாள் விழா நடக்கிறது. அன்றிரவில் வீரபத்திரருக்கு ஐந்து கால பூஜை நடக்கும். அப்போது சுவாமிக்கு, “லிங்கோத்பவர் பூஜை‘ செய்கிறார்கள். வீரபத்திரருக்கு அபிஷேகம் செய்யும்போது இடுப்பில் வஸ்திரத்துடன்தான் அபிஷேகம் செய்வர். ஆனால், இந்த பூஜையின்போது மட்டும், அனைத்து வஸ்திரங்களும் களையப்பட்டு அபிஷேகம் நடக்கிறது. எல்லாவற்றையும் கடந்தவராக இறைவன் இருக்கிறார் என்பதையும், எவ்வளவு பொருள் சேர்த்தாலும் இறைவனை அடையும்போது, எதுவுமே உடனிருக்காது என்பதையும் உணர்த்தும் விதத்தில் இந்த பூஜை நடத்தப்படுகிறது. இந்த பூஜையின் போது சுவாமியைத் தரிசித்தால் பிறப்பற்ற நிலை கிடைக்கும் என்பது நம்பிக்கை. இப்பூஜைக்கு பிறகு, பாணலிங்கம், வீரபத்திரருக்கு அன்னாபிஷேகம் நடக்கிறது.
சந்தான நந்தீஸ்வரர்: வீரபத்திரர் சன்னதி எதிரில் ஒரு நந்தி இருக்கிறது. இந்த நந்தி, எந்த திசையை நோக்கியும் திருப்பிக்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பு. சுகப்பிரசவம் ஆக இந்த நந்தியிடம் வேண்டிக் கொள்கிறார்கள். இதற்காக, கர்ப்ப ஸ்தீரிகள் வர வேண்டிய அவசியமில்லை. அவர்களின் வீட்டிலிருந்து ஒரு பெரியவர் வந்து, நந்திக்கு பூஜை செய்து, தங்கள் வீடு இருக்கும் திசை நோக்கி நந்தியை திருப்பி வைத்துவிட்டுச் சென்றால் போதும். இதனால் சுகப்பிரசவம் ஆவதுடன், குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கும் என்பது நம்பிக்கை. இந்த நந்தியை, “சந்தான நந்தீஸ்வரர்‘ என்கிறார்கள். குழந்தை இல்லாதவர்களும் இதே பூஜையை நந்திக்கு செய்கின்றனர். பிரதோஷ வேளையில் நந்திக்கு விசேஷ பூஜை நடக்கிறது.
வீரபத்திரர் சன்னதி முகப்பில் வரசித்தி விக்னேஸ்வரர், வேல்முருகன், பிரகாரத்தில் வர சித்தேஸ்வரர், மங்கள கவுரியம்பாள், தெட்சிணாமூர்த்தி, நாகர் மற்றும் நவக்கிரக சன்னதிகள்உள்ளன.இக்கோயிலில் இருந்து 20 கி.மீ., தூரத்தில் பார்வதியின் மடியில் சிவபெருமான் பள்ளிகொண்ட சுருட்டப்பள்ளி கோயில் இருக்கிறது.வீரபத்திரர் சன்னதி எதிரில் ஒரு நந்தி இருக்கிறது. இந்த நந்தி, எந்த திசையை நோக்கியும் திருப்பிக்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பு. சுகப்பிரசவம் ஆக இந்த நந்தியிடம் வேண்டிக்கொள்கிறார்கள். இந்த நந்தியை சந்தான நந்தீஸ்வரர் என்கின்றனர்.
திருவிழா:
சித்ராபவுர்ணமியன்று ஒருநாள் விழா, திருக்கார்த்திகை, சிவராத்திரி.
பிரார்த்தனை:
சுகப்பிரசவம் ஆவதற்கும், நல்ல வரன் அமைவதற்கும் இங்கு அதிகளவில் வேண்டிக் கொள்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
வீரபத்திரரை வேண்டி பிரார்த்தனை நிறைவேறியவர்கள், சுவாமிக்கு விசேஷ அபிஷேகம் செய்வித்து, வெற்றிலை மாலை, வஸ்திரம் அணிவித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.
வழிகாட்டி:
சென்னையிலிருந்து 60 கி.மீ., தூரத்தில் சத்தியவேடு உள்ளது. கோயம்பேட்டில் இருந்து சத்தியவேட்டுக்கு பஸ் உள்ளது. இவ்வூர் மார்க்கெட் பஸ் ஸ்டாப் அருகில் கோயில் உள்ளது. சித்தூரில் உள்ள விடுதிகளில் தங்கிக்கொண்டு கோயிலுக்கு சென்று வரலாம்.
Leave a Reply