அருள்மிகு ஐயப்பன், பாங்கூர் நகர், கோரேகான்
அருள்மிகு ஐயப்பன், பாங்கூர் நகர், கோரேகான், மும்பை.
கலியுக வரதன், கண்கண்ட தெய்வம் ஐயன் ஐயப்பன் பூவுலகில் ஆட்சி செய்யும் தலங்கள் பலப்பல. அப்படி மும்பையில் உள்ள மக்களும் ஐயப்பனை தரிசித்து அருள்பெற வேண்டும் என்னும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டதுதான் கோரேகான் ஐயப்பன் கோயில்.
முதன் முதலில் பக்தர்கள் சிலரால் இப்பகுதியில் விளக்கு பூஜை நடத்தப்பட்டது. பிறகு சொந்தமாக நிலம் வாங்கி கோயில் கட்ட தேவப்பிரசன்னம் வைத்துப் பார்த்து, அதன்படி கோயில் கட்டப்பட்டு ஐயப்பன், குருவாயூரப்பன், கணபதி, துர்க்காதேவி, சுப்ரமணியன் போன்ற விக்ரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
கோயிலின் நுழைவாசலின் மேல் அனந்த பத்மநாபனின் திருவுருவம் சுதை வடிவமாகக் காணப்படுகிறது. அதற்கு மேலே உள்ள மாடங்களில் ஐயப்பன், குருவாயூரப்பன், கணபதியின் திருவுருவங்களும்; மேலே கலசங்கள், உயர்ந்த செப்புத்தகடுகள் வேயப்பட்ட கொடி மரமும் உள்ளன. உள்ளே நுழைந்ததும் ஒரு பெரிய மண்டபம். அதன் ஒரு பகுதியில் பெரிய மேடை ஒன்று காணப்படுகிறது. மேடை மீது ஏறிச் செல்ல படிக்கட்டுகள் உண்டு. மேடையில் தனித்தனி சன்னதிகள். ஐயப்பன் சன்னதியின் முன்பு பதினெட்டுப் படிகள் காணப்படுகின்றன. படிகளின் இரண்டு பக்கங்களிலும் விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டிருக் கின்றன. ஐயப்பனின் மூல முகூர்த்தம், பஞ்சலோகத்தினால் ஆனது. சபரி மலைக்குச் சென்று ஐயனை தரிசிக்க இயலாத மனக்குறையை இந்த ஐயப்பன் தீர்த்து வைத்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
குருவாயூரப்பன் சங்கு, சக்கரத்துடன் கொஞ்சும் அழகுடன் சிறிய சன்னதியில் அருள்கிறார். சன்னதிகளைச் சுற்றி மரச்சட்டம் அடிக்கப்பட்டு, அதில் வரிசையாக அகல் விளக்குகள் ஏற்றப்படுகின்றன. அருகில் ஹோம குண்டம் எதிரில் கணபதியின் பஞ்சலோக விக்ரகம் காணப்படுகிறது. துர்க்காதேவி, நின்ற கோலத்திலும், வேலுடன் முருகன் தனிச்சன்னதியிலும் அருள் புரிகின்றனர். சிவனுக்கு தனிச்சன்னதி இல்லையென்றாலும், தினமும் சிவனுக்கும் பூஜை செய்யப்படுகிறது. மேடையின் கீழே உள்ள இடத்தில் நவகிரகங்கள் அருள்பாலிக்கின்றனர்.
பூஜைகள் தாந்த்ரீக முறைப்படி செய்யப்படுகின்றன. ஒவ்வொரு மலையாள மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையன்றும் சம்பூர்ண நாராயணீயம் பாராயணம் செய்யப்படுகிறது. மண்டல பூஜை வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
Leave a Reply